இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - பகுதி 2

முனைவர். ப. பாண்டியராஜா


பறவைகள் பறப்பது பறை எனப்படும். நிரை பறை, மென் பறை ஆகியவற்றை முதற் பகுதியில் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் பறத்தல்களைப் பற்றிக் காண்போம்.

வாப் பறை / வாவுப் பறை

வா அல்லது வாவு என்பதற்கு தாவு, leap, gallop என்று பொருள். பறவைகள் எப்படித் தாவிப் பறக்கும்? குதிரை போன்ற விலங்குகள் தாவி ஓடுவதைப் பார்த்திருக்கிறோம். சாதாரணமாக ஓடும்போது குதிரை நான்கு கால்களையும் மாறி மாறி வைத்து ஓடும். அது ஒரு விரைவான நடைதான். வெகு வேகமாக ஓடும்போது, முன்னங்கால்களை ஒன்று சேர்த்து நிலத்தை உந்தித் தள்ளி முன்னே பாய்ந்து, பின்னங்கால்களை ஒருசேரத் தூக்கி வைத்து ஓடும். இதனையே நாலுகால் பாய்ச்சல் என்கிறோம். தவளைகளின் இயல்பான நடையே இதுதான். அதனால் இதை ஓட்டம் என்பதில்லை. ஆனால் விலங்குகள் விரைவாகச் செல்ல முயலும் போது ஓடும் ஓட்டத்தை வாவுதல் என்கிறோம். அவ்வாறு ஓடும் குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் வாம் பரிய தேர் எனப்படுகிறது. இத்தகைய ஓட்டத்தில் சாதாரண வண்டி கலகலத்துவிடும். வண்டியின் மூட்டுகள் இறுக்கமாக அமைந்திருக்க வேண்டும். இதனையே,

வாம் பரிய கடும் திண் தேர் - மது 51

என மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். ஆசிரியர் மாங்குடி மருதனாரின் தேர்ந்த சொல்லாட்சியைக் கவனியுங்கள்.

சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி - அகம் 115/14

புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர் - அகம் 400/13

வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் – புறம் 197/1,2

என்ற அடிகளும் தாவிப்பாயும் குதிரைகளைக் குறிக்கின்றன. வாம் என்பது வாவும் என்பதன் மரூஉ. தாவும் என்பது இதன் பொருள். மான் என்பது பொதுவாக விலங்கு - இங்கு குதிரையைக் குறிக்கும். இவுளி என்பதுவும் குதிரையே. வாவுதல் என்பது எப்படி இருக்கும் என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்ள புலவர்கள் அருமையான உவமைகளைக் கையாண்டுள்ளனர். புனல் பாய்ந்ததைப் போல, காற்று நடந்துவருவதைப் போல என்ற உவமைகளைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.



பறவைகள் எவ்வாறு தாவிப் பறக்கும்? இந்த நற்றிணைப் பாடலைப் பாருங்கள்.

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வாப் பறை விரும்பினை ஆயினும் தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்குருகு எனவ கேள்மதி - நற் 54/1-4

இதன் பொருள்:

வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தி, நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று

தாவிப் பறந்து வருதலை விரும்பி்னையாயினும், தூய சிறகுகளையுடைய -

மிக்க புலவைத் தின்னுகின்ற - நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து-

கரிய காலையுடைய வெளிய நாராய்! என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!

