வாழ்வதிலே கவிதை செய்வோம்!

வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்!!
கொஞ்சம் தூக்கமும்
கொஞ்சம் கவலையும்
கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும்
கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும்
மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம்!
பழைய நினைவும்
புதிய பதிவும்
படித்த பாடமும் படிக்காத வரலாறும்
புரிந்த வாழ்வும்
புரியாத உணர்வுகளும்
கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்!
பட்ட வலியும்
கண்படாத இடமும்
கதறிய சப்தமும்
தட்டிக் கேட்காத நியாயமும்
கேட்ட கதைகளும்
அதிலிருந்துக் கற்றிடாத மாண்பும்
இன்னும் மிச்சமிருக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்!
மீளாத் துயரும்
மிரண்டுவிட்ட பயமும்
போராடா குணமும்
பிழையை பொறுத்துக் கொள்ளும் தவறும்
மன்னிக்கா மனசும்
மனிதரில் பாரபட்சமும்
இன்னுமிருக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்!
அடிக்க அடிக்கத் தாங்கி
அண்ணா என்றால் மயங்கி
விரட்ட விரட்ட ஓடி
கொடுக்காவிட்டால் வருந்தி
அஹிம்சை அஹிம்சை என்று அஞ்சி
அதற்கும் எட்டா நீதியை –
எட்டிப் பறிக்க முயன்றால் – அந்தோ பழி
எம் இனத்தின் மீதே வீழ்ந்த கதை
அம்மணமாய்த் தெரிகிறதே; வாருங்கள் கவிதை செய்வோம்!
அழகு அழகு மலர்
நெருப்பில் எறிந்த கணம்,
அழுது அழுது பிஞ்சு
வெடித்து சிதறியக் காட்சி,
அறிவுப் புகட்டும் ஆன்றோர்
அடித்து கொன்று மதத்தில் வீழ'
ரத்த ஆறு ஓடி பல உயிர்களை மூழ்கடித்த
செய்திகள் ஏராளமுண்டு; வாருங்கள் கவிதை செய்வோம்!
இதழ் விரியுமழகு
குஞ்சுக்கு இறக்கை முளைத்து
பறக்க விரித்த முயற்சி,
மழைநின்ற போதில் பரவும்
மண்ணின் வாசனைப் புரட்சி,
காலிழந்த சிறுவன்
கண்ணிழந்தப் பெரியவரைத் தெருகடத்தும் மனப்பான்மை,
அழும் மாற்றான் பிள்ளைக்கு
அணைத்துப் பால் தரும் தாய்மை’ இப்படி
முற்றும் மடியா மனிதம்
இன்னும் மிச்சமுண்டு; வாருங்கள் கவிதை செய்வோம்!
அழகும் அறிவும் வலிதும்
பெரிதுமாய்,
அறியும் அறியாத் தருனம்
வாழ்க்கையாய் –
பார்க்கப் பார்க்கப் புதியதென மிஞ்சும்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாய் நகரும்
நொடிகள் கூடக் கவிதையாகும்; வாருங்கள் கவிதை செய்வோம்!
வாழ்வதிலே கவிதை செய்வோம்!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.