தமிழ்த்தாய் வணக்கம்!
தமிழே…தாயே…!
குறிஞ்சி, முல்லை
மருதம், நெய்தலில் பூத்த
இலக்கிய மலர்களைச் சூடியவளே!
இரட்டைக் காப்பியங்களைத்
தன்னகத்தே கொண்டவளே
பக்தி இலக்கியத்தை
நெற்றியில் திலகமிட்டவளே!
மின்னலில் கோர்த்த
விண்மீன்களைப் போன்ற
இலக்கண முத்துகளைக்
கொண்டவளே!
யாழின் ஓசையினைப் போன்ற
இனிமையினைக் கொண்டவளே
ஆலினைப் போன்ற
விழுதுகளைக் கொண்டவளே!
பகலவனைப் போன்ற
ஒளியினைக் கொண்டவளே
வெண்நிலவைப் போன்ற
குளுமையினைக் கொண்டவளே!
விசும்பினைப் போன்ற
பரப்பினைக் கொண்டவளே
வீசும் தென்றலைப் போன்ற
அன்பினைக் கொண்டவளே!
ஆழிசூழ் உலகை
மகுடமாய் சூடியவளே
பலாச்சுளைப் போன்ற
பிள்ளைகளைப் பெற்றவளே!
என் அன்னையே
தாயே, தமிழே!
உனைச் சிரம்
தாழ்த்தி வணங்குகிறேன்!
உனைப் போன்று
என்னையும் இவ்வுலகில்
நிலைபெற்று வாழ
வாழ்த்துவாயாக!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.