போர்த்துக்கேயர் மட்டக்களப்பை 1622ல் கைப்பற்றியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னரே பறங்கியர் சமூகம் இங்கு தோற்றம் பெறலானது. இவர்களில் போர்த்துக்கல்லில் இருந்து வந்தவர்கள் போர்த்துக்கீசர் என்றும் ஒல்லாந்திலிருந்து வந்தவர்கள் ஒல்லாந்தர் என்றும் பிரிவுறுத்தப்பட்டனர். பறங்கியர் என்ற பதம் இந்தியாவில் (தமிழ் நாட்டில்) இருந்து வந்ததாகும். கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவர்களான ஒல்லாந்தப் பறங்கியர் ஆரம்ப காலத்தே இங்கு பெருமளவில் வாழ்ந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் இருவேறு சமூகக் கூறுகளை இவர்கள் கொண்டிருந்தனர். ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியதும் போர்த்துக்கீசரை அடிமைப்படுத்தி நடத்தினர். அவர்கள் போர்த்துக்கேயரை ஒல்லாந்தரின் அடிமைகள் என்றே அழைத்தனர். 1827ல் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஒல்லாந்தர் அடிமைகள் (போர்த்துக்கீசர்) 78 பேரும் ஒல்லாந்தர் 215 பேரும் வாழ்ந்தமை குறிப்பிடப்படுகின்றது. போர்த்துக்கேயர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாயிருந்தமையால் ஆங்கிலேயரும் ஒல்லாந்தரைப் போன்று இவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே செயல்பட்டனர். காலப்போக்கில் பெருமளவு ஒல்லாந்தர் இங்கிருந்து வெளியேறியதும் போர்த்துக்கேய சமூகத்தினர் எண்ணிக்கையில் கூடியவர்களாகவும் தனித்துவம் மிக்கவர்களாகவும் மாறினர்.
மட்டக்களப்பில் பரவலாகவும் மற்றும் கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சின்ன முகத்துவாரம் பகுதிகளில் வாழும் இவர்கள் தங்களுக்குரிய மதமான ரோமன் கத்தோலிக்க மதத்தையே இன்றும் இறுக்கமாகப் பற்றியுள்ளனர். போர்த்துக்கேயரது ஆட்சி மிகக் குறுகிய காலமாக இருந்தாலும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்களும் அவர்களது பல சொற்பிரயோகங்களும் நமக்குள்ளும் நமது மொழிக்குள்ளும் கலந்து விட்டிருக்கின்றன. பெரும்பாலும் இம்மக்கள் தங்களுக்குள் தங்கள் மொழியையே பேசி வந்தாலும் இப்போதைய தலைமுறையினர் பலர் பக்கச் சூழலின் நிமித்தம் அதில் பெரிதளவு அக்கறை கொண்டவர்களாகத் தெரியவில்லை. இம் மக்கள் தங்களது பிரதானத் தொழிலாகத் தச்சுத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர் எனினும் பலர் அரசுத் தொழில்களிலும் வாகனங்கள் திருத்துதலிலும் (மெக்கானிக் தொழில்) அவற்றை கொள்வனவு செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இரும்பு வேலை (கொல்லவேலை) துவக்கு, திருத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆடம்பரம் மிக்க நாகரீக வாழ்க்கையும் சமய நிகழ்வுகளையும் குடும்ப நிகழ்வுகளையும் சிறப்பாகக் கொண்டாடும் தன்மையும் இம்மக்களிடம் இறுக்கமாகவேயுள்ளது.
