மாநகரக் கூடைகள்
சொமேட்டோ, சுவிக்கி
செயலிகள் மூலமாக
வாங்கிய உணவுப்
பொட்டலக் காகிதங்கள்
மாநகர வீடுகளின்
குப்பைக் கூடைகளில்!
அவ்வப்பொழுது
காகங்களும் குரங்குகளும்
எலிகளும் பூனைகளும்
குப்பைக் கூடைகளைத்
தேடிப் போகும்!
காகங்கள்
ஒன்றிரண்டு
எலும்புத் துண்டுகள்
கிடைத்த மகிழ்ச்சியில்
உறவுகளை அழைத்து
உண்ணும்!
குரங்குகள்
ஏமாற்றத்தோடு
எட்டிப் பார்த்தபடி
முறைக்கும் பிறகு
குப்பைக் கூடையை
இழுத்துத் தள்ளிவிட்டு
ஓடிவிடும் !
எலிகள்
இரவு நேரங்களில்
சத்தமின்றி வந்து
தன் பங்கிற்குக்
குப்பைக் கூடையை
உருட்டிவிட்டு செல்லும்!
பூனைகள்
மிச்சம் மீதி எதுவுமில்லா
குப்பைக் கூடைகளைக்
கலைத்துப் பார்த்துவிட்டு
மனமெங்கும் குப்பைகளே
நிறைந்துள்ளனவென்று
நினைத்துக் கொண்டு
பசியோடு செல்லும்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.