பெண்களைத் தேடும் கண்கள்

கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன
காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில்
விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில்
கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்;
பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா
அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ
அந்த வெறும் தசையும் வளைவுகளும்
உரிமையில்லாப் பார்வையும்;
மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை
கசக்கியெறிந்துவிட்டு – ரசிக்கப் புதுப்புது
பெண்களைத் தேடும் ஆணுக்கு’ எப்படிச் சொல்வேன்
அதைக் கடந்து வா, உலகமுன் கையிலென்று;
வலிக்க வலிக்க இரவுகள் – உதிரும் குழலென
தனிமையின் விரகத்தில் தகித்துத் தகித்து விழ,
எண்ணிப் பார்க்குமந்த – கடந்த வயதுகளில்
வாழ்க்கை வெறுத்து வெறுத்தேப் போனது வதைதான்;
கடல்சில தாண்டி – பருவம்
மூழ்க மூழ்க உழைத்து
நரைக்கும் முடிகளில் - ஆசை
வெம்பிக் கிடப்பதுக் கொடுமைதான்;
கற்கள் இறுகியப் பாறைகளுடைத்து – ஒருதுளி
ஈரம் தேடும் அந்நியப் பறவைக்கு
ஆங்காங்கே ஓடும் நதியது – பார்க்க
தாகமொழிக்கும் தண்ணீர்தான்;
கடக்கும் பெண்களின் இனிக்கும் பார்வையது
இருண்டோரா’ உன்னோடும் என்னோடும் நடக்கின்றார்?
இரத்த உறவென்று அவரை உணர்வதில் விரிகிறது
தோழமைக்கான சிறகுமென்பதை’ வெப்பந்தனிந்த பார்வையே யறியும்;
எதார்த்தமாய் யாரோ எட்டிப்பார்க்கும் ஒரு நோக்கில்
ஏதோ ஒரு ஜீவன்’ ஒட்டியிருப்பதென்பது வேறு,
உடல்மொழியெனும் அசைவை – ஒவ்வாதப் பலவாறு
தவறாகக் கற்று’ காற்றில் காற்றோடு மனது கலைந்துப்போவது வேறு;
சரிப் போகட்டுமென்று விடுவோம்;
இனியேனும்,
நடக்கும் நடையில் புரியும் குருட்டுப் புலம்பல்களை
ஏதேனுமொரு லட்சியக்குழிக்குள் போட்டுப் புதைத்துவிடு;
மனதின் அழுக்கை அண்ணாயெனும் வார்த்தைகளில்
நிரப்பி அலசியெடு, பிடித்த பெண்டிருக்கு இருக்கும் மனதின்
நீளம் ஆழம் கிடைத்தளவுப் படித்துவிடு, அவர்
பார்க்கும் பார்வையில் நீ இத்தனைச் சரியென்றுக் காட்டிக்கொடு;
பின் நிமிர்ந்து எழுந்து நீ நடக்கும் நேர்மை
நடையின் மிடுக்கில் – நிற்பர் பலர்
அம்மா அக்காத் தங்கையோடு ஒரு
காதலியும்; உனக்கான மனைவியும்; அன்று
உலகை ஒரு சின்ன மனசுக்குள்
உனக்காய் சுமந்து இரு!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.