இவர்கள் தங்களது திருமண உறவைப் பெரும்பாலும் தங்களுக்குள்ளே வைத்துக் கொண்டாலும் சிலர் தற்போது சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களுடனும் இணைந்து கொண்டுள்ளனர். மதக் கடமைகளை இறுக்கமாகப் பேணும் இம் மக்கள் ஞாயிறு தினத்தை இதற்கென முக்கியப்படுத்தியுள்ளனர். இத்தினத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளை இவர்கள் மேற்கொள்வதில்லை. இவர்களுக்கான முக்கியத்துவம் புளியந்தீவு மாதாகோவில் நிகழ்வில் அவதானிக்கப்படுகின்றது. இறுதியான எட்டாம் பிரசங்கம் இம்மக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இச்சமூகத் தனித்துவத்தைப் பேணுவதற்கும் முன்னெடுப்பதற்கும் என ஆர்வலர்கள், பெரியவர்கள், புத்திஜீவிகளைக் கொண்ட சமூக அமைப்பொன்று (Batticaloa Burgurs Union) இவர்களிடையே செயற்படுவதையும் காணுகின்றோம். இம்மக்கள் பிற மட்டக்களப்பு சமூகங்களுடன் அன்னியோன்னியமாகவே நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் சேர் எட்வேட் வார்ன்ஸ் என்பவர் இலங்கையின் மகாதேசாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் 1824ல் மேற்கொள்ளப்பட்ட சாதிக் கணக்கெடுப்பு 1827ல் திருத்தத்துடன் வெளியிடப்பட்டதில் மட்டக்களப்பில் பின்வருமாறு எண்ணிக்கை அமைகின்றது. இதில் நாடுகாடுப் பற்று (வேகம் - விந்தனை) பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
01. ஐரோப்பியர் - 05
02. ஆங்கிலேயர் (White) - 290
03. ஒல்லாந்தர் - 215
04. ஒல்லாந்த அடிமைகள் (போர்த்துக்கீசர்) - 76
05. செட்டி - 216
06. வேளாளர் - 4485
07. மலையாளி - 56
08. தெட்டி - 80
09. பரதேசி - 141
10. தனக்காரர் - 508
11. முற்குகர் (நாடுகாடு பற்று உட்பட) - 9907
12. கரையார் - 1553
13. மூர்ஸ் (முஸ்லிம்) - 8288
14. கம்மாளர் - 513
15. நாவிதர் - 252
16. வண்ணார் (ஈரங் கொல்லி) - 470
17. பரவர் (விவசாயம்) - 166
18. நளவர் - 210
19. மீன்தூக்கி - 355
20. கைக்கோளர் - 145
21. கடையர் - 82
22. சாயக்காரர் - 69
23. பறையர் - 152
24. சாண்டார் (பல்லக்கு தூக்குதல், விவசாயம்) - 479
25. பிராமணர் - 87
26. வேடர் - 169
27. பண்டாரப்பிள்ளை (உள்நாட்டு வீரர்கள்) - 1026
28. கோவிலார் - 356
29. வன்னியர் (வன்னியர்களின் வாரிசுகள்) - 259
30. ஆண்டிகள் - 32
31. சிற்பிகள் - 26
32. சாளிகள் - 12
33. தச்சர் - 13
34. சிங்களவர் - 2026
மொத்தம் - 32690
உரோமன் கத்தோலிக்கர் - 1993
புரட்டஸ்தாந்தினர் ஏனையோர் - 2208
இஸ்லாம் - 8288
இந்து - 18175
பௌத்தர் - 2026
மொத்தம் - 32690
இதில் சிங்கள மக்கள் தனியாக உள்ளனர். அவர்களது சனத்தொகை வெவ்வேறு சாதிகளின் அடிப்படையில் 2026 ஆகும்.
இன்று இப்பிரதேசத்தே வாழுகின்ற சிங்கள மக்களை இருவேறு பிரிவாக அடையாளப்படுத்த முடியும்.
1. மட்டக்களப்பின் மரபுவழிச் சமூகம்
2. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட குடியேற்றச் சமூகம்.
இம்மக்களது வரலாறு ஆரம்ப காலம் முதலே குகமரபினரோடு இணைவு பட்டுச் செல்வதை அவதானிக்க முடியும். வட கலிங்கமான சிங்கபுரம் சாh;ந்துவந்து மட்டக்களப்புப் பூர்வீக சரித்திர ஏடுகளில் சிங்கர் என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள் பற்றிய கவனம் நம் களஆய்வில் முக்கியத்துவம் பெறுவதாயுள்ளது. ஏற்கனவே குகமரபின் ஒரு பிரிவினராகவும் சிவ வழிபாட்டினைக் கொண்டவர்களாகவும் அறியப்பட்ட இம் மக்கள் உன்னரசுகிரி தோற்றம் பெற்ற காலத்தே அச்சிற்றரசுக்கு உட்பட்டும் பின்னர் நாடுகாடுப்பற்று, நாதனைப்பற்று வன்னிமைப் பிரிவுகளிலும் அதன் பின்னர் வேகம் பற்று விந்தனைப்பற்று பிரிவுகளிலும் வாழ்ந்த மக்களின் ஒரு பிரிவினராகக் கொள்ளப் போதிய சான்றுகள் தென்படுகின்றன.