இது நெய்தல் திணைப் பாடல். தலைவி கடற்கரையில் நின்றுகொண்டு நீண்ட நாள் தன்னைச் சந்திக்க வராத தலைவனைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் சுற்றிலும் பார்க்கிறாள். கரையோரத்தில் வெண்கொக்குகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அன்றைக்கு நிறைய இரை அவற்றுக்குக் கிடைத்ததால், மனநிறைவோடு அவை வீடுதிரும்ப எண்ணுகின்றன. நெடுந்தூரம் செல்ல வேண்டும் போலும். மிக்க விசையுடன் அவை புறப்பட எத்தனிக்கும் நேரம். தலைவிக்குச் ‘சட்டென்று’ ஓர் எண்ணம் உதிக்கிறது. இவை தலைவனின் ஊர் வழியேதானே செல்ல வேண்டும். இவற்றிடம் சொல்லி அனுப்பலாமா? என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இதோ, பறவைகள் விசைத்து எழுகின்றன. தலைவி தன் கைகளை நீட்டி, “பொறுங்கள், பொறுங்கள்” நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டுப் போங்கள் என்று அவசரம் அவசரமாக அவற்றை வழிமறித்துக் கூறுவதாக இப்பாடலை அமைத்துள்ளார் புலவர்.



மாலை 5 மணி அளவில் ஏதேனும் அலுவலகத்திற்குள் சென்று பாருங்கள். போட்டது போட்டபடி ஒரு கூட்டம் விரைந்து வெளியேறிக் கொண்டிருக்கும் – 5:10 பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரம். சிலர் தயங்கித் தயங்கிக் கிளம்பிக் கொண்டிருப்பர். இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கிறது. அதையும் ஒரேயடியாக முடித்து விட்டுப் போகலாமே என்ற தயக்கம் ஒருபுறம் – இன்னும் எத்தனை தொலைவு செல்ல வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம். அவர்கள் முடிவுசெய்ய முடியாமல் மனதுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ, அன்றைய பணியை செவ்வனே முடித்துவிட்ட மனநிறைவுடன், இன்றைக்குப் போதும், இன்றைக்காவது நேரத்தோடு வீட்டுக்குச் செல்லலாம் என்று சட்டுப்புட்டென்று தெளிந்த மனதோடு புறப்படுவார்கள். அப்போது பார்த்து நாம் பார்த்த இரண்டாம் ரக நபர், “நண்பரே, போகிற வழியில் இதைக் கவனித்து விட்டுச் செல்லமுடியுமா” என்று கேட்டால் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொள்வார் இல்லையா? அந்த உளவியலை இங்கு பயன்படுத்துகிறார் புலவர். அங்குமிங்கும் அலைந்து அழுக்குப்படாமல் (தூச்சிறை=தூய இறகுகள்) வயிறு நிறைய மீன்களை (இரும் புலா, இரும்=நிறைய)உண்ட பறவைக் கூட்டத்தில், அவற்றை முன்னின்று நடத்திச் செல்லக்கூடிய (கிளை முதல்) தலைக்கொக்கைப் பார்த்துத் தலைவி பேசுகிறாள்.

இந்தப் பின்னணியில் கொக்குகள் அவசரமாகப் புறப்பட முயலும் தோற்றத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தயக்கமின்றி நிறைவோடு அவை புறப்படுகின்றன, நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரம் வேறு. அவை எவ்வாறு பறந்து எழ முயலும்? தம் இரண்டு பெரிய சிறகுகளையும் விரைவாகவும் வலிமையுடனும் விசைத்துக் காற்றை அழுத்திக் கீழே தள்ளி மேலே எழ முயலும் அல்லவா? அதுதான் வாப்பறை - குதிரைகள் முன்னங்கால்களைச் சேர்த்து நீட்டித் தாவுவது போல.

பறவைகள் இன்னும் கிளம்பவில்லை. வாப்பறையை விரும்பின – அதாவது அவை புறப்படும் நேரம். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் அவை கிளம்பிவிடும், அதற்குள் தலைவி பேச ஆரம்பிக்கிறாள். அவை பறந்திருந்தால் எப்படி பறந்திருக்கும் எனக் கற்பனை செய்து தலைவி வாப்பறை விரும்பினை என்கிறாள்.



