இன்று இலங்கையில் பெரும்பான்மைச் சமூகமாக வாழுகின்ற சிங்கள மக்கள் கலிங்க தேசத்திலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த விஜயனின் சந்ததியினரென்ற நம்பிக்கையின்பால் பொதுவாகத் தங்களது வரலாற்றினை வெளிப்படுத்தி வந்துள்ளனர். மகாவம்சம் கூறும் இம்மக்களது சிங்கத்துடன் இணைவு பெற்றதான தொடக்க வரலாறு அறிவுப்பூர்வமானதல்ல என்பதனைப் பொதுவாக எல்லோருமே ஏற்றுக் கொள்வர். மகாவம்சம், தீபவம்சம் மற்றும் வலகக்க ஜாதகக் கதைகள் போன்ற பௌத்த வரலாற்று நூல்களை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் எச். டபிள்யு. கொட்றிங்ரன் (H.W.Codrington) A Short History of Ceylon என்ற நூலில் விஜயனின் கதையானது பல வினோதக் கதைகளின் கூட்டு எனக் குறிப்பிடுவார். சமூக மானிடவியல் பேராசிரிரியர் கணநாத் The Origins and Institutionalization of Political Violance என்ற நூலில் சிங்களவர் மற்றும் தமிழர் இருவருமே ஒரே இனம் சார்ந்தவர்கள் என்றும் தென்னிந்தியாவின் திராவிடர்கள் அதிகம் கலந்துள்ள இனமே சிங்கள இனமென்றும் குறிப்பிடுகின்றார். The Early History of Ceylon என்ற நூலை எழுதிய G.G.Mendis என்ற வரலாற்றாசிரியர் சிங்கள இனத் தோற்றத்திற்கு காரணமாயிருந்த இனங்களுள் முக்கியமாக திராவிடர் அடங்குவதாகக் குறிப்பிடுகின்றார். ஆய்வாளர் B.H.Farmar, A Divided Nation என்ற நூலில் இந்த நாட்டில் சிங்களவராலும் தமிழராலும் பேணப்பட்டுவந்த கராச்சாரம் இங்கு முன்கூட்டியே வாழ்ந்த கற்கால மனிதர்களால் பேணப்பட்டவையென்றும் இங்கு தமிழை அல்லது சிங்களத்தைப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இங்குள்ள ஆதிக்குடிகளின் வழிவந்தவர்களே எனக் கூறுகின்றார்.
The People of the Lions என்ற கட்டுரையில் R. A. L. H. குணவர்த்தன, எந்த ஒரு சிங்கள அரசனும் ஆரியன் என்று விளிக்கப்படவில்லை என்றும் பின்வந்த சிங்களவர்கள் தம்மை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆரியர் என்ற அடையாளத்தை தமக்கு ஏற்படுத்த முனைந்தது வேடிக்கையான விடயம் என்கின்றார். எல்.பியதாச என்ற வரலாற்றாசிரியரும் The Holocaust and after என்ற நூலில், நாசிக் கொள்கையை அடியொற்றியெழுந்த ஆரியரே மேலானவர்கள் என்ற இனவாதப்போக்கு சில சிங்கள இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட தீய விளைவு என்றும் இனத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் ஒன்றேயெனவும் சிங்களப் பிரதேசத்தில் குடியேறிய தமிழர்கள் சிங்களத்தையும் தமிழ்ப் பகுதிகளில் குடியேறிய சிங்களவர்கள் தமிழையும் தங்கள் மொழிகளாகக் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றார். இவ்வாய்வாளரது கருத்தைச் சான்றுபடுத்தும் தன்மையில் மட்டக்களப்புத் தேசத்தில் தமிழரிடையே சிங்களக்குடி என்ற பெயரில் ஒரு குடியினர் வாழ்வதை நாம் காணமுடியும்.
சிங்கள மக்களின் வரலாறு இவ்வாறு அமைய சிங்கள மொழியும் பிற்பட்ட காலத்திலேயே தோற்றம் பெறுகின்றது. இதன் காலத்தை கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டதாகவே ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. வடமொழியின் தாக்கத்தால் தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகள் தோற்றம் பெற்ற காலத்தே சிங்கள மொழியும் எழுத்து வடிவத்தைப் பெறுகின்றது. சிங்கள மொழியின் இலக்கண அமைவு திராவிட மொழிகளை ஒத்திருப்பது இதற்கு முக்கியச் சான்றாக அமையும். அத்தோடு கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் சிங்கள இலக்கண நூலான சிதற்சங்கராவ சிங்கள நெடுங்கணக்கில் இரண்டுவகை உண்டென்பதை வெளிப்படுத்துவதைக் காணலாம். அவை எலு மற்றும் கலப்பு நெடுங்கணக்குகளாகும். இதில் எலு நெடுங்கணக்கில் பாளி, சமஸ்கிருத உச்சரிப்புகளில்லை. இதுவே காலத்தால் முந்தியதோடு தமிழ் மொழியுடன் இணைவுற்றதென்பதையும் வெளிப்படுத்தும்.
சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மிக்க பாண்டித்தியம் பெற்றவரான டபிள்யு.கே.குணவர்த்தன அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 28.09.1918ல் சிங்கள மொழி பற்றி ( The Origin of the Sinhalese Language - W.K.Gunawardena) ஆற்றிய உரையினை இங்கு குறிப்பிடுவது முக்கியமானதாகும்.
