இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ்க்கரையில் இந்துமாசமுத்திரத்தின் ஒரு சிறுதீவாக அமைந்துள்ள நாடு இலங்கை. இதன் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு சுமார் மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இந்நாட்டின் தொடக்க வரலாறு இயக்கர் மற்றும் நாகர்களை முன்வைத்தே ஆரம்பமாகின்றது. கி. பி 6ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்ட மகாவம்சமே இலங்கையின் வரலாறு கூறும் முதல் நூலாக அமைகின்றது. கி. மு 5ஆம் நூற்றாண்டில் வடகலிங்கத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் அரசகுமாரனும் அவனது எழுநூறு நண்பர்களும் இலங்கை வந்தடைந்தது முதலாக மகாவம்சம் இலங்கை வரலாற்றை விபரிக்கின்றது. அப்போது இயக்கரின் மேலாதிக்கத்தில் இலங்கை இருந்தமைக்கும் அது சான்றளிக்கின்றது.
பொதுவான வரலாற்றின் அடிப்படையில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலே தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் மாறிமாறி இலங்கையில் ஆட்சிபுரிந்தமையை உணரலாம். கி.மு 2ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தமிழ்மன்னனான எல்லாளனுடன் துட்டகைமுனு நீண்டகாலம் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றியமை சிங்களவர்களின் வெற்றியாக இன்றும் பெருமைபேசப்படுவதைக் காணலாம்.
கி.மு 3ஆம் நுற்றாண்டில் தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலத்தில் மகிந்த தேரரால் இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னர் இந்து மதமும் இந்துப் பண்பாடுமே இலங்கையில் நிலவியது. அதன்பின்னர் கி.பி 6ஆம் நூற்றாண்டில் தீவிரம்கொண்ட பௌத்த தேரவாத முன்னெடுப்பானது பௌத்த கலாசார மரபுரிபை பேணுகையின் முக்கியத்தை இலங்கையில் நிலைநிறுத்தியது.
இலங்கையின் கலாசாரமானது நாலுவிதமான இன, மொழி, சமய, பண்பாட்டுத் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு கலவையாக இன்று வெளிப்பட்டு நின்றாலும் இங்குள்ள இசைநடன மரபானது அதன் நீண்டகால வரலாற்றில் தமிழ்-சிங்கள ஈரினத் தன்மையின் வெளிப்பாடகவே அமைகின்றது. சிங்களவரின் பாரம்பரியமிக்க கண்டிய நடனமும் கண்டிய இசையும் தமிழரின் மரபுவழிப்பட்ட பரதநாட்டியமும் கர்நாடக இசையும் இதில் முக்கிய கூறுகளாய் தென்படுகின்றன. இவைதவிர நாட்டுப்புற இசையும் நாட்டுப்புற நடனங்களும் சிங்களத் தமிழ்ச் சமூகங்களின் பண்பாட்டு அம்சங்களின் வெளிப்பாடாக இங்கு நிலவுகின்றன. பிற்பட்ட காலத்தே உருவானதாக கொள்ளப்படும் இஸ்லாமிய இசை, பறங்கிய இசை போன்ற தனித்தனி இசை மரபுகளையும் ஆங்காங்கே இன்று அவதானிக்க முடிகின்றது.
