காதலர் தினம் போதாது!
இன்பமான அமுதென
இனிக்கின்ற தேனென
கனியாய்த் தினமென
மனதுள் இனிப்பவனே.
தென்றல் குலவுவதாய்
யன்னல் நிலவாகிறாய்
மழைச் சாரலாய்
மனதுள் நுழைகிறாய்.
புவிமீதில் தமிழாடி
கவியோடு உறவாடி
குவித்திட்டாய் காதலாடி.
கூவியெனை அழைக்காது
தமிழ்சக்திக் காந்தத்தின்
உமிழ்சக்தியாற் கவிழ்ந்தேன்!!
மின்சக்தி அன்பினால்
என்சக்தி ஏற்றினாய்!
நெற்றியில் புரளும்
கற்றை முடிச்சுருளாலும்
முற்றாக என்னையும்
முழுதாகச் சுருட்டியவனே!
உன் கண்ணிலொளிரும்
கிண்ண மதுரசம்
மண்ணில் வாழும்
எண்ணம் எழுதிடும்!
உன்னைச் சரணடைந்தே
நன்று நன்றெனவே
கன்னல் வாழ்வினையே
என்னாளும் பெறுவோமே!
காதலர் தினமொரு நாள்
தோதல்ல! போதாது!…
காதல் நாதமிசைப்போம்
காலமெல்லாம் வா!வா!
-வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.