‘விஞ்ஞான ரீதியாக நோக்கும்போது மொழி ஒன்றினைத் தீர்மானிக்கும் காரணி அதனது சொற்றொகுதியல்ல. அது அதனது வசன அமைப்பேயாகும். அதாவது கருத்து வெளிப்பாட்டில் சொற்களை ஒருங்காக்கி பரஸ்பரம் சீராக்குவது பற்றியதாகும். இவ்வாறு நோக்கும் போது சிங்களம் அடிப்படையில் ஒரு திராவிட மொழியே எனக் கூறுதல் வேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதன் பரிணாம வளர்ச்சியானது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளமை தெரிகின்றது. சொற்றொகுதியின் அடிப்படையில் சிங்களம் பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளின் குளவி எனக்கொள்ளும் அதே வேளையில் அதன் உருவ அம்சங்களிலும் அமைப்பியலிலும் தமிழ் மொழியின் குளவி எனக் கூறுதலே சாலவும் பொருத்தமானதாகத் தோன்றுகின்றது.’ இவ்வாறு அவர் குறிப்பிடுகின்றார்.
பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமான தேவநம்பிய தீசனின் கி.மு 244 - கி.மு 207 ஆட்சிக் காலத்தில் அனுராதபுரத்தில் பௌத்தத்தைப் போதிக்கும் பீடங்களாக மகாவிகாரையும் அபயகிரி விகாரையும் விளங்கின. வரலாற்று ஆய்வுகளின் படி சுமார் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட காலத்தே மகா விகாரையில் பாளியிலும் அபயகிரி விகாரையில் தமிழிலும் பௌத்தம் போதிக்கப்பட்டது. கி.பி 6ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்த காலத்தே தமிழகத்தில் பௌத்தம் நிலைபெற்றிருந்த காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற பகுதிகளில் சைவ, வைஷ்ணவ மதங்கள் எழுச்சி பெறத் தொடங்கியதும் அங்கு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த பௌத்தத்தில் மகாயாணம் என்ற புதியபிரிவு ஆரம்பமானது. இதன்படி புத்தர் பெருமான் மகாவிஷ்ணுவின் மறு அவதாரம் என்ற மச்சபுராணம் மற்றும் பாகவதப் புராணக் கருத்துக்கள் வலுப்பெற பௌத்த வழிபாட்டுத் தலங்கள் விஷ்ணு வழிபாட்டுத் தலங்களாக மாற்றமடையத் தொடங்கின. இந்த நிலையில் இலங்கையில் பின்பற்றப்பட்ட பௌத்தத்தின் மூலவடிவான தேரவாதம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய அச்சநிலை தோற்றம் பெறலானது. இதில் தமிழ் மொழியில் பௌத்தம் போதிக்கப்பட்ட அபயகிரி விகாரையில் மகாயானத்தின் பாதிப்பு துளிர்விடத் தொடங்கியது. இதனால் அச்சம் கொண்ட மகாவிகாரையின் மகா சங்கத்தினர் தம்ம தீபக் கொள்கையை உருவாக்கினர். இதன் பிரதிபலிப்பாக இலங்கை பௌத்தர்களின் நாடு என்பதுவும் சிங்களவர்கள் தேரவாத பௌத்தத்தின் காவலர்கள் என்பதுவும் வரையறுக்கப்பட்டது. இதன் பின்னனியில் பௌத்தத்தைப் பின்பற்றிய பெரும்பான்மையினர் சிங்களவர் என்ற கட்டுக்கோப்புக்குள் உள்ளாக்கப்பட்டனர். இதனைச் சாதகப்படுத்தும் தன்மையில் அதீத கற்பனையின் பால் கெமுனுவை முதன்மைப்படுத்தி பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் பெருவெற்றி பெற்றதென்றே கூறவேண்டும்.
சிங்கள மக்களது வரலாற்றை வெளிப்படுத்தும் பிறிதொரு நூல் சூளவம்சமாகும். கி.பி 1140 - 1173 வரை பொலன்னறுவையை இருக்கையாகக் கொண்டு நல்லாட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகுவை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட நூல் இது. இவன் பாண்டிய தமிழ்ப் பாரம்பரியத்தின் வழி வந்தவன். இவனது பேராட்சிக்குட்பட்டு மட்டக்களப்புத் தேசம் சிற்றரசு நிலையிலிருந்த போது தருமசிங்கன் இங்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்துள்ளான். பராக்கிரமபாகுவை மட்டக்களப்பு பூர்விக ஏடுகள் சேனன் எனக் குறிப்பிடும். பராக்கிரமபாகுவோடு தினசிங்கன் மிகுந்த நட்புரிமை கொண்டிருந்தவன். இதன் காரணமாகவேதான் தனது உறவுமுறையைக் கொண்ட மதுரைப் பாண்டியனுக்கு பராக்கிரமபாகு தினசிங்கன் தலைமையில் படையணியொன்றினை அனுப்பியிருந்தான். பராக்கிரமபாகுவின் அரண்மனைக் கவிஞராக இருந்தவர் போஷராஜ பண்டிதர். சரஜோதி மாலையைத் தமிழில் எழுதியவர். நளவெண்பாவைப் பாடிய புகழேந்திப் புலவரை பராக்கிரமபாகு தனது அரண்மனைக்கு அழைத்துச் சிறப்பித்ததாகவும் தகவல்கள் உண்டு. அரச கருமங்கள் அனைத்தையும் தமிழிலேயே மேற்கொண்டவனாக அவன் அறியப்படுகின்றான்.