கனவு கொஞ்சமும் இல்லை!

அது ஒரு சொட்டு சொட்டான மரணம்
வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும்
மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு
சொட்டு சொட்டான மரணம்;
அதிலும் போறாத காலம்
வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில்
பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும்
உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்;
வேறென்ன -
வாழ்க்கையில் முதல் முதாலாய்
வாங்கிய மகிழுந்தில் அதிகம் போன இடம்
பணிமனையென்றால் வலிக்காதா?
ஒரு மிதிவண்டியில்
மணி மாற்றும் கதையல்ல அது; மகிழுந்தில்
ஒரு பொருள் மாற்றுவது,
ஓடும் இதயம் நின்று ‘ஐயோ என துடித்துவிடும் வலியது’ என்று
மகிழுந்திற்கோ -
பணிமனைகளுக்கோ எக்காலும் புரிவதில்லை;
அறுத்து அறுத்து சதையை
பிய்த்துக் கொடுப்பதுபோல்
பணத்தைப் பிடுங்கி பிடுங்கி
அழ வைக்கிறது ‘கடனில் வாங்கிய பழைய வண்டியும்
கட்டி கட்டி ஓய்ந்திடாத வட்டியும்;
உறங்கி விழிக்கையில்
ஒரு பயம் வண்டியைக் குறித்தும் வந்துவிடுவது
நடந்து ஏறி -
பல மலைகளைக் கடப்பதைக் காட்டிலும் வலிது;
திடீரென ஏதோ போய்விட்டது
இத்தனை ஆயிரம் செலவாகுமென்று சொல்லி சொல்லி
ஐந்து பத்து கணக்குப்போல பிடுங்கி
ரத்தம் குடிக்கும்
பணிமனை குறித்த பயத்தில்
திகிலாக அடிக்கடி கனவு கூட வருவதுண்டு
யாரை நம்புவது
நம்ப மறுப்பது என்றே
புரியாதளவு மனிதர்களை – இந்த பணிமனைகளும்
அடையாள படுத்துகின்றன என்பது
தற்காலிகமாக கண்டுநோகும் வலியிலொன்று;
அண்ணாயெனும் வார்த்தைக் கூட அவர்களுக்கு
அடுத்த பணம் சுரண்டலுக்கான ஆயுதமென்றுப் புரியவே
ஒரு மகிழுந்து வீணாகி
இரு மடங்கு செலவாகி – பின்
அரைவிலைக்கு அதை விற்கப் படுதல் கொடுமையில்லையா?
அப்படி எதற்கு இயலாதவனுக்கு
எவரெஸ்டில் ஏறி -
தேனீர் பருக ஆசை? என்று ஒரு கேள்வி
பார்ப்போருக்கு வருவதுண்டு,
இது ஒரு ஆசை அல்ல, கனவு
முட்டி மோதி கட்டும் வீட்டைப் போல
இருபது வருடம் நடந்து நடந்து தேய்ந்த கால்களுக்கு
ஒரு நாளேனும் அமர்ந்துபோகும் ஆயுள் கனவு;
பெரிய மனிதரென்று எண்ணி நம்மைப்
பார்பவர்களுக்கு தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள
ஆசைப்பட்ட அற்ப அறிவின் விளைவு;
வாடகைக் காருக்கு பணம் தந்து தந்தே
பாதி சம்பளம் போனதாய் எண்ணி வருந்தியதில்
தனைமீறி வந்துவிட்ட சோர்வு;
எங்கு மகிழுந்து இல்லையேல்
வேலையில்லை என்று திருப்பி விடுவார்களோ என
பாலைவன வாசலில் நின்று பயந்த மனதிற்கு
‘வாங்கித் தான் பார்ப்போமே’ என்று கொண்டிட்ட
அசாத்திய துணிச்சலின் கனவு அது;
அதற்காக,
கனவெனில் என்ன; பணத்திற்கு உடனே கால் முளைத்துவிடுமா
சக்கரம் உருள உருள தேயும் கால்போல
வட்டி கட்ட கட்ட உயிர் சொட்டிப் போகாதா?
என்ன சொட்டும்?
என்ன சொட்டும்?
வட்டி கட்டி வண்டி வாங்கியது
எத்தனை மடத்தனம்?
ஆம்; மடத்தனம் தான்
மடத்தனம் தானென்று ஒரு ஐந்து மாதத்திற்கு முன்பு
தெரிந்திருக்குமேயானால்
இந்த வட்டிக்கு வாங்கிய பணத்தில்
இந்த வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு வருட வதை
கொஞ்சம் குறைந்திருக்கலாம்;
என்றாலும், அதெல்லாம் அன்று
வாங்கியப் போது புரியவில்லையே
ஏறி அமர்ந்து கண்ணாடி மூடி
குளிர்காற்று முகத்தில் அடிக்க
பாட்டு கேட்ட சந்தோசத்தின் விலை இன்னதென்று அன்று
எண்ணத் தோன்றவில்லையே;
இன்று மட்டுமென்ன
இன்று என்னதான் புரிந்தாலும் கூட
இன்றும் இதை விற்றுத்தொலைக்க முடியவில்லையே,
மகிழுந்தை ஒரு ஓரம் நிறுத்திவிட்டு -
இருக்கையில் சாய்ந்து யோசிக்கிறேன்,
நீந்திக் கடந்துவந்து நடுக்கடலில் நிற்பவரின் பிரம்மிப்பில்
பெருமூச்சொன்றைவிட்டுத் தீர்த்து மீண்டும் புறப்பட எண்ணுகையில் -
இலவசமாகக் கேட்கிறது அந்த இன்னொரு சப்தம்
சப்தத்தோடு ஆடியது வண்டி
யாரோ தூக்கி குலுக்கியது போல குலுங்கியது
இழுத்து இழுத்து ஓடி நின்று ஓடி
இதோ படாரென ஒரு உதை உதைத்து விட்டதுபோல்
காற்றில் சட்டென அணைந்த விளக்குபோல்
வண்டியும் நின்றுபோனது;
இறங்கி ஒரு ஓரம் நிற்கிறேன்
என் மகிழுந்து தனியே அனாந்தரமாக நிற்கிறது
என் பணமெல்லாம் வட்டிமொத்தமும் சேர்ந்து
காற்றில் படபடவென அடித்து ஒவ்வொரு தாளாக
பறப்பதுபோல் ஒரு உணர்வு என் கண்முன் காட்சியாகிறது;
நான் அதிலிருந்து ஒற்றைத் தாளைக் கூட எடுத்துக்கொள்ள
விரும்பாமல் ‘எல்லாம் பறந்து போ.. போ’வென்று சபித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் விர்ரென்று நடக்கிறேன்;
எங்கோ என்றோ நான் எவர் பணத்திலேனும்
சிரித்து மகிழ்ந்திருக்கலாம்
அதற்கு இந்த இழப்பு ஈடாகிப் போயிருக்குமென்று’ எண்ணிக் கொண்டு
தெருவைக் கடந்து நிற்கிறேன்
ஒரு அரசு பேருந்து வருகிறது
சட்டைப் பையில் கைவிட்டுப் பார்க்கிறேன் – பயணச் சீட்டு வாங்க
சில்லறை இருந்தது;
கண்களை அழுந்த மூடிக் கொண்டேன்
உள்ளேயிருந்த இருட்டில் -
மகிழுந்திற்கான கனவு கொஞ்சமும் இல்லை.
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.