பிறக்கட்டும் நாளைய மனிதம்!

மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம்
இன்னும் காய்ந்திடாத மனத்திரையில்
விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது
மரணத்தின் பெயர்தான் கொலையில்லை;
சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில்
சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில்
நடக்கின்றன கொலைகள் -
உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே;
மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம்
தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும்
அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ கண்ணீரோ
போனது போனபடியே நகர்கிறது காலம்;
யாருக்கு யாருண்டு
யாரின் அசைவில் யாருக்கு வலிக்கிறதிங்கே
யாருமில்லா தனியுலகில் எவர்குறித்து யெண்ணியழ -
இத்தனை இத்தனைச் சுயநலமோ?!!!
சோற்றிற்கு சண்டையிட்டு சொத்துக்கு கொலைசெய்து
பாட்டிற்கு கடல்தாண்டி படத்திற்கு வீடு விற்று
வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏழையின் ரத்தமருந்தி
காதலுக்கு வீடுவிட்டு கட்டியவளை தெருவில் நிறுத்தி
ச்சி........... மனிதர்களா நாம்?
மனிதம் நிரம்பிய -
உணர்விற்குத் தக வாழ்க்கையையா வாழ்கிறோம்?
பிறர் நல அக்கறையின்றி பிறப்பவர் யாருமிலர்
பிறர்நல னெண்ணாதார் இறப்பதில் வருத்தமுமில்லை
பிறருக்கு ஈயாதான் இருப்பதில் ஏதுமில
உயிர் அது இழுத்து இழுத்து ஒருவீட்டில் விளக்கெரிய -
வீடு சுற்றியொரு அடர்ந்த இருட்டுப் படருமெனில்
விட்டுத் தொலையதை;
கனக்கும் சுடு காடுதனில் -
துளிர்க்கட்டும் புதிய மனிதம் உனக்கும் எனக்கும் பிறருக்குமாய்...
-வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.