மழையே...மழையே...!

மண் தின்ற மழையே..
மழையே! மழையே!
எம் மண்தின்ற மழையே...
உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே...
என்செய்தோம் யாம்.
வயிரருத்துப் போட்டதுபோல் எம்
மண்ணறுந்துப் போனது பலகாலம்
மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்
பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;
மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல
எதை சேர்த்துவைக்க எம் மழையே ?
ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது உழைப்பவர்கள்
மறுநாளை பற்றி மறுநாளே நினைப்பவர்கள்
காலில் அடிபட்டால்கூட – பட்டபோது மருந்திட்டு
அடுத்தநாள் வலியோடு வாழ்வு ரத்தமாய் கசிந்தாலும்
துடைத்தெறிந்துவிட்டு தொழில்பார்க்க போய்த் தீரும்
சாபம் பெற்ற பாவப் பிறவிகள்;
பட்டவலி போதாமல், அவன்
இட்ட கடன் தீராமல், விதியென்ற ஒரு
இல்லாத கிணற்றுக்குள் சாகும்வரை மூழ்கப் பட்டவர்கள்
மூழ்காத குறையொழிக்க நீயும் வந்தாய் எம் மழையே;
ஒருநாள் இருநாள் பட்டினி நெருப்பில் புசுங்கினோம்
இடையே அடிக்கும் குளிரில் நோயுற்றுப் போனோம்
சோறில்லா வயிற்றுக்கு மருந்தெங்குப் போட
மலைத்துப் போய் மழையோடு மண்ணாகவேப் போகிறோம் மழையே;
ஒழுகிய இடத்திலெல்லாம் பாத்திரம் வைத்தோம்
வைக்க பொருளில்லாத யிடத்தில் – கண்ணீர் பூசினோம்
மீறியும் உள்புகும் மழையை உயிர்விட்டுத் தடுக்கிறோம்
ஒருசொல் கேளாது எங்கள் வீடுடைத்துப் போனாயே மழையே;
உன்னைப் போய் பலர் கடவுள் என்கிறார்
உன்னைப் போய் பலர் கவிதை என்கிறார்
உன்னால்தான் எல்லாமே என்கின்றார் – ஆம்
உன்னால்தான், உன்னால்தான் எல்லாம்; எங்களின் வாழ்வும்
எங்களின் மரணமும் உன்னால்தான் எம் மழையே;
ஒரு குறிப்பொன்றுக் காண் -
பெய்யாமல் இருந்துவிட்டு பூமி வெடித்தப்பின்
அடைமழையெனப் பெய்து
வெள்ளமெனப் புகுந்து –
வீடழிக்கும் நாட்களின் குறிப்பில் இதையும் எழுதிக் கொள்
நீ வளர்த்த பயிர் நீ; வளர்த்தப் பிள்ளைகளெல்லாம்
நாங்கள் விட்டுப்போகும் உயிர்களின் மிச்சத்தில்
அனாதையாய் கிடக்கும் அடுத்தமுறை வருகையில் அதையும் வாரிச் செல்...
மாடிவீட்டுக் கனவுகளுக்கு நீ விருந்தாளியாய் இருந்துப் போ
ஆடிப்பாடி விளையாட நீ கொண்டாட்டமாய் இருந்துப் போ
ஓலைவீட்டு விவசாயிக்கு நீ வரம் தரும் கடவுளாய் இருந்துப் போ
உயிர் அறும் பொழுதுகளில் வந்து; யெம் மண்தின்றும் போ நீ மழையே!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.