மொழி

உணர்வு ஊற்றின் உருவம்.
உயிர்க்கும் சிந்தனையின் உருவம்.
புரிதலைப் பகிரும் சாதனம்.
புரிந்துணர்வின் ஆழி, மொழி.
சைகைமொழிக் கொரு உயிர்
ஊமைமொழிக் கொரு உருவமாய்
கைப்பிடியாகும் மொழி, சமூக
விழியாக மனிதனுக்கு மொழி.
வேற்று உயிரினங்களில் மனிதனை
வேறுபடுத்தும் உன்னதம் மொழி.
வேற்றுக் கிரகங்களில் காலூன்றிய
வெற்றியின் ஆதாரம் மொழி.
கற்காலம் முதல் கணனி வரை
ஏற்றமுடை வளர்ச்சியின் வரை.
அற்புத நாகரீக உச்சாணியின்
ஊற்று, அச்சாணி மொழி.
பரம்பரைக்குத் தகவல், வாழ்வு
பழக்க வழக்கங்கள் பரிமாற,
குழுநிலை மக்களிணைய ஆதியில்
பேச்சுவழக்கு உறவு வளர்த்தது
படியேறியது வந்த வடிவத்தில் எழுத்துரு.
வாசிக்க கல்வெட்டு, ஓலைச்சுவடிகளாக
வரலாறு சந்ததிகளுக்கு பகிரப்பட்டது.
மக்களொரு கூட்டத்து வாழ்வு – அதை
நோக்கும் விதம், உணர்வு,
பார்க்குமதன் சிந்தனை, கொண்டாடுதல்
மக்கள் பண்பாடாகிறது. – இவை
பழக்க வழக்கம், உறவுமுறை
விழாக்கள், கலைகளாக வெளியாகி
குழுவின் அடையாளம், இருப்புமாகிறது.
எழுத்தில் பதிவாகி பகிரப்படுகிறது.
குழுவின் பண்பாட்டு முகத்திற்கு
மொழி விழியாகப் பதிந்துள்ளது.
குழுவின் பண்பாட்டை சந்ததிக்கும்
உலகிற்கும் வரலாறாக்குவது மொழி.
மொழி, குழு, பண்பாடொரு
முழுச் சங்கிலியாவதால் மொழி
தகவல் சாதனம் மட்டுமல்ல.
தனியின மொழி பண்பாடுமாகிறது.
மொழி – பண்பாடு பிரிக்கவியலாதது.
வழியின்றிப் பிரிந்தால் அவைகளின்
தனித்துவ பெறுமதியை அறிதலரிது.
தமிழ் பண்பாடு வளர்க்க
தமிழ் பண்பாடு அறிய
தமிழே ஆரம்பம், அடிப்படை.
தமிழெனும் விழியால் உலகைப் பார்த்து
தடம் பதிக்க தமிழ் பேச வேண்டும்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.