பெரிய சிறகுகளை உடைய பறவைகள் தம் சிறகுகளை விரைவாக அசைத்து மேலெழும்பும் அல்லது முன்னே செல்லும் பறத்தலை வாப்பறை எனலாம். கீழ்க்காணும் படங்கள் இதனை ஒருவாறு விளக்கும்.


இது பறவைகள் வாப்பறையாக மேலெழும் காட்சி. இன்னொரு காட்சியும் சங்க இலக்கியத்தில் நமக்குக் கிடைக்கிறது. அதற்குக் கொடுக்கப்பட்ட உவமை அழகினும் அழகு! அதைப் பார்ப்போமா?



ஒரு பறவைக் கூட்டம் ஒரு நீண்ட நீர்நிலையில் மீனருந்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, அந்தப் பகுதியில் மீன்கள் தீர்ந்து விட்டனவோ அல்லது அங்கு ஏதோ ஓர் இடையூறு நடந்ததோ தெரியவில்லை. அவை மொத்தமாக மேலெழும்புகின்றன. ‘மொதுமொது’ வென்று அல்ல, ஓர் அழகிய முக்கால் வட்டமாக. விசைத்து எழுந்த அந்தப் பறவைகள், சற்று உயரச் சென்றவுடன் அப்படியே வலப்புறமாக அழகாக வளைந்து மெல்ல இறங்கி, சிறிது தொலைவில், விமானம் இறங்குவது போல, அங்கிருக்கும் பூக்களுக்கு இடையே இறங்கி அமர்கின்றன. சும்மா இதைப் படிக்காமல், சற்றுக் கண்ணை மூடி, இக்காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள். எப்படி இருக்கும் என்று எண்ண முடியாதவருக்கு, புலவர் ஓர் அழகிய உவமையையும் கூறுகிறார். கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு, பெரிய வெள்ளைப் பூக்களால் ஆன ஒரு மாலையைக் கடற்கடரை ஓரமாக வேகமாக விட்டெறியுங்கள். நீங்கள் வலது கைக்காரர்தானே! மாலை எப்படி மேலே சென்று, பின் கீழே இறங்கும்? அப்படி இருக்குமாம் அந்தப் பறவைகள் மேலெழுந்து இறங்கும் காட்சி. இதோ புலவரின் வரிகள்.

விசும்பு விசைத்து எழுந்த கூதளக் கோதையின்
பசுங்கால் வெண் குருகு வாப் பறை வளைஇ
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப- அகம் 273/1-3.

வானத்தை நோக்கி வேகமாக எறிந்த கூதாளியின் மாலையைப் போல

பசிய காலினையுடைய வெள்ளாங் குருகுகள் தாவும் பறத்தலில் வளைந்து

கடலின் வளம் மிகுந்த பகுதியில் அங்கிருக்கும் மொட்டுக்களுடன் பரவி அமர,

என்பது இதன் பொருள். கூதளம் என்பது ஒருவகை வெள்ளையான பூ (convolvulus). இது வெண்ணிறத்தில், அந்தக் காலத்துக் குழாய் ஒலிபெருக்கி போன்று இருக்கும். எனவே, அதன் நிறத்தையும், பருமனையும் காட்ட, தூரத்தில் பறக்கும் வெள்ளைக் கொக்குகளுக்கு ஒப்பிடுகிறார் புலவர்.


இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள் புலவரின் வருணனையை ஓரளவு விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இவை வெவ்வேறு சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படங்களாயினும், விசைத்து எறியப்பட்ட ஒரு கூதள மாலையைப் போல் எழுந்து, பறந்து, பின்னர் அமரும் காட்சியை ஓரளவு விளக்கிக் காட்டுகின்றன.



