இன்றைய கேரளம் எனப்படும் சேரநாடு உட்பட்ட பண்டைத் தமிழகத்திலும் கன்னடத்தின் சில பகுதிகளிலும ஈழத் தமிழ் சிங்கள மக்களிடத்திலும், ஆழமாக வேரூன்றிய தன்மையினைக் கண்ணகி பற்றிய தொன்ம நம்பிக்கைகளும் (ஐதீகம்) வழிபாடுகளும் வெளிப்படுத்துவதாக அமையும். உண்மையில் கண்ணகி கதை பற்றிய தொன்மமானது நீண்டகால வரலாற்றினைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. வாய்மொழி வரலாறாக விரவிவந்த தெய்வீகம் பொருந்திய ஒரு பெண்ணின் கதை சங்க இலக்கியமான நற்றிணையில் ‘ஒருமுலையறுத்த திருமாவுண்ணி’ எனக் குறிப்பிடப்பட அதுவே இளங்கோவடிகளின் சிலப்பதிகார காப்பியமாக உருவெடுத்ததாகக் கருதுவர். நற்றிணையில் வரும் வேங்கை மரத்தடியில் நின்ற திருமாவுண்ணி, சிலப்பதிகாரம் குறிப்பிடும் வேங்கை மரத்தடியில் நின்ற கண்ணகி அத்தோடு தொங்க மரத்தடியில் நின்ற இயக்கி மற்றும் கேரளம், தமிழகம், கர்நாடகம் போன்ற இந்திய மாநிலங்களின் மலை ஜாதியினர் இன்றும் வணங்கிவருகின்ற பாலைமரத்டியின் தெய்வமான ‘ஒற்றை முலைச்சி’ போன்றவையும் சிங்கள மக்களிடையே நிலவுகின்ற ஏழு பத்தினிகள் கதையும் கிரியம்மா வழிபாடும் இலங்கையில் வேடுவர்களின் மரத்தடித் தெய்வமான பத்தினியும் மிகப் பழங்காலத்தை வரலாறாகக் கொண்ட தாய்த்தெய்வ வழிப்பாட்டின் வெளிப்பாடாக அமையும். இத்தகைய பழமை பொருந்திய தாய்த்தெய்வங்களை Free Goddesses என மேலைத்தேய சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கேரளத்தின் கிராமிய மக்களிடையே காணப்படுகின்ற நீலி வழிபாடானது கண்ணகியின் முற்பிறப்புப் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடும் நீலியை இணைத்துப் பார்ப்பதாகவே கொள்ளப்படும்.
இலங்கை மட்டக்களப்பில் படிக்கப்படுகின்ற கண்ணகி வழக்குரை காதையும் கண்ணகி தொன்மத்தின் பாற்பட்டதே. எனினும் வழக்குரை காதை கொண்டிருக்கும் சில அம்சங்கள் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபடுவதை நம்மால் அவதானிக்கமுடியும். இதில் குறிப்பாக அவளது தோற்றுவாய் முதல்கொண்டு திருமணம் வரையான பகுதிகளின் வேறுபாட்டினை இதன் அடக்கமாகக் கொள்ளலாம். வழக்குரை காதையில் சிவனும் உமையவளும் கைலையிலிருந்து பாண்டியனின் நெற்றிக் கண்ணை அழிப்பதற்காக நாமங்கலையை மாங்கனி வடிவில் மதுரைக்கு அனுப்பியதாகக் கண்ணகியின் தோற்றுவாய் அமையும்.