தமிழகத்துக்கு மிக அண்மையில் இலங்கை இருந்தபோதிலும் அங்கு வாழ்ந்த தமிழரது இசைநடன மரபுகளின் தாக்கமானது ஒரு நீண்டகாலத்தே இலங்கையில் ஒப்பீட்டு ரீதியாக மிக குறைந்த அளவினதாகவே கொள்ளப்படவேண்டியுள்ளது. கி.பி 6ஆம் நூற்றாண்டுக்குரியதும் இலங்கையின் முக்கிய வரலாற்று ஆவணமாகக் கருதப்பட்டதுமான மகாவம்சம் போன்ற நூல்களில் இசை நடனம் போன்றவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும் அதன்பின்னரான இலங்கையின் வரலாற்றில் பௌத்த சிங்கள மேலாதிக்கப் முன்னெடுப்புகளாலும் ஏனைய பிற ஏதுக்களாலும் அவ்விசை நடன மரபுகளின் வளர்ச்சியானது தளர்ச்சியடையக்கூடிய சூழ்நிலையே இங்கு நிலவியதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. எனினும் சோழராட்சியை மையப்படுத்தி கி.பி 11ஆம் நூற்றாண்டை தொடர்ந்த காலத்தே கி.பி 16ஆம் நூற்றாண்டு வரையான சுமார் 500 ஆண்டுகள் சிங்கள மன்னர்களது அரசசபைகளிலும் தமிழரது இந்து ஆலயங்களிலும் பரதக்கலை நிலைகொண்டிருந்தமைக்கான இலக்கியச் சான்றுகள் பெறப்படவே செய்கின்றன. பெரும்பாலும் தமிழர்தம் பாரம்பரிய கலைகளான இசை, நடனம், சிற்பம், ஓவியம் போன்றவை கோவில் கலைகளாகவே வளர்ந்து வந்த சூழலில் போர்த்துக்கேயரின் படையெடுப்பால் அனேக இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டபோதும் அதனைத்தொடர்ந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தே மேற்கொள்ளப்பட்ட சுதேசக் கலையழிப்பு நடவடிக்கைகளாலும் அக்கலைகளை முன்னெடுத்த கலைஞர்கள் போதிய ஆதரவின்மையால் நலிவுற்றபோது தமிழர்தம் இப்பாரம்பரிய கலைகளும் பின்னடைவை நோக்கித் தள்ளப்படலாயின.
இலங்கையில் சோழப் பேரரசு நிலவிய சுமார் 70 ஆண்டுகாலத்தே பொலநறுவை, தேவிநுவரை, அனுராதபுரம் போன்ற இடங்களிலிருந்த சைவ வைஷ்ணவ ஆலயங்களிலும் பௌத்த வழிபாட்டுத்தலங்களிலும் நடனப் பெண்டிர் பணிபுரிந்தமையும் திருக்கோணேஸ்வரம், கந்தளாய் விஜயராஜ ஈஸ்வரம், தீருக்கேதீஸ்வரம் போன்ற சிவாலயங்களில் தேவரடியார்கள் வாழ்ந்தமையும் இன்றைய ஆய்வுகளில் வெளிப்படவே செய்கின்றன. கந்தளாய் விஜயராஜ ஈஸ்வரத்தில் ஏழு தேவரடியார்களிருந்து நற்பணியாற்றியதாக இலங்கையின் தலைச்சிறந்த கல்வெட்டாய்வாளர் எஸ்.பரணவிதான தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளமை இதனை சான்றுபடுத்துவதாக அமையும்01. 1344ல் இலங்கைக்கு சுற்றுலாவந்த மொறாக்கோ நாட்டுப் பயணியான இபின் பட்டுடாவின் பிரயாணக் குறிப்புகளில் நடனமாதர் தொடர்பான தகவல்களைக் காணலாம். அக்காலத்தே தெவிநுவரையில் இருந்த பெரிய கோவில் ஒன்றில் சுமார் 500 நடனமாதர்கள் (தேவரடியார்கள்) இருந்ததையும் கோவில் பூசையின்போது அவர்கள் ஆலய மண்டபத்தில் ஆடிப் பாடியதையும் அவர் தனது பிரயாணக் குறிப்பில் வெளிப்படுத்தியுள்ளமை மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். சோழப் பேரரசன் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரியகோவிலில் 400 தேவரடியார்கள் ஆற்றிய பணிபற்றி அறியும் நாம்; தேவிநுவரை சிவாலயத்தில் 500 தேவரடியார்கள் பணியாற்றியுள்ளமை குறித்து அறிகின்றபோது அக்காலத்தே நடனப் பெண்டிருக்கு இலங்கையில அளிக்கப்பட்ட சிறப்புக்குறித்து பெருமிதமடையமுடியும்02.
