பெண்மையினைக் கவிபாடு!
கண் மையினால் அழகூட்டும்
சின்னக் குயில் பெண்ணே! இன்றும்
பெண்மையென்று சொல்லிச் சொல்லியே
உன்னை அடக்க முயலும் பலர்!
உண்மை என்று அடங்கும் பெண்மையும்,
கண்ணாடித் திரையுள் நவீன உலகில்!
பெண்மை தனித்தனித் தீவாய், இரகசியமாய்,
கண்ணீர்க் கடலில் இன்றும் கொடுமையே!
பெண்மையே! மௌனம் உனக்கு நிர்வாணம்!
தொன்மைக் காலமல்லவே இது! பேசு!
உன்னைப் பலமாக்கு! தலை நிமிர்!
அண்மையில் வா! கண்ணீர் துடை!
நுண்மையான அறி வாயுதம் ஏந்து!
திண்மைப் புது எண்ணங்களை உன்
வெண்மை மன வயலில் தூவு!
நன்மையான இலட்சிய நீர் ஊற்று!
உன் ஈர்ப்பைச் செயலிற் காட்டு!
பெண்மையே! நீ மகா சக்தி!
தன்னோடு சமமின்றி உன்னை ஏன்
வன்மையாய்ச் சிலர் கீழ் தள்ளுகிறார்?
ஆண்மைக்கோ, யாருக்கும் இது அழகல்ல!
ஊன்று கோலாய்த் தன்னம்பிக்கையை எடு!
உண்மையினால் பிழைகளைத் திருத்து! எழு!
உன் மையினால் பெண்மையினைக் கவிபாடு!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.