சிங்களத்தில் எழுந்த ‘பத்தினி ஹெல்ல’வும் கண்ணகியின் தோற்றுவாயை மாங்கனி மூலமே வெளிப்படுத்தும். மாங்கனியை சக்கரக் கடவுள் எனப்படும் இந்திரன் உண்ண முற்பட்டபோது அதில் ஒரு துளி பாண்டியனின் நெற்றிக்கண்ணில் விழ அது மறைந்தாக அந்நூல் கூறும். பின்னர் அம்மாங்கனியிலிருந்து அழகிய இளவரசி வடிவில் பத்தினித் தெய்வம் தோன்றியதாகவும் அது குறிப்பிடும். இதில் ஒரு முக்கிய அம்சம் யாதெனில் வழக்குரை காதையில் நாமங்கலையை சிவன் அனுப்பியதாகக் கூற, பத்தினி ஹெல்ல மாங்கனியைப் புத்தர் அனுப்பியதாகக் குறிப்பிடும். இதில் இணைவுற்றதாக ஏழு பத்தினிக் கடவுள் தோற்றம் பெறுவதையும் இன்னுமோர் தொன்மம் வெளிப்படுத்தும். காவேரிக் கரையில் விழுந்த மாங்கனியின் விதையானது ஒரு பெண்தெய்வமாகத் தோற்றம் பெற்றதெனவும் அது அம்மை, தொண்டைக் கரப்பான், குக்கல், இருமல், வைசூரி போன்ற நோய்களை தோற்றுவித்ததாகவும் அதனைக் கண்டு அஞ்சிய இந்துக்களும் பௌத்தர்களும் அத்தெய்வத்தை நோக்கி அம்மா எங்களிடம் வாருங்கள் என இரந்து வேண்ட அத்தெய்வம் பின்னர் உரமல பத்தினி, கரமல பத்தினி, கினி பத்தினி, தெவல் பத்தினி, சமன் பத்தினி, ஐரங்க பத்தினி, சித்த பத்தினி என ஏழு பத்தினியாக மாறி மக்களைக் காப்பாற்றுவதாகவும் அது அமையும். இதனை ஒட்டியதாவே கிரியம்மாவுக்கு தானம்கொடுத்து வழிபாடியற்றுவதும் அம்மக்களது நீண்டகாலப் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
பௌத்த சிங்கள மக்களிடையே பத்தினியம்மன் பற்றிய தொன்மமானது பன்னெடுங் காலமாக நிலவியதென்பதுவும் அது அவர்களது வழிபாட்டியலில் ஒரு முக்கிய அம்சமாக நிலைநிறுத்தப்பட்டதென்பதுவும் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர மற்றும் கலாநிதி மிரண்டோ ஒபேயசேகர போன்ற ஆய்வாளர்களது தீர்க்கமான முடிவாகவுள்ளது. இராவண காலம் முதலே பத்தினி நம்பிக்கை நிலைநிறுத்தப்படுவதாக கலாநிதி மிரண்டோ தனது கட்டுரையென்றில் குறிப்பிடுகின்றார். நில்கல்ல வளவ்வ எனுமிடத்தைச் சேர்ந்த பொத்குல என்பவரிடம் பெறப்பட்ட சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘ராவண கத்தா’ (இராவணன் கதை) எனும் ஏட்டுச் சுவடியில் பெறப்படும் தகவல்களை அவர் இதில் முக்கியப்படுதியுள்ளார். நீண்ட கால வாய்மொழி வரலாறாகச் சொல்லப்பட்ட சம்பவங்களை இது கொண்டுள்ளமை கவனத்துக்குரியது. இந்த ஓலைச் சுவடி மில்லாவ வன்னி பண்டார மகின்ன மகா கப்பின்ன விக்கிரமசிங்க அதிகாரி என்பவரால் எழுதப்பட்டதாகும்.
இலங்கை சப்பிரகமுவயில் இருந்து ஆட்சிசெய்த ராவணன் பத்தினி அம்மனின் ஆசிவேண்டி மத்துள ஜனபத பத்தினி அம்மனின் தேவாலயம் சென்று அவளை வணங்கியபோது மயக்கமடைந்த நிலையில் தூய தங்கத்தால் ஆன அவளது விக்கிரகத்தின் பாதத்தே அவன் விழுந்ததாகவும் அதன்போது அவனது நெற்றியில் காயமேற்பட்டு அதில் வெளியான ரத்தத் துளிகள் நிலத்தில் சிந்தியதாகவும் பின்னர் அவற்றிலிருந்து மாத்தளை பத்தினி தேவாலய வளவில் சிவப்பு நிறக் காளான்கள் உருவானதாகவும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். அத்தோடு இச்சுவடியானது வாலகம்பா என அழைக்கப்பட்ட வட்டகாமினி அபய மன்னன் குறித்தும் அம்பொக்க குன்றிலமைந்த பத்தினி தேவாலயத்தில் அவன் வழிபாடியற்றி வந்ததாகவும் குறிப்பிடும்.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட ராஜாவளி, கஜபாகு கத்தா, பத்தினி கத்தா, சிலம்பு கத்தா, பத்தினி தெய்யோ, பத்தினி படிம, தலுமுற பூஜாவ, பகம கம்புறா, பத்தினி கெல்ல, பத்தினி சிரசபத, பாண்டி நலவ, பத்தினி மாலாவ, பலங்க கெல்ல, சலம்ப சந்திய, கோகில சந்தேசய, அம்பவிதிம போன்ற இலக்கியங்களும் மற்றும் கண்ணகி வழிபாட்டிற்குரியதான சிங்களப் பத்ததிகள் போன்றவையும் இதற்குச் சான்றாக அமையும். ராஜாவளி வாய்மொழி இலக்கியவமாக இருந்து 16ம் நுற்றாண்டில் சிங்கள மொழியில் எழுத்துருப் பெற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. கோகில சந்தேசய கி.பி 15ம் நூற்றாண்டில் சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் பத்தினி தொடர்பான இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றது. பத்தினி அம்மனைப் பற்றிய சிறப்பான பாடல்களை பந்திஸ் கொல்முறா கவி கொண்டுள்ளதைப் பார்க்கலாம்
மட்டக்களப்பில் படிக்கப்படுகின்ற பொற்புறா வந்த காவியம் கண்ணகி தொடர்பில் வேறுபட்ட சில தொன்மங்களைக் கொண்டிருப்பதாக அமையினும் வரலாற்று ரீதியான பல தகவல்களை அவை வெளிப்படுத்தும் தன்மையை நம்மால் அவதானிக்கமுடியும். கலிபிறந்து 3300ஆகச் சொல்லப்படுகின்ற கி.பி 198ல் (2ம் நூற்றாண்டின் இறுதி) நாமங்கலை என்னும் அம்மன் மட்டக்களப்புக்கு வந்த கதையாக அது அமையும். இதன் பின்னணியில் தம்பிலுவில் கண்ணகி தோற்றமும் அதில் சேரத்துக் குடியினரான மழவரசன் குடியினரின் உரித்தும் வெளிப்படும். இங்கே குறிப்பிடப்படும் நாமங்கலை எனும் பெண் குறித்துக் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகத் தென்படுகின்றது.
