நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்...

அடியே என்னவளே
மனசெல்லாம் நிறைந்து நின்னவளே,
திரும்பிப் பார்த்து பார்த்தே
இதயம் கொண்டுப் போனவளே...
நீ போன இடத்திலிருந்து
ஒரு புயலே மனசில் அடிச்சிதடி
நீ சிரிச்ச சிரிப்புலத் தான்
உசிரே உன்னில் கெறங்குதடி;
பார்த்த பார்வையில் மான் துள்ள
ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி
மூடாத கடலைப் போல மனசு
உன் நினைப்பிலேயே நிரைஞ்சிச்சேடி;
நீ போட்ட சொக்குப் பொடிப் பார்வையின்
சிரிப்போடு சிறுகுழியுமழகு அழகேடி
நீ காட்டுச்செடி பூப் பூத்த
மதுமயக்கத்தை விட உச்சமடி;
மன்மதனோ மதிமயக்கும் எவனோ
எப்படியோ உனை செய்துட்டாண்டி,
உன் ஒரு பார்வைக்கே என் விழிகள் பூத்து
வரம் கேட்டுக்கேட்டு வலியாய் - வலித்தேப்போனதடி;
நீ போகையில் கொண்டுப் போன என் உசிரது
நீ பார்க்கும் பாரவையிலிப்போ தஞ்சமடி,
நானிப்படி உருகி உருகிப் போகும் முன்னே - என்
உசிரப் பிச்சித் திண்ணாம கொஞ்சம் நீ திரும்பி வாடி;
பொட்டு வைத்தஉன் அழகுமுகம்
ரசிக்க ரசிக்க மின்னும்வான மின்னலோடி
அந்த நெற்றி சுற்றும் முடியழகில்
என்னை எப்படியோ முழுசா முடிஞ்சியேடி;
மூச்சுக் காற்றின் வெப்பமதில் நீ
கடந்துப் போன உன் வாசம்' நிறைய மிச்சமடி
உன் மீண்டும் பார்க்குமொரு பார்வைக்கு என்
ஒன்றோ இரண்டோ பிறப்பு' அத்தனைப் பெரிதொன்றுமில்லையடி;
நீ வராவிட்டாலுன் கனவில் வந்துப் பூப்பேன் பார்ப்பேன்
ஒரு பார்வையெனை பார்த்துக் கொள்ளடி
நாளை சேர்ந்து நாம் பேசிக் கொள்கையில்
இந்த ஒன்றோ இரண்டோ வரியில்' கொஞ்சம் நீ சிரித்துக் கொள்ளடி;
ஆஹா சிரிப்போ சிரிப்போ சிரிப்பு
நீ சிரிச்சா இந்த சீவனுக்குள் ஜென்மமேழும் செத்துமடியுமடி,
அந்த சிரித்தஉன் உதட்டோரம் என் மிச்சவாழ்க்கையை
மீண்டுமொரு சிரிப்பிற்கே சேமித்து வைப்பேனடி!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.