அனுராதபுரத்திலுள்ள பௌத்த வழிபாட்டுத்தலமான அபயகிரி விகாரை வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டுவரையான ஒரு நீண்ட காலத்தே அங்கு பௌத்த மதம் தமிழில் போதிக்கப்பட்டதாக ஆய்வுகள் புலப்படுத்தும். கலாசார முக்கோணப் பகுதியான அப்பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரர் சிலை ஆய்வாளர்களது கவனத்தை ஈர்ப்பதாகும்03. சிவனது தாண்டவ வடிவத்தினையும் சக்தியின் லாஸ்ய வடிவத்தினையும் வெளிப்படுத்தும் தன்மையில் அச்சிலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கி.பி 1140 தொடக்கம் கி.பி 1173வரை பொலநறுவையை இருக்கையாக்கி ஆட்சி செய்தவன் முதலாம் பராக்கிரமபாகு. இவனது நல்லாட்சிகுறித்து பிறிதொரு சிங்கள வரலாற்று நூலான சூளவம்சம் சிறப்பாக வெளிப்படுத்தும். இவன் பாண்டிய - சிங்களப் பரம்பரியத்தில் வந்தவன். அரச கருமங்களை தமிழிலும் மேற்கொண்டவன். பராக்கிரமபாகுவின் அரசவைக் கவிஞராக விளங்கியவர் போஜராஜ பண்டிதர். சரஜோதி மாலையை தமிழில் யார்த்தவர். நளவெண்பாவைப் பாடிய புகழேந்திப் புலவரை பராக்கிரமபாகு தனது அரண்மனைக்கு அழைத்து சிறப்பித்ததாக தகவல்களுண்டு04. இசை நடனத்தில் மிகுந்த ஞானம் மிக்கவனாகவும் அவற்றின் நுட்பங்களை கூர்ந்து ரசிப்பதில் பேரார்வம் கொண்டவனாகவும் இவன் விளங்கினான். இவனின் பட்டத்தரசியான லீலாவதியும் நடனத்தில் தேர்ச்சியும் ஆர்வமும் கொண்டவளாக விளங்கினாளென தகவல்கள் கூறும். இவனது ஆட்சிக்காலத்தில் பௌத்த வழிபாட்டுச் சடங்குகளில் அமைக்கப்பட்ட நடன அரங்குகளில் நூற்றுக்கணக்கான நடனப்பெண்கள் தேவலோகப் பெண்களைப்போல் தங்களை அலங்கரித்து பார்ப்போரின் உள்ளங்களை கொள்ளைகொள்ளும் வண்ணம் பல்வேறு நடனங்களையும் ஆடினரென அந்நூல் கூறும். அக்காலத்தே பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளில் நடனம் முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் அங்கு நடன அரங்குகள் அமைக்கப்பட்டமையும் இதனூடு நம்மால் உணரமுடிகின்றது.05
சிங்கள மொழியிலே எழுதப்பட்ட சந்தேசய எனப்படுகின்ற தூதுவிடு இலக்கியங்கள் பலவற்றில் கி.பி 14ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 16ஆம் நுற்றாண்டு வரையில் இலங்கையில் நிலவிய இசைநடன மரபுகள் பற்றி சிறப்பாக அறியமுடிகின்றது. மயூர சந்தேசய (மயில்விடு தூது), கிர சந்தேசய (கிளிவிடு தூது), ஹம்ச சந்தேசய (அன்னம்விடு தூது), கோகில சந்தேசய (குயில்விடு தூது), பரவி சந்தேசய (மைனாவிடு தூது) போன்ற இலக்கியங்கள் இதனைச் சான்றுபடுத்துபவையாக அமையும். அரண்மனைகளிலும் இந்துக் கடவுளரின் முன்னிலையிலும் இடம்பெற்ற இசை நடனங்கள் தொடர்பிலும் இந்நூல்கள் விபரித்துக் கூறும். டெடிகமயை இருக்கையாகக்கொண்டு ஆட்சி செய்த 5ஆம் பராக்கிரமபாகுவின் அரண்மனையில் நடனத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம் குறித்து திஸர சந்தேசய நன்கு விபரிக்கின்றது. வண்டுகளின் நிரைபோல அழகாக நெளிகின்ற நடன மாதரின் விழிகளின் புருவ அசைவினையும் பார்ப்போரை சுண்டியிழுக்கின்ற அவர்களது கடைக்கண்பார்வை குறித்தும் திஸர சந்தோசய குறிப்பிடுவது நமது உள்ளங்களை தொட்டுவிடும். பிறிதொரு தூது இலக்கியமான செலலிஹினி சந்தேசய அக்காலத்தே களனியில் சிறப்புற விளங்கிய விபீஷணனின் தேவாலயத்திலே (சிவாலயம்) கைவழி நயனம் செல்ல ஆடல் மகளிர் சிறப்பாக நடனமிடுதல் பற்றி அறியமுடியும். ஸ்ரீ ராகுலர் எழுதிய பரவி சந்தேசய நூலானது நாட்டிய கரணங்கள் பற்றியும் நாட்டிய மாதரின் அங்க அசைவுகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடும். பொதுவாக இந்நூல்களில் தென்படும் நாட்டிய முறைகள் பற்றியும் வெளிப்படும் நடனக் காட்சிகள் தொடர்பிலும் கூர்ந்து பார்க்கும் தன்மையில் அக்காலத்தே இங்கு நிலவிய நாட்டிய மரபானது பரதரின் நாட்டியசாஸ்திர மரபினை அடிப்படையாகக் கொண்டுள்மையை விளங்கிக்கொள்வதோடு பெரும்பாலும் அன்று தமிழகத்தில் நிலவிய பரதக்கலையே இங்கும் பின்பற்றப்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. இங்கு ஆடப்பட்ட அபிநயம், றேசகம் போன்ற நடன முறைகள் பரத நாட்டிய மரபையொட்டிவையாகும். இந்நடனங்களை பெரும்பாலும் பெண்கலைஞர்களே ஆடிவந்துள்ளமை ஆய்வுகளின் வெளிப்பாடாகும். பொதுவாக அக்காலத்தே ஆலயங்களிலும் ஏனைய பௌத்த வழிபாட்டிடங்களிலும் ஆடப்பட்டுவந்த நடனங்களில் கேரளத்து கதகளியோ அன்றேல் கண்டிய நடனமோ இடம்பெற்றமைக்கான தக்க சான்றுகள் எவையும் பெறப்படவில்லை என்பதனை தனது ஆய்வுகளில் வெளிப்படுத்தும் பேராசிரியர் ஈ ஆர். சரத்சந்திர பரதநாட்டியமே இங்கு இடம்பெற்றிருக்க முடியும் எனக் கருதுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமையும்06.
கி.பி 11ஆம் நூற்றாண்டின் சோழராட்சி காலம் தொடக்கம் கி.பி 16ஆம் நூற்றாண்டு வரையான ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்க காலம் வரை பொலநறுவை, தம்பதெனியா, டெடிகம, கம்பளை, யாப்பகூவ, கோட்டை போன்ற அரசுகளின் வழக்கிலிருந்த நடனமானது பரதக்கலையாகவே இருக்கமுடியும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாகும். சோழராட்சியின்போது அவர்களால் பொலநறுவையில் அமைக்கப்பட்ட வானவன்மாதேவி ஈஸ்வரத்தில் தேவதாசிகள் பணிபுரிந்ததைப்போல் சோழர்களால் புனரமைக்கப்பட்ட முக்கிய சைவ ஆலயங்களிலும் தேவதாசிகளின் பணி இடம்பெற்றிருக்கலாமென்றே கருதக்ககூடியதாகவுள்ளது. சோழராட்சியின் பின்னர் சோழரது ஆட்சி நிருவாக முறைகளையே பின்பற்றி பொலநறுவையில் தங்களது ஆட்சியைத் தொடர்ந்த விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு போன்றோரின் ஆட்சிக்காலத்திலும் அதனைத் தொடர்ந்தாற்போல் இங்கு நெருக்கமுற்றிருந்த பாண்டியப் பேரரசு மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்திலும் பரதக்கலையும் அவர்களால் ஆதரிக்கப்பட்ட கலையாகவே கொள்ளப்படுகின்றது.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட சந்தேசய எனப்படுகின்ற தூதுவிடு காவியங்களில் வெளிப்படும் கருத்துக்களை அவ்விலக்கியங்கள் பாடப்பட்ட காலத்தில் உருவான நடனச் சிற்பங்களும் ஓவியங்களும் வெளிப்படுத்துவதை கடலதெனிய மற்றும் யாப்பகூவ போன்ற இடங்களில் காணமுடியும். யாப்பகூவ சுவரோவியங்களில் அமைக்கப்பட்டுள்ள நடனமாதர்களின் சுவரோவியங்கள் சிதம்பரம் கோவிலிலுள்ள நடன ஓவியங்களை ஒத்திருப்பதாக பேராசிரியர் சரத்சந்திர தனது ஆய்வில் குறிப்பிடுவது நமது கவனத்தை ஈர்ப்பதாகும்07; இந்நடன உருவங்களில் சிவநடராஜ, சதுர, ஹரிஹஸ்த கண்டசூசி, நிகுஞ்சித போன்ற நடன நிலைகளை அவர் உதாரணப்படுத்தியுள்ளார். அத்துடன் அக்காலத்துக்குரியதான வேறு சில சிற்பங்களிலும் ஓவியங்களிலும் வெளிப்படும் நடன மாதர் உருவங்கள் சாஸ்திரிய முறையில் தென்படுதை அவதானிக்கலாம். சான்றாக எம்பக்க தேவாலயத்திலுள்ள நடன மாதரின் மரச் சிற்பங்களும் டெடிகமையில் பெறப்பட்ட அக்காலத்துக்குரிய நடன நிலையிலுள்ள பெண்ணின் உருவமும் பரதரின் நடன சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு நடன நிலைகளை வெளிப்படுத்தும் தன்மைமிக்கனவர்கவுள்ளன08.
