எனது பார்வையில்...!
உன் கோபத்தை விட
உன் புன்னகையை
அதிகம் நேசிப்பேன்
ஏனென்றால்
நீ சிரிக்கும் போது
உன் பால் போன்ற பற்கள்
எனக்கு பிடித்திருப்பதால்…
உன் மௌனத்தைவிட
உன் பேச்சை
அதிகம் நேசிப்பேன்
ஏனென்றால்
உன் மௌனம்
மரணத்தைவிடக் கொடியது
என்று என் மனம்
நன்கு அறிந்திருப்பதால்…
சேர்ந்து இருக்கும்
நேரத்தை விட பிரிவை
அதிகம் நேசிப்பேன்
ஏனென்றால்
நீ எப்பொழுதும்
என்னை நினைத்துக்
கொண்டிருக்கின்றாய்
என்று தெரிந்த பின்பு…
உன்னைப் பார்ப்பதை விட
பார்க்காமல் இருப்பதை
அதிகம் நேசிப்பேன்
ஏனென்றால்
என் முகம் காண
நீ துடிப்பதை
மறைந்திருந்து பார்ப்பதற்காக…
உன் கண்ணீர்
என் பலவீனம்
உன் சிரிப்பு
என் பலம் …
உன்னை நினைத்துக் கொண்டே
நடப்பதும்
உன் நினைவுகளைச்
சுமந்து கொண்டே
வாழ்வதும்… என்னில்
நீ நிழலாய்
தொடர்வதும்
என் வாழ்க்கையாய்
மாறிவிட்டது
பலரது பார்வையில்
நான் பைத்தியம்...
சிலரது பார்வையில்
நான் கவிஞன்…
ஆனால்
எனது பார்வையில்
நீ மட்டுமே…!
- த. சத்யா, இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.