தனித்துவ ஆண்டாய் மலர்க!

நேற்றையதிலும் திறமாய் மலர்க!
ஓவ்வொரு ஆண்டும் தனித்துவ ஆண்டாய்
இவ் வருடமும் புது எண்ணிக்கையாய்
இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு
மிரண்டிட வைக்குமோ! வரண்டிடா வளம்
திரண்டு இன்பம் தர வருமோ!
அணிகலன்களால் நாடு அலங்கரிப்பு!
பனியில்லாத மார்கழிக் குளிர் இருளில்
இனியில்லாத வேகமாய் மலர்கிறது ஆண்டு.
அதிகார வர்க்கத்து ஆக்கிரமிப்பு நெஞ்சம்
நதியோர மண்ணாகக் கரைய வருக!
சதிசெய்து உயிர்களை விதியென்று பறிக்கும்
அதிமேதாவித்தன ஆயுதக் குவியலை
பொதியாக்கித் தீயிட மதியாக வருக!
அதியுன்னத அன்பை இதிகாசமாக்க வருக!
அமைதி மருவுக! புத்துயர்வு தருக!
அமைவாய், இனியதாய், வசந்தமாய் வருக!
பிறர் மனக் கிளையை எட்டி
பலாத்காரக் கவட்டையால் கொழுவி இழுத்து
பிசாசாக உலுக்கிக் காரியப் பழம்
பிடுங்கும் நிலை மாற வேண்டும்.
தன்னிச்சையான மனிதக் கொள்கையை உலகில்
தங்கு தடையின்றி நிலை நாட்ட
தரமான புது உலகம் வரவேண்டும்!
வரமாகப் புத்தாண்டு மலர வேண்டும்!
மனிதநேயக் காவலன் மனிதன்! அதைப்
புனிதம் கெடாது காத்திடட்டும் வருக!
வேரான தமிழ்க் கொல்லை புலத்திலும்
சீராக செழித்திடும் வகையாக்க வருக!
நேராகச் செல்லும் கூரான மதியும்
ஏராக எமுதுகோலும் அமைக்க வருக!
காற்றை மீறி வாழும் தீபமாய்
நேற்றையதிலும் திறமாய் ஆற்றிடு சாதனை!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.