ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும்

ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும்
அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்;
வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும்
தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்;
பாசமற உள்ளம் சேரும்
பாட்டில் பாடம் தேடும்
காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று
தலைமேல் வாழும்;
யாரும் பாடும் ராகம்
எங்கும் ஒளிரும் தீபம்
வாழ்வின் நகரும் தருணம்
நாளை தமிழில் வரலாறாகும்;
பேசும் உலகம் பேசும்
மறந்து மறைந்துப் பேசும்
கூசும் நாக்கை அறுக்கா
துணிவில் தலையை ஆட்டும்;
துடைத்த இனத்தின் மீதம்
துளியேனும் நிலைக்க எழுவோம்
துடித்து அழுத வலியை இனி
திருப்பித் திருப்பித் தருவோம்;
தடுக்க இயலா வேகம் – தமிழர்
மரபிலிருக்கு அறிவோம்;
திரட்டி திரட்டி சேர்த்து – நம்
ஒற்றுமை பலத்தை உணர்வோம்;
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த
கைகளை மூடு இனமே,
கத்தி, கதறி, கெஞ்சும் -
குணத்தை விட்டொழி இனமே,
கண்கள் பதியும் திசையில்
காற்றாய் பரவு இனமே,
கலங்கும் விழியின் ஓரம்
கண்ணீர் சுடட்டும் இனமே;
விட்ட ரத்த நெடியின்
முழு வீரம் கொள்ளு இனமே
உயிரின் ஈரம் தொட்டு
வாழும் திணவைக் காட்டு இனமே;
ஒண்டி ஓடி அஞ்சும்
பயத்தை விட்டொழி இனமே
ஒட்டுமொத்தப் பேரும் எங்கும்
ஒன்றாய் நில்லு இனமே;
காவியமெல்லாம் வேண்டாம்
ஒருபிடி மண்ணெடு போதுமினமே’
அந்த மண்ணிலேனும் நாளை
உன் உரிமைக் கொள் இனமே!!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.