நம்பிக்கைக்குரிய நாயார்!
மட்டமாகக் கொய்த தேயிலைச் செடிகள்,
வட்டமாகச் சூழ்ந்த அழகு மலையுச்சியில்
கட்டிய ஒரு வீட்டிலெம் வாழ்வு.
கணவர் கட்டுப்பாட்டில் முன்னூறு தொழிலாளர்கள்.
தேயிலை ரப்பர் தோட்ட நிர்வாகம், சிங்கள
வட்டகை, கழுத்துறையிலெம் தாய்நாட்டு வாசம்.
காவலரிருவர் இரவில், காவலரில்லா வேளை
காவலராவார் எம் கண்மணி நாயார்.
கட்டில் பகலிலவர், இரவில் ஆக்ரோசமாகிட.
கரிசனையாய்க் குளிப்பாட்டல், கருத்துடன் உணவு.
கணநேரம் அவர் கண்ணால் மறைந்தாலும்
கவலை தீர்க்கச் சேவகர் தேடிடுவார்.
சிறந்த நாயாரின் சீரான சேவையால்,
சினந்து பொறாமையால் அவரையும் கடத்துவார்.
சினக்காது புதியவரைத் தேடுவோம், சிங்கமாக்குவோம்.
சீதள வாழ்வுக்காயெம்முடன் வாழ்ந்தவர் எழுவர்.
சிலரை நம்பலாம், பலரை நம்பவியலாத,
சீரில்லாவுலகிலன்று நம்பிக்கைத் தோழனெம் நாயார் தான்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.