இன்னொரு வகை வாப்பறையும் உண்டு. பொதுவாகப் பெருஞ்சிறகுப் பறவைகள் வானத்தில் பறந்து செல்லும் போது தம் சிறகுகளைப் ‘படபட’-வென்று அடித்துக் கொண்டு செல்லமாட்டா. நிதானமாக, தம் சிறகுகளை மேலும் கீழும் அசைத்தவாறு செல்லும் – காதல் காட்சியில் படகில் செல்லும் காதலன் காதலியைப் பார்த்துப் பாடியவாறே துடுப்பு அசைப்பதைப் போல. ஆனால், கால தாமதம் ஆனாலோ, குறுகிய காலத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தாலோ அவை, தம் சிறகுகளை விரைவாக அசைத்த வண்ணம் பறந்து செல்லும் – படகுப் போட்டியில் கலந்து கொள்ளும் குழுவினர் விரைவாகத் துடுப்புப் போடுவதைப் போல. இந்த அகப்பாடல் அடியைப் பாருங்கள்.

சிறு பைம் தூவி செங் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து
புகல் ஏக்கற்ற புல்லென் உலவை
குறுங்கால் இற்றி புன்தலை நெடுவீழ் - அகம் 57/1-6.

சிறிய மெல்லிய சிறகினையும் சிவந்த காலினையும் உடைய வாவல்பேடை

நெடிய தன்மையை உடைய வானத்தை தாவிப் பறத்தலால் கடந்து,

வெயில் தகிக்கும் கடுமையொடு வந்தும் கனிகளைப் பெறாமல்,

அதைப் பெறுகின்ற நாளில் கிடைக்கும் நல்ல கனிகளை எண்ணி ஏங்கிப்

புகலிடத்திற்காக தளர்ந்துபோய் வாடியிருக்கும் பொலிவற்ற கிளையையுடைய

குறிய அடியை உடைய இத்தி மரத்தின் புல்லிய உச்சியிலிருந்து தாழும் நெடிய விழுது

(உருப்பு=வெப்பம்,கடுமை; உள்ளி=நினைத்து; பையாந்து=ஏங்கி; ஏக்கற்று=தளர்ச்சியடைந்து; உலவை=மரக்கிள; கால்=அடிமரம்; இற்றி=இத்தி எனப்படும் ஒருவகை வெள்ளை அத்தி மரம்,white fig Tree,Ficus infectoria; வீழ்=விழுது)

என்பது இதன் பொருள். வாவல் என்பது வௌவால். பேடை என்பது பெண் பறவையைக் குறிக்கும். வாவிப் பறத்தலால் வாவல் என்றானது என்பர். பெருஞ்சிறகுப் பறவைகளான கொக்கு, நாரை போன்றவை பழம் தின்னமாட்டா. எனவே, வாவுப்பறை நீந்தி, கனி பெறாது என்பதால் இது வௌவாலையே குறிக்கிறது என உரையாசிரியர்கள் கூறுவதாலேயே, வாவுப் பறை என்பது பெருஞ்சிறகுப் பறவைகளுக்கே உரித்தானது என்பது பெறப்படும். நீந்தி என வருவதால் இவை வானத்தில் விரைந்து பறப்பதைக் குறிக்கிறது. எனவே, இது வாப்பறையின் மேலெழும் வகை ஆகாமல், உயரே பறக்கும் வகையைச் சேர்ந்தது எனலாம். பழந்தின்னி வௌவால்கள் வானத்தில் பறந்து செல்வது பெரும்பாலும் விரைவாகவே இருக்கும். நம் தெருக்களில்கூட இரவில் சிறு வௌவால்கள் அங்குமிங்கும் விரைவாகப் பறந்து திரிவதைப் பார்த்திருப்பீர்கள். வௌவாலின் கால்கள் சிவப்பாகவா இருக்கும்? சங்கப் புலவர் கூர்ந்து நோக்கியிருக்கிறார். இரண்டாம் படத்தைப் பாருங்கள்.


இப்பொழுது, வாவுப்பறையை விட்டுச் சற்று விலகி, ஒரு வாவு வாவி, வௌவால்களைப் பற்றிப் பார்ப்போம்.



