அ...ஆ....சொல்லும் அழகில்...

மரமெல்லாம் பூப்பூக்கும்
பூவோடு இலைக் கணியாகும்
கணியோடு’ தின்று நிற்க நிழலாகும்
நிழலுக்குப் பின் விறகாகும்;
விறகெல்லாம் நெருப்பாகும்
நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும்
விளக்கில் வெளிச்சம் பூக்கும்
வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்;
மனசெல்லாம் ஆசை நிறையும்
ஆசையில் அன்பு மலரும்
அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின்
தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்;
செடியாகி மழலை மரமாகி
ஆளான பின்னாலே நம் பெயராகி
பெயரின் உச்சத்தில் முடிநரைக்க – மீண்டும்
பெற்றோராய் மடிதாங்கும் பிள்ளைகளே நம் வரமாகும்;
மேகம் இடித்து மழையாகும்
மழை வேரில் நீராகி உடம்பில் உயிராகி
காலம் உயிரைத் தாங்க’ மூச்சு நிற்காதப் -
பொழுதுகளில் குழந்தைகளே உலகமாகும்;
உலகின் சிறப்பொன்றில் வானமது மூடும்,
திறக்கும், திறக்கையில் சூரியன் வெப்பத்தால் சிரிக்கும்
பின் மூடும் அந்திப் பொழுதில் -
கைமேல் நிலவாய் குழந்தைத் தூங்கும்;
வளர்ந்து காதின் மடல் தொட்டு நிற்கும்
கைகனக்க புத்தகம் சுமக்கும், வாழ்க்கை
கனத்தக் கண்ணீரில் தேக்கி நம் மனசைத் தாங்கும்
வானமும் பூமியுமாய் நம்மையே நினைக்கும் குழந்தை;
காற்றும் மொழியும் குளிரும் வெப்பமும்
நல்லதும் கெட்டதும் சரியும் தவறும்
தந்தை வலியும் தாயின் உழைப்பும்
ஒற்றைச் சொல்லால் நிறையும் – அந்த சொல்லுக்கு
உயிரென்றும் குழந்தையென்றும்
இருபெயராகும் –
அதைப் பெற்ற வயிறொன்றும் சுமந்தத் தோளொன்றுமே
அநிச்சையாய் யறியும்;
அறிய மறுக்கும் பொழுதுகளில்
விடுபடுகின்றன வாழ்க்கையும்; வீட்டின் வெளிச்சமும்!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.