காற்றே!….காற்றே!
வேய்ங்குழலூடாக இசையாய்
பாய்ந்திடும் காற்றே நீ
ஓய்ந்திட்டால் உலகில்லையே!
ஓசை, சுகந்தம் காற்றால்.
ஆசை, நாசி, செவியால்,
ஆச்சரியம் அப்பாலும் வாயுவால்.
பஞ்சபூதத்தில் காற்று
மஞ்சு கலைத்து மழையாக்கும்
அஞ்சும் கருத்து – பிசாசு.
நிலை புரட்டும் நிகரற்றாய்.
அலைக்கு விலங்காகிறாய்.
அலைக்கு விடுதலையுமிடுவாய்.
ஆற்றங்கரைக் காற்றே!
ஊற்றாகிறாய் அழகுக் கவிதைக்கு.
ஆற்றலற்றாயே நிலாவில் நீ!
ஊடகக்காற்றில் அளவோடு
ஊடாடி வாழ்வையென்றும்
ஆடகமாக்கல் ஆரோக்கியம்.
ஓங்கிடும் வன்முறைக்காற்றால்
வீங்கிடும் தமிழர் வேதனை
நீங்கிட வீசட்டும் சமாதானக்காற்று.
- வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.