வரையாத கோலங்கள்
நுரைச் சதங்கைகள் குலுங்க
தரையில் விசிறும் திரைக்கோலம்
அரைவட்ட அம்புலி பூரணமாகினால்
நரையிட்ட ஒளவையார் உள்ளே.
தரை தழுவும் தென்றல்,
ஊரைச் செழிப்பாக்கும் அருவியென,
சருகையிடும் இயற்கை வசந்தங்களை
வரைந்தது யார் உலகில்!
சிலந்தி வலையின் செப்பம்,
சிலம்பு ஒலியின் சத்தம்
சிங்காரப் பறவைகள் மொழி,
பொங்கும் பாசம், சத்தியம்,
தரையில் மானுட வாழ்வு,
கரையும் நிமிடங்கள், மனிதன்
உரைக்கும் வார்த்தைகளும் இனிதான
வரையாத கோலங்கள் தானோ!
சுதந்திரம் என்ற சிறப்பு,
தந்திரமான மனிதப் போக்கு,
சந்தர்ப்பவாதம், வாக்குறுதிகள்,
விதைக்குள் உறங்கும் தருவென்பவை
வரைந்திட்ட கோலங்களாகுமோ!
உரை நடை வரைகின்ற உயிராம்
நுரைக்கும் செந்தமிழ் மட்டும்
வரையாத கோலமாகக் கூடாது.
- வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.