பழுத்த இலையின் விளிம்பில்...
மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்;
உடை கூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்;
பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்;
காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்து வைக்கும்;
வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை யெண்ணி -
பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்;
காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.