எண்கள்
பூச்சியத்தில் தொட்ட எண்களின் நீட்டம்
இராச்சியம் ஆளும் வல்லமைக் கூட்டம்,
நீச்சலடிக்கிறது பூகோள வட்டத்தில்.
நேரமெனும் பன்னிரு எண்களின் ஆரம்
தீரமாய் பிரபஞ்சத்தைத் தன் கரத்துள்
தரமாய் அடக்குதல் அதிசயம், அற்புதம்.
வரமெனும் எண், அறிவு, மனிதவாழ்வில்
ஒரு கண்ணென்கிறார் பெருநாவலர் வள்ளுவர்.
நிரவும் வயதுப் பிரமாணமளக்கும் கோல்.
வரவு-செலவு, பிறப்பு-இறப்புத்
தரவு தரும் நிரந்தரப் படிகள்,
வரலாற்று ஆய்வின் மையக் கற்கள்.
விரலாற்றல் நுனியில் எண்களை அழுத்த
விபரமாய் எமது சரித்திரம் எழுத்தில்,
சி.பி.ஆர் இலக்கமென டென்மார்க்கின், மத்திய
ஆட்பதிவு இடாப்பு எண்களெனும் சூத்திரம்.
ஆண்டு, மாதம், நாளெனும் கணக்குப்
பூண்டு, இளமை முதுமை உருவை
எண்கள் எடுத்துக் காட்டும் அட்டவணை.
வாகனவேகம், உடற்பாரம், இதயத்துடிப்பு,
இரத்த அழுத்தம், கொழுப்பு, சீனியளவெனப்
பல சுவடுகள் காட்டும் கண்ணாடி, எண்கள்.
வாழ்வில் முதலாம் எண் நிலையில்
வாழ்தல் பல்லோரின் தணியாத ஆசை.
- வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.