என்னைப் போல் இனி அழமாட்டார்கள்...!

இரத்தம் உறையும் வேகம்போல்
என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில்
வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்...
நான் சிரித்த முகம் மட்டுமே
பார்த்த உனக்கு
என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித்
தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்...
தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே
கத்தத் தெரிந்த பிள்ளைக்கு -
அம்மா தவறிப் போவதென்பது
எத்தனைப் பெரிய வலி?
அந்த வலியையும் நீயிருக்கும் போதே
நானடைந்தேனென்பதே ரணம் பூத்த
அந்த நாட்களின் -
கொடூரமம்மா...
உனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி வருமது
வயிறு பிசைந்து
காலெட்டி உதைத்துக் கொண்டு அழுவாய்
படுக்கையில் விழுந்து துடிப்பாய்
நீ துடிக்கும் வலி பார்த்து நான் மனமொடிந்துபோவேன்
என்னம்மா என்று கேட்பேன்
ஒண்ணுமில்லை போ என்பாய்
துடிக்கிறாயே என்பேன்
அது அப்படித் தான் வயிறு வலிக்கிறதென்பாய்
ஐயோ அம்மாவிற்கு வயிறு வலிக்குதே பாவமென எண்ணி
மருந்து தேடி அலைந்தால் - ஆங்காங்கே
ரத்தம் நனைந்த துணிகள் சுருட்டி சுருட்டி கிடக்கும்
கேட்டால் அதலாம் அப்படித் தான், நீ போ
அதைத் தொடாதே என்பாய்;
ஏதோ புரியாமல்
கண்ணீர் துடைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்
ஆசிரியை அங்கே புற்றுநோய் பற்றி பாடம் நடத்துவாள்
வயிறு வலிக்கும், ரத்த வாந்தி வரும், உங்கள் வீட்டில் அம்மாவை
நேரத்திற்கு உணவுண்ணச் சொல்லுங்கள் என்பாள்,
அடிவயிறு எனக்குப் பிசையும்
அழுவேன்
அம்மா அம்மா என்று நினைத்துருகுவேன்;
உனக்கொன்று தெரியுமா அம்மா
நான் காதலித்திருக்கிறேன்
காதலிக்காக உயிர்விடவும் துணிந்திருக்கிறேன்
அவளின்றி வாழவே முடியாதெனும் வலியைச் சுமந்து
பல நாட்ககளைக் கடந்திருக்கிறேன்
இருந்துமவளைக்கூட உனக்காக விட்டேன் அம்மா;
நீ வேண்டுமா
அவள் வேண்டுமா என்று வந்தபோது
நீ போதுமென்று நின்றுகொண்டேன்...
அம்மா எனில் எனக்கு
அப்படி உயிர்,
உயிரென்ன உயிர்' என்னம்மா எனக்கு
உயிரினும் பெரிது;
ஒரு உதிரம் சொட்டிவிடும் சடுதியில்
உனக்காக நான்
என்னை விட்டுவிடுவேன் அம்மா,
இதுவரை இறைவனிடம் கூட
இதையே அதிகம் கேட்டிருப்பேன் 'நீயிருக்கும் வரை மட்டுமே
நானுமிருக்கவேண்டுமென்று'
பிறகு புரி
நீயில்லாமல் போவாயோ
எனும் பயம்
எனக்கு எத்தனைக் கொடிது...?
ஆனால் நீ இருக்க மாட்டாய் இனி' என்று
வெகு துச்சமாய் சொல்வாய்,
கோபம வந்தால் 'நான் செத்துப் போவேன் போ' என்பாய்
எனக்கு உடம்பெல்லாம் அதிரும்,
உண்மையில் நீ எனைவிட்டுப் போய்விடுவாயோ என்று
பயம் வரும்,
இரவுகள் கடக்கும் முன் அவைகளை என்
கண்ணீரில் நனைத்தெடுப்பேன்,
எங்கேனும் அந்த ரத்தம் நனைந்த துணிகள்
இருக்குமா என்று மீண்டும் எழுந்துத் தேடுவேன்,
இருக்கும் -
ஓலைக் கூரையின் உள்ளே சொருகியோ
அல்லது வீட்டுக்குப் பின்
வீசியோயிருப்பாய் நீ..,
எடுத்து வைத்து
பார்த்து பார்த்து அழுவேனம்மா நான்..,
நீ ஓடிவந்து பார்த்துவிட்டு
டேய் இதலாம் ஏன் எடுக்கிறாய் அறிவுகெட்டவனே போ அங்கே என
கடிந்துக் கொள்வாய்,
ஏம்மா உனக்கு இப்படி என்பேன்
அதலாம் அப்படித் தான் போ
பெரிய பெரிய ஆராய்ச்சி இப்பவே' என்பாய் கோபத்தில்
மறுநாள் எழுந்து ஏம்மா நீ பாவமில்லையா என்பேன்
நீ என் முகமள்ளி 'அதலாம் ஒன்னுமில்லைடா செல்லமே
நீ படிக்க கிளம்புன்னு சொல்லி
துரத்திவிடுவாய்,
உன் வார்த்தைகள் உனக்குச் சரி
எனக்கு சரி இல்லையே அம்மா..?
அது வெறும் தீட்டுதுணி என்று
அன்றே எனக்குச் சொல்லிக் கொடுத்தால்தானென்ன ?
மாதவிடாய் இப்படி ஆகும் என்று சொல்வதில் என்ன பெரிய தவறு..?
ஆனாலும், ஏதோ அது உனக்கான கூச்சம்
உன் வாய்க்கு அகப்பட்ட அச்சம்
நீ மறைத்துக் கொண்டாய் - ஆனால்
அது என்னை எத்தனைப் பெரிய நரகத்தில் தள்ளியதென்பதை
நீயறியமாட்டாய்,
இதைப் படிக்கும் பெண்கள் அறியட்டும் போதும்;
அவர்களின் பிள்ளைகளேனும் - நாளை
தனது அம்மாவிற்கு புற்றுநோய் போல் என்று
எதையோ ஒன்றை நினைத்து -
என்னைப் போல் இனி அழமாட்டார்கள்...!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.