கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!

நாங்கள் பிடித்த மண்வெட்டியும்
மண்கூடையும்
சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை,
சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன;
சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட
வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த
அப்பாவின் சாராயமும் -
அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது;
பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்
கருகித் தான் போனது;
ஏங்கிய மனசும், எட்டிநின்று பார்த்த
ஆசைப் பார்வையும் ஈரமே காயவில்லை; ஈரத்தின்
சதுப்பிலும், ஏறி அடுக்கிய செங்கற்களின் இடுக்கிலும்
வாழ்க்கை வெறுமனே புதைவது வலித்தது;
படித்து வராத அறிவும், பகுத்தறியக் கல்லா
கல்வியும் வெறும் தார்சாலையில் தீர்வது தீரட்டும்,
நாளை மரணித்துப் படுக்கும் பாடைக்கு, பார்ப்பவர்
'மண்வெட்டியின் பிணமென்று' பெயர்வைப்பர் வைக்கட்டும்;
தெருவோர தூளியின் ஓட்டையில் வரும் காற்றும்
எங்கோ தூர இடைவெளியில் கேட்கும் பிள்ளைகளின்
படிக்கும் சப்தமும், அம்மா சேலையின் வாசமும், அப்பா
என்றோ வங்கித்தரும் புதிய சட்டையின் பூரிப்பும் போதும் போதும்;
பெரிய படிப்பு படித்து காதில் ஸ்டெதாஸ்கோப் மாட்ட
திடீரெனக் கனவெல்லாம் பூக்கவில்லை, அந்த புதிய புத்தகத்தின்
வாசம் நுகர அன்றிலிருந்தே ஒரு ஆசை, ஆயுதம் பிடித்த கையுதறி
யாரேனும் புத்தகத்தைத் திணித்தால்; கெட்டியாகப் பிடித்துநடக்க ஆசை;
ஆசையென்ன ஆசை
அது தெருவோர சல்லியுடனோ
தீப்பெட்டியின் குச்சிகளோடோ
ஊதுபத்தியின் வாசத்திலோ கலந்து மணக்கும் மணக்கட்டும்;
நாங்கள் படித்தாலென்ன
எங்களின் கிழிந்த கால்சட்டைகள் ஒட்டித்
தைக்காவிட்டால்தானென்ன - உங்கள் மனது லேசாகும்
வேண்டுமெனில் ஒரு உச்சுக் கொட்டிவிட்டு கடந்துப் போங்கள்;
எங்களுக்கான வாழ்க்கை எப்பொழுதும் போல்
மண்வெட்டியிலும் மண் கூடையிலும்
படிக்கக் கிடைக்காத பாடங்களாகவே நிறையும்
அல்லது உங்கள் தீபாவளியில் பட்டாசாய் நன்கு வெடிக்கும்;
காலத்திற்கும் ஒரு குறையாய் எங்களுக்குள் மட்டும்
இது வலிக்கும் வலிக்கட்டுமே; எங்களுக்கு வலித்தாலென்ன - நீங்கள் போய்
அந்த உழைப்பாளர் சிலையில் ஒன்றிற்கு கால்சட்டையும்
இன்னொன்றிற்கு குட்டைப் பாவாடையும் மாட்டிவிடுங்கள்,
அல்லது யாரேனும் சிபாரிசு செய்து - அந்த
உழைப்பாளி சிலைக்கருகே யிரண்டு
சிறுவர் சிலைகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்;
நாங்கள் படிக்காத கல்வியை கவிதையாக்க நாளையது உதவலாம்!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.