பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு...

ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும்
ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே குப்பையில்
கொட்டப் படுகிறது தினமும்
பழைய சாதம்!!
--------
மணக்க மணக்க
உண்டுமுடிக்கும் முன்
ஒரு கை சோறு ஒதுக்கி
பிறருக்கும் தர இயலுமெனில்
ஒரு உயிரேனும்
உயிர் பிழைக்கும்!!
--------
டீ குடித்து
பன் தின்று வாழ்பவர்களுக்கு
சாபம் பணத்திலா
உழைப்பிலா
பதிலேயில்லை பல காலமாய்
--------
காக்கை குருவி கூட
எதையோ தின்று விடுகிறது
மனிதன் எதையோ தின்பதிலும்
தின்னாமையிலும் -
இறக்கிறான் இறக்கிறான் இறக்கிறான்
பசி மட்டுமே
பெரிதாகப் பேசப்படுகிறது.
--------
உப்பு
காரம்
புளிப்பு
சுவையெல்லாம் வேண்டாம்
ஒரு உண்டை சோறிடு
மண்ணேனுமிடு -
உயிர்' பசியால் போதல் தீது.
--------
மரம் நட்டான்
மலை குடைந்தான்
வானம் பொறாமைப் பட
வீடும் கோவிலும் கட்டினான்
விமானம் செய்தான்
வான் வழியே மேகம் கிழித்து
விண்முட்டி நின்றான்;
இத்தனை -
உயரச் சென்ற மனிதன்
திரும்பிப் பார்க்காதலில் -
கீழே விழுந்துகிடக்கிறது சில பிணங்கள் -
பசியால் இன்றும்!!
--------
சட்டைப் பை
சூட்கேஸ்
வீட்டு அலமாரி
வங்கி கணக்கு
வேறு எங்கெல்லாம்
சேமித்து வைத்திருப்பீர்களோ' பணத்தை
அங்கெல்லாம் -
நன்றாக சற்றுக் கிளறிப் பாருங்கள் -
ஒரு எளியவன்
திருட எண்ணிய கணமும்
திருடவைத்த பசியும்,
அவன் உழைக்க மறுத்த கணமும்
உழைக்கக் கிடைக்காச் சூழலும்
அங்கே மரணமாய்
முனுமுனுத்துக் கிடக்கலாம்.
--------
வீரம்
வீம்பு
வியாக்யானம்,
மானம்
மரியாதை
மனசாட்சி,
அண்ணன்தம்பி
அக்காத் தங்கை
அம்மாப் பிள்ளை'
அத்தனையையும் மறக்கடிக்கும் பசியென்று
பசியில் மட்டுமேப் புரியும்...
--------
முடிந்தால்
இரண்டோ மூன்றோ நாள்
பட்டினியிருந்து பாருங்கள்
பசியில் இறப்பவரின் வலியை
ஒரு முறையேனும் -
உண்டுத் தீருங்கள்.
மறுநாள் கிடைக்கும் உணவில்
பசிக்கும் எவரோ ஒருவரின் முகம்
கனவு போலேனும் தெரியும்; காணுங்கள்!!
--------
குப்பைத் தொட்டி
திருமண மாளிகையின் வாசல்
அல்லது பின்புறம்,
விழாநாளில் மிச்சப்படும் உபரி,
உணவகங்களில் -
நிறைய ஆர்டர் செய்துவிட்டு
பாதியில் எழுந்துப் போகும் நாகரிகம்'
எப்படியறியும் - எங்கோ ஓருயிர்
பசியால் செத்து நம்மை
கொலைக் காரனாக்குவதை.
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.