இவையெல்லாம்...?
வெண்ணிலா
உலா வந்த
அழகான வானம்!
நெல் மணிகளை
அறுவடையாகத் தந்த
நன்செய் நிலம்!
நிலத்தை வளமாக்கிக்
கடலில் கலந்த
வற்றாத ஆறுகள்!
தங்கத்தை
வாரி வாரி வழங்கிய
சுரங்கங்கள்!
மழை நீரைச்
சேமித்து வைத்த
மணல் மேடுகள்!
பருவம் தவறாமல்
மழைப் பொழிந்த
பசுமைக் காடுகள்!
துள்ளிக் குதித்து
நீந்தித் திரிந்த
ஏரி மீன்கள்!
கூடு கட்டி
ஆடிப் பாடிய
பறவைகள்!
வனத்தைக்
காவல் காத்த
விலங்குகள்!
வெண்குடை
கொண்டு
ஆட்சி செய்த
வேந்தர்கள் !
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல் !
இவற்றில் - இப்போது
எதுவும் எம்மிடம்
இல்லை!
இவற்றையெல்லாம்
பறிக் கொடுத்தது
பாரி மகள்கள்
மட்டுமல்ல !
நாமும்தான்-இங்குப்
பாலைநில வெயிலில்
நிர்க்கதியாய்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.