இலங்கையில் முக்கியப்படுத்தப்பட்ட மகேச (சிவ) வழிபாட்டில் தேவநம்பிய தீசனின் ஆட்சியில் பௌத்தம் புகுந்தபோது மட்டக்களப்புப் பிரதேசம் அம்மாற்றத்திற்கு உட்பட்டதாக வரலாறில்லை. எனினும் சோழராட்சிக்கு முற்பட்டே மகாகந்தக்குளம் (திகவாவி) பேசப்படுவதால் அதனை அண்டி வாழ்ந்த மக்கள் பௌத்தத்தை தழுவியிருப்பர் என்பதை மறுப்பதற்கில்லை. மாகோன் ஆட்சிக் காலத்திற்கு முன்னதாகவும் பிற்பட்டும் பௌத்த மதம் இப்பிரதேசத்தில் வேர்விட ஆட்சி முறையில் சாதகமான சூழலே இருந்துள்ளது. மகா ஓயா, உதயகிரி போன்ற பண்டைய பௌத்த வழிபாட்டுத்தலங்கள் இக்காலத்தே தோற்றம் பெற்றமை தெரிகின்றது. வழிபாட்டுத் தன்மையில் இந்துவும் பௌத்தமும் பெருமளவு ஒத்த தன்மையைக் கொண்டிருந்தமையால் மட்டக்களப்புப் பிரதேசத்தே வாழ்ந்த சிங்கள மக்கள் இந்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்களாயினர். அத்துடன் சுதந்திரத்திற்கு முற்பட்டு வாழ்ந்தவர்கள் தமிழில் சரளமாக பேசும் ஆற்றலுடையோராய் இருந்தனர். மேலும் இப்பகுதியில் வாழ்ந்த வேடர் சமூகத்தினரும் தமிழ் மக்களுடன் இணைப்பு பெற்றதைப் போன்றே சிங்கள மக்களும் இணைப்புப் பெற்றனர். காலப்போக்கில் இம் மக்கள் கதிர்காமம், கட்டகாமம், முற்பனை (மொனராகலை) அத்தி மலை, பாணமை, பொத்துவில், அக்கரைப்பற்று, தமணை, அம்பாரை, உகனை, கோம்பானை, பக்கி எல்லை (பழையது), மகாஓயா, மன்னன்பிட்டி, முத்துக்கல், தம்பன்கடவை, திரிகோணமடு என விரிவுபடலாயினர். அக்காலத்தே தமிழர்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுமுறைகளின் தழும்பு இப்பகுதிகளில் இன்னும் மாறாமலேயுள்ளது. எதிர்மன்னசிங்க வன்னியன், உகன வன்னியன், முத்துக்கல் வண்டையா உடையார், கோம்பானை சபாரத்ன உடையார், ஜெயசுந்தர உடையார் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இதனை அடையாளப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கியம் பெறுகின்ற தமிழ் சமூகங்களில் சிங்களக்குடி என ஒரு மரபினர் இன்றும் நிலை பெறவே செய்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் முதலாவது கணக்கெடுப்பில் வேகம் விந்தனை உள்ளிட்டு வாழ்ந்த சிங்கள மக்களின் தொகை 2026 ஆகவே அறியப்படுகின்றது. இவர்களே பண்டைய மட்டக்களப்பின் புராதன சிங்கள சமூகத்தினர் ஆவர். இம்மக்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஈற்றுப் பெயர்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். நவீன பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டினாலும் ஈற்றுப் பெயர்களை இவர்கள் மாற்ற விரும்புவதில்லை. பண்டா, காமி, மாத்தயா, றாள, கோன், நாயக்க, வன்னி, விதான, பதி, முதலி என ஆண்களும் மெனிக்கே, நோனா, காமினே, வதி என பெண்களும் பெரும்பாலும் ஈற்றுப் பெயர்களைக் கொண்டிருப்பது தெரிகின்றது. இதன்மூலம் தங்களை இவர்கள் உடபலாத்த (உயர் பிரிவு) சிங்களவர் என வெளிக்காட்டவே பெரிதும் அவாவுறுகின்றனர்.
மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்று ஆவணங்கள் இவர்களைச் சிங்கர் என குறிப்பிடுவதை ஆதாரப்படுத்தும் சிங்களப் பாடல்களை இவர்கள் பாடிக் காட்டுகின்றனர். கள ஆய்வில் சந்தித்த வயோதிகப் பெரியவர்கள் சிலர் சிங்கள ஒலி வடிவில் தமிழை அழகாகப் பேசுவதும் மட்டக்களப்பின் மறுகா, ஒண்ணா, கிறுகி, வில்லங்கம், சும்மா, ஊடு (வீடு), வட்டை (வயல்), கடப்பு, புள்ளை, ஆணம், எழுவான், படுவான் போன்ற சொற்கள் அவர்கள் பேச்சில் தென்பட்டதும் நமது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. புத்தருடன் விஷ்ணு, கந்தசாமி, காளி போன்ற தெய்வங்களை குலதெய்வமாக வீட்டின் முன் பந்தலமைத்து வழிபடும் தன்மையும் இவர்களிடம் தென்படுவதை காண முடிந்தது. மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தோடு தங்களுக்கிருந்த பண்டைய தொடர்பான ஈடுபாட்டினை (உகனை, கோணாகொள்ளை, கோம்பானை, வீரக் கொடை) இவர்கள் ஆர்வத்தோடு வெளிக்காட்டினர்.
சுதந்திரத்திற்குப் பிற்பட்டு பரவலாகக் குடியேறிய சிங்கள மக்களை வந்தவர்களாகக் கருதும் பொதுவான மனோபாவம் இவர்களிடம் இன்னமும் தென்படவே செய்கின்றது. அவர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதைத் தவிர்த்த பல சந்தர்ப்பங்களை இவர்கள் கள ஆய்வில் வெளிப்படுத்தினர். கண்டி போன்ற உடரட்ட பகுதிகளில் மண உறவு கொள்வதிலே இவர்கள் ஆர்வம் இப்போதும் தென்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைகின்ற போது பிரதேச உள்ளுராட்சித் தலைவர்களாக இருந்த மகா ஓயா I.C அப்பு காமி, தமணை K.M. களு பண்டா, பாணம S.T. புஞ்சி மாத்தையா, உகனை B.M. முத்துப்பண்டா போன்ற சமூகத் தலைவர்கள் சிங்களவர் - தமிழரது உறவு முறை வாரிசுகள் என்பது அங்கு பெறப்பட்ட தகவல்களில் உறுதி செய்யப்படுகின்றது. பிரதேசத் தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணவேண்டுமெனும் ஆர்வம் இவர்கள் பலரிடம் தென்படுவது இவ் அர்த்தப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவுமிருந்தது.
ஆங்கிலேயரின் ஆட்சியின் தொடக்க காலமான 1824 ல் மேற்கொள்ளப்பட்டு 1827ல் வெளியிடப்பட்ட சாதிக் கணக்கெடுப்பில் இப்பிரதேசத்தே வாழ்ந்த 32690 மொத்தச் சனத்தொகையில் இம்மக்களின் எண்ணிக்கை 2026 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு சற்று முற்பட்ட கணக்கெடுப்பில் 202987 ஆன பிரதேச சனத் தொகையில் இவர்கள் 11,891 ஆக இருந்தார்கள். அக்காலத்தே வேகம்-விந்தனை மற்றும் பாணமை பகுதிகளில் பரவலாக வாழ்ந்த இவர்கள் சுமார் 6 வீதம் எனக் கணிக்கப்பட்டனர்.
கல்ஓயா அணை கட்டப்பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாகிய 1950 ஐ தொடர்ந்து மட்டக்களப்பின் தென்மேற்குப் பிரதேசம் பாரிய குடியேற்றத் திட்டத்துள் கொண்டு வரப்பட்டபோது நாட்டின் தென் பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அரசின் வசதி வாய்ப்புக்களோடு குடியேற்றப்பட்டனர். இதே நிலை மட்டக்களப்பின் வடமேற்கு பகுதிகளிலும் (வெலிக்கந்தைபகுதி) ஏற்படலாயிற்று. ஏற்கனவே மாத்தளை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட விந்தணைப்பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட மன்னன்பிட்டி வெலிக்கந்தை பகுதிகள் உட்பட்ட தம்பன் கடவைப் பிரதேசம் போக மீதியான மட்டக்களப்புத் தமிழகம் மட்டக்களப்பு மாவட்டம், அம்பாரை மாவட்டம் எனக் கூறு போடப்பட்டது. கடைசியாக 1981ல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான கணக்கெடுப்பில் 1947 ல் 6 வீதமாகவிருந்த சிங்கள் மக்கள் 34 ஆண்டுகளில் 22 வீதமாக உயர்ந்தனர். இன்று அது இன்னும் உயர்ந்தேயுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிற்பட்ட சிங்கள மக்களின் குடியேற்றங்களது பிரதிபலிப்பாகவே உள்ளது.