வௌவால்கள் பொதுவாக இரு வகைப்படும். முதல் வகை நாம் தெருக்களில் இரவில் காணும் சிறு வௌவால்கள். அவை microbats எனப்படும். பெயருக்கேற்ப உருவத்தில் சிறியவை. அடுத்தவகை flying foxes, fruit bats, megabats என அழைக்கப்படுபவை. இவற்றைத்தான் நாம் பழந்தின்னி வௌவால்கள் என்கிறோம். இவை பெரியவை. இவற்றின் சில வகைகளின் சிறகுகள் நான்கடி நீளத்துக்கும் உண்டு எனப்படுகிறது. முதல் வகை வௌவால்களுக்குக் கண்கள் கிடையாது. தம் வாயினின்றும் வெளிப்படும் ஒருவகை மெல்லிய ஒலி எதிரில் இருக்கும் பொருளின்மீது பட்டு எதிரொலிக்கும் அலையைக் கொண்டு தம் வழியை அவை தீர்மானிக்கும். எனவே இவற்றை echolocation bats என்றும் கூறுவர். ஆனால் பழந்தின்னி வௌவால்களுக்குக் கண்கள் உண்டு. அவற்றால் அவை பகலிலும், இரவிலும் பார்க்க முடியும். இருப்பினும் அவை தாம் தெரிந்து கொள்ளும் பழங்களை அவற்றின் வாசனை மூலமே கண்டுபிடிக்கின்றன.

இங்கு, புலவர் வௌவாலை, சிறு பைந்தூவி செங்கால் பேடை என்கிறார். தூவி என்பது சிறகு. வௌவாலின் சிறகுகள் பச்சையாகவா இருக்கின்றன? பச்சைக் குழந்தை, பச்சை மேனி என்கிறாற்போல் இதற்கு tender என்று பொருள். அதனால்தான் உரைகாரர்கள் மென்சிறகு என்கிறார்கள். சரி, இது சிறியதாகவா இருக்கிறது? சொல்லப்போனால் இது பெருஞ்சிறகுப் பறவை இனத்தைச் சேர்ந்தது. எனவேதான் இது பறப்பதை வாப்பறை என்கிறோம். அப்படியானால், இதனைச் சிறு தூவி என்பதன் காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்! இதன் சிறகுகளைப் பற்றிக் கூறும் ஒரு பறவை ஆய்வாளர் கூறுகிறார், “The fur is very fine and silky”. இதைத்தான் புலவர் சிறு(fine) பைந்(silky)தூவி என அழகுதமிழில் குறிப்பிடுகிறார். மீண்டும் எத்துணை பொருத்தமான சொல்லாட்சி என்று கவனியுங்கள். புலவர் தாம் குறிப்பிடும் வௌவாலைப் பேடை என்கிறார். கோழி, குருவி, மயில் போன்ற பறவை இனங்களில் ஆண், பெண் வேறுபாடு காண்பது எளிது. ஆனால் வௌவாலில், அதுவும் உயரே பறக்கும் போது, அதனை ஆண், பெண் என்று காண்பது எளிதா? நம்பும்படியாக இல்லையே எனலாம். மீண்டும் பறவை ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். “ Females have one pair of mammae located in the chest region.” அதாவது பெண் வௌவால்களுக்கு மனித இனத்தைப்போலவே மார்பகங்கள் உண்டு. எனவே, உயரே பறந்தாலும் கீழிருந்து பார்த்து இனம் காணுவது எளிதானதே. இரவில்தானே அவை வெளிவரும், எப்படி இனம் காணுவது என்கிறீர்களா? புலவர் பகலில் பறக்கும் வௌவால் பேடையைப் பற்றித்தானே குறிப்பிடுகிறார்! பகலில் வௌவால்கள் பழந்தின்னப் போகுமா? நியாயமான கேள்வி! பறவை ஆய்வாளர் என்ன சொல்கிறார் என்று மீண்டும் கேட்போம்: “The camp is the base from which they make their night time foraging trips. Then they prefer nectar and pollen of native trees and rainforest fruits. Daytime is surprisingly busy for these animals that we usually think of as creatures of the night. You will see them fanning their wings to keep cool when it is hot, grooming, giving birth, tending young, mating, looking around, even flying around: all during daytime. However they will not be eating”. பகலில் அவை இரை தேடமாட்டா என்ற செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அவை கூட்டமாகத்தான் இரைதேடிப் போகும் எனவும் காண்கிறோம். தொடர்ந்து பறவை ஆய்வாளரின் கூற்றைப் படிக்கையில்தான் தெளிவு பிறந்தது. “Only once, when there was a terrible food shortage, have I seen a flying fox eating leaves during the daytime in the camp.”

