பாழடைந்த கிணறு

கதிரவன் ஒளியில்
மின்னிடும் ஓடைகள்
ஓடிடும் மண்ணில்
பிறந்தவன் நான்!
கண்களைக் கவரும்
கழனிகள் விளைந்திடும்
செழித்த மண்ணில்
பிறந்தவன் நான்!
பஞ்சாயத்துக் கிணறு
என்னும் நாமம்
சூடியவனாய்
பிறந்தவன் நான்!
ஊராரின் வயிற்றுக்கு
படியளக்கும் கடவுள்
பண்ணையார் கைகளால்
பிறந்தவன் நான்!
மாந்தரின் தாகம்
தீர்த்திடும் பணியை
வரமாய் பெற்று
பிறந்தவன் நான்!
கன்னியர் கூட்டம்
சிரித்து மகிழ்ந்திடும்
அரட்டை அரங்கமாய்
பிறந்தவன் நான்!
உழவனின் வியர்வை
முத்தாய் சிந்திடும்
புனித பூமியில்
பிறந்தவன் நான்!
எழிலாடும் ஊரை
கடந்திடும் பயணிகள்
தாகம் தீர்த்திட
பிறந்தவன் நான்!
நல்லவர் வல்லவர்
பாதம் பட்ட
பொன்னான மண்ணில்
பிறந்தவன் நான்!
திருட்டில் மன்னன்
பெயர் பெற்ற பொன்னன்
ஜீவிக்கும் மண்ணில்
பிறந்தவன் நான்!
கொடுமைக்கு அஞ்சா
ஊர்தனக்காரன்
கோலோட்சும் மண்ணில்
பிறந்தவன் நான்!
“ஓர் நாள் அன்று
மாந்தரின் கடவுள்
பண்ணையார்
இறந்திட்ட வேளை,
நல்லாவிகள் இன்றி
மாபாவிகள் உலாவிடும்
மண்ணில் முழங்கிட்ட
வானம் சட்டென்று நிற்க,
மழையைக் கண்ட
மயிலைப் போன்று
மகிழ்ந்திட்ட நான்
சட்டென்று ஓய,
நீரின்றி, மழையின்றி
திண்டாடிடும் காலம்
அரக்கனாய் தோன்றி
மக்களைப் பிடித்திட,
வறட்சி தேவனின்
பார்வை பட்டதால்
பிறந்திட்ட நான்
இறந்திட்ட நானானேன்…
நல்லவர் மண்ணில்
பிறந்தவன் நான்
கெட்டவராலே
இறந்தவனானேன்…
நல்லவராலே
செழிக்கும் பூமி
பாவிகளாலே
அழிந்திடும் பூமியாம்…
நல்லாவிகள் வாழ
மாபாவிகள் ஒழிந்தால்
என்றும் செழித்திடும்
தாய் மண்ணெங்கும்….
- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.