சிங்கள மக்களின் பௌத்த வழிபாட்டில் கண்ணகியோடு தொடர்புறுத்தப்படும் நாகமங்கலையும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாக தங்களது வரலாறு கூறும் செட்டிநாடு (காரைக்குடி) செட்டிவம்சத்தினரின் தெய்வமான கோப்புடையம்மனும் ஒத்ததன்மை மிக்கவர்களாக அமைவதுவேயது. செட்டிநாட்டினர் நாக குலத்தின் ஒரு பிரிவினர் என்பதுவும் தங்கள் குல அழகியொருத்தியை சோழன் ஆசைநாயகியாக்க விரும்பிய போது அதனை ஏற்றுக்கொள்ளாது அச்சமிகுதியால் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி புதுக்கோட்டை (சிவகங்கை) மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்த காரைமரங்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் ஒழிந்து வாழ்ந்ததாகவும் பின்னர் அந்த இடம் காரைக்குடியானதெனவும் கூறுவர். கண்ணகியும் அவர்களது வம்சம் சார்ந்தவளாகவே கொள்ளப்படுகின்றாள்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒருகால் வலுவான- கிராமியத் தன்மைகொண்ட - தாய்த்தெய்வ வழிபாடாக மிளிர்ந்து 1964ல் மேல்மட்டத்தினரின் ஆதிக்க மேம்பாட்டால் சமஸ்கிருத மயமாக்கலை வலிந்து ஏற்றுக்கொண்ட கோப்பாய் பலானை கண்ணகி தொடர்பான தொன்மங்கள் மிக்க பிரமிப்பை ஊட்டுவன. யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோர்கள் கண்ணகிக்கு முதன்முதலில் சேரன் செங்குட்டுவன் விழாவெடுத்த காலத்தே கண்ணகியை நோக்கி தாயாரே நீ எங்களிடம் வருவாயா எனக்கேட்க கண்ணகியும் முழு மனதோடு ஆமெனப் பதிலளித்து கோப்பாய் வந்து பலானையில் குடிகொண்டதாக அது தொடர்பான வாய்மொழி வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தொடக்ககாலத்தினைக் கூறுவதாக அமையும் சிங்கள மக்களின் பத்தினித் தெய்வ இலக்கியங்கள் தமிழிலெழுந்ததைவிட அனேகம் என்றே கூறவேண்டும். கஜபாகு மன்னன் பத்தினியிடம் அருள்பெற்று, அம்மா! நீ எங்களிடம் இலங்கைக்கு வரவேண்டுமென விரும்பியழைக்க பத்தினியும் பெருவிருப்புடன் இலங்கை வந்ததாக அவை கூறும். அது தொடர்பான கதைகளும் கண்ணகி வழிபாடோடிணைந்த ஏழு கன்னிகள் வழிபாடும் கிரியம்மா தான வழிபாடும் சிங்கள கிராமிய மக்களிடம் இன்றும் நிலவுவதும் பத்தினித் தெய்வம் தங்களுக்குரிய தெய்வமேயென அவர்கள் வலுவான நம்பிக்கை கொண்டிருப்பதுவும் நம் கவனத்தை ஈர்ப்பதாக அமையும். இதுதொடர்பில் புகழ்பெற்ற கல்விமானும் தலைசிறந்த சமூகவியலாளருமான பேராசிரியர் கணநாத் ஒபயசேகராவின் கருத்துக்கள் நம் கவனத்தை ஈர்ப்பனவாகும்.