எனவே, உணவு கிடைக்காத நேரத்தில் பகலில் கூட தனியாகச் சில வௌவால்கள் இரைதேடப் போகும் எனக் காண்கிறோம். ‘Camp என்பது இந்த வௌவால்கள் வாழும் இருப்பிடம். கனிகள் கிடைப்பதைப் பொருத்து அவை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். மேலும் அவை தாங்கள் கனி உண்ட பழைய இடங்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும்’ என்றும் பறவை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி, தான் கனி உண்ட ஒரு பழைய இடத்தை நோக்கித் தனியாகச் செல்லும் ஒரு பெண் வௌவாலைப் புலவர் ஒருநாள் உச்சி வெயிலில் கண்டிருக்கிறார். தலைவியை விட்டுப் பிரிந்து வறண்ட காட்டுப் பகுதியில் தனியே செல்லும் தலைவன் ஒருவன், அங்கு பழம் தேடி வந்து ஏமாந்து இருக்கும் ஒரு வௌவாலைப் பார்த்து, இப்படித்தானே தன் தலைவியும் தன்னுடன் வாழ்ந்த பழைய இன்பமான நாட்களை எண்ணி வருந்திக் கொண்டிருப்பாள் என்று எண்ணி வருந்துவதாகப் புலவர் ஒரு அருமையான கற்பனை அகப் பாடல் இயற்றுவதற்கு அவர் கண்ட தனித்த வௌவால் தூண்டுகோலாய் அமைந்திருக்க வேண்டும். முழுப் பாடலையும் படித்து இன்புறுங்கள்.

(நன்றி - http://www.bellingen.com/flyingfoxes/the_flying_foxes.htm)

இவ்வாறு சிந்தனையைத் தூண்டி நம்மை வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும் வன்மையும், இனிமையும் கொண்ட தொன்மைப் பாக்கள்தான் சங்கப்பாடல்கள்.



துனை பறை

ஆறடி உயரமுள்ள ஒரு நெடிய மனிதர், ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனைக் கையில் பிடித்த வண்ணம் சற்று விரைவாக நடந்துசெல்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரது நீண்ட கால்கள் பெரிது பெரிதாக எட்டெடுத்து வைக்க, அந்தச் சிறுவன் தன் குட்டிக்கால்களை அருகருகே தூக்கி வைத்து மிக வேகமாக நடக்க வேண்டும் இல்லையா? அந்த மனிதரின் நெடுங்கால்கள் போடும் நடை வாவு நடை - சிறுவனின் குறுங்கால்கள் போடும் நடை துனை நடை. தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் கூட, தங்கள் கால்களை மிகத் தொலைவிற்குத் தூக்கித் தூக்கி வைத்துத் தாவித் தாவிச் செல்வதற்கு மாறாக, தம் கால்களை அருகருகே எடுத்து வைத்து, ‘டகடக் டகடக்’ என்று ஓடும் அல்லவா, அதனையே துனை பரி என்பர் புலவர்கள். போர் முடிந்து தேரில் வீடு திரும்பும் தலைவன், அப்படி வரும் குதிரைகளை மேலும் அடித்து விரட்டி வருவான் என்பதை,

துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102.