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டமைந்த தமிழ் இராச்சியம் தமிழகத்தோடு நெருக்கமுற்றிருந்த தன்மையில் இங்கும் பரதக்கலையே முக்கியத்துவம் பெற்ற ஆடற்கலையாக நிலைபெற்றிருக்கமுடியும் என்பது பொதுவான கருத்தாகவேயுள்ளது. அக்காலத்தே எழுந்த வையாபாடல், கைலாயமாலை போன்ற நூல்களில் நடனம் பற்றிய பல குறிப்புகளை காணமுடியும். வையாபாடலில் வரும் ‘நச்சுவிழி நாட்டியம் செய்வோர்’, ‘ஆடும் மாதர் வலம் வர’, கறுவுமனக் கணிகையார் போன்ற பாடல் அடிகளும் கைலாய மாலையில் ‘பங்கமுடன் நாடகத்தில் மாதர் நடிக்க’ என வரும் பாடலடியும் இதனைச் சான்றுபடுத்தும். யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியுற்றபின்னர் தொடர்ந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் பரதக்கலை தமிழகத்தைப்போல் மங்கிய நிலையையே எட்டியது. இங்கு வாழ்ந்த தேவரடியார்கள் ஒழுக்கநெறி தவறியவர்களாகவே கருதப்பட்டனர். ஆறுமுக நாவலர் போன்றவர்கள் இவர்களைக் கண்டித்ததாகவும் இங்கு தகவல்களுண்டு.
கி.பி 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தே யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் தேவரடியார்களாகப் பணிபுரிந்தவர்களில் கனகி எனும் நடனமாது தலைசிறந்த நர்த்தகியாக கருதப்படுகின்றார். அவரைப்பற்றிய நூலினை யாழ்ப்பாணத்தே நட்டுவச் சுப்பையனார் என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடனக் கலைஞர் ‘கனகி புராணம்’ எனும் பெயரில் அங்கதச் சுவைபட எழுதியுள்ளார். அக்காலகட்டத்தே நல்லூர், வண்ணார்பண்ணை, மாவிட்டபுரம், இணுவில், அளவெட்டி போன்ற இடங்களிலும் தேவதாசிகள் என அழைக்கப்பட்ட சிறந்த நடனப் பெண்டிர் வாழ்ந்தமைக்கான சான்றுகளைக் கள ஆய்வுகளில் பெறமுடிகின்றது. இவர்களில் யாழ்ப்பாணம் நல்லூரில் 1915 காலகட்டத்தில் வாழ்ந்த நடனமாது ஆதிலக்சுமி சிறந்த நடன விற்பன்னராகக் கருதப்படுகின்றார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தே பரதக் கலையை நன்கு கற்றறிந்த அறிஞர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது மிகுந்த பெருமையளிப்பதாகும். தமிழகத்தின் தஞ்சையில் வாழ்ந்தவரான புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் தஞ்சை நால்வரின் பாட்டனாருமான கங்கை முத்துப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட நாட்டிய நூலான நடனாதி வாத்ய ரஞ்சனம் எனும் நூல் யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண நாவலர் முன்னிலையில் பரிசோதித்து பிரசுரிக்கப்பட்டமை இதற்கு நல்லதோர் உதாரணமாக அமையும். ‘கங்கை முத்துப்பிள்ளை, நடனாதி வாத்ய ரஞ்சனம், ஸ்ரீ அனவரதர் சன்னிதானத்து மகாவித்துவான் நெல்லையப்பபிள்ளை அனுமதிப்படி, யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண நாவலர் முன்னிலையில் பரிசோதித்தது.’ எனும் அந்நூலில் காணப்படும் குறிப்பானது இதனைச் சான்றுபடுத்தும்09