என்று முல்லைப்பாட்டு வருணிக்கிறது. துனை என்பது விரைதலைக் குறிக்கும். எனவே, துனை பறை என்பது வேகமாகப் பறத்தலைக் குறிக்கும். ஆனால், துனை பறை எல்லாம் வாப்பறை அல்ல! பொன் என்றால் மின்னும். ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல – என்பது போல. அப்படியானால், மின்னுவது ஏதோ ஒன்று பொன் அல்ல என்றுதானே பொருள்! அது போல, ஏதோ ஒன்றன் துனை பறை வாப்பறை ஆகாது. வாப்பறைக்கு உரிய முக்கிய பண்பு எது? தாவுதல். அடுத்து, சிறகுகள் பெரியதாய் இருத்தல். எனவே, சிறகுகள் பெரியதாக இல்லாத குருவி, புறா போன்ற பறவைகள் பறக்கும் போது அது துனை பறை எனப்படும். அவை பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? படபடவென்று சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டு அவை பறக்கும். அவற்றின் இயல்பான பறத்தலே அதுதான்.

ஒரு மரத்தின் உச்சியில் நிறையப் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. அவற்றுக்கு இரை வேண்டும். எங்கோ தொலைதூரத்தில் கனிகள் மிகுந்திருக்கும் மரக்கூட்டம் இருக்கிறது என்ற செய்தி அவற்றுக்குக் கிடைக்கிறது. உடனே அவை விரைந்து மேலெழும் காட்சியை, மலைபடுகடாம் ஆசிரியர் விளக்குகிறார்:

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான – மலை 54,55

(கிளை=சுற்றம்; உணீஇய=உண்ண; நிவக்கும்=மேலே எழும்; புள்=பறவை; மான=போல)

வறிய நிலையில் இருக்கும் ஒரு பாணன் குடும்பம், தமக்குப் பரிசில் கொடுத்துக் காக்கக்கூடிய அரசன் ஒருவனைத் தேடிப் புறப்பட்டுச் செல்லும் காட்சியைத்தான் புலவர் துனைபறைப் பறவைக் கூட்டத்துடன் ஒப்பிடுகிறார் புலவர்.



இன்னோர் இலக்கியக் காட்சியையும் காண்போம். வேம்பு என்ற ஒரு வகை மரத்தில் நிறையப் பூத்திருக்கும் ஒரு கிளையில் வண்டுகள் மொய்த்திருக்கின்றன. அப்போது அங்கு வந்த பெண் ஒருத்தி அந்த மலர்க் கொத்துகளை இணுங்கக் கிளையை இழுக்கிறாள். வண்டுகள் பதறியடித்துப் பறந்தோடுகின்றன. இக்காட்சியை வருணிக்கும் ஓர் அழகிய கலித்தொகைப் பாடல் வரிகள் இவை:

பூங்கொடி வாங்கி, இணர்க் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனைஅரண் போல உடைந்தன்று அக் காவில்
துனை வரிவண்டின் இனம் – கலி 92/26-29

(வாங்கி=வளைத்து; இணர்=பூங்கொத்து; சினை=கிளை; அலர்=மலர்ந்த; கா=சோலை; வரிவண்டு=ஒருவகை வண்டினம்) ((பொருப்பன்)பொதியமலைத் தலைவன் போரிட்டு அழித்தபோது உடைந்து விழுந்த கோட்டையைப் போல வண்டுக்கூட்டம் உடைந்து சிதறியது)



வண்டுகளுக்கும் சிறிய சிறகுகள் தானே. எனவே துனை பறை என்பது குறுஞ்சிறகுப் பறவைகள் வேகமாகப் பறக்கும் பறத்தலைக் குறிக்கும் என்பது மேலும் உறுதியாகிறது.


(பறவைகள் இன்னும் பறக்கும்...)

 | 

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p52a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License