இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - பகுதி 3

முனைவர். ப. பாண்டியராஜா


பறவைகள் பறப்பது பறை எனப்படும். பறவைகள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி பறப்பதில்லை. நேரத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப அவை தாங்கள் பறக்கும் விதத்தை மாற்றிக்கொள்கின்றன. இதை ஊன்றிக் கவனித்த சங்கப்புலவர்கள் பறவைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாய்ப் பறப்பதை வெவ்வேறு சொற்களாலும், பொருத்தமான உவமைகளாலும் வருணித்துள்ளனர். அவற்றில், நிரைபறை, மென்பறை ஆகியவற்றை முதற் கட்டுரையிலும், வா(வு)ப்பறை, துனைபறை ஆகியவற்றை இரண்டாம் கட்டுரையிலும் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் பறத்தல்களைப் பற்றிக் காண்போம்.



5. குறும்பறை

நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி வளாகத்தில், மனைகளைச் சுற்றி நிறைய இடம் உண்டு. அதில் ஓர் அகன்ற பகுதியில் சிறுவர் விளையாட ஒரு பூப்பந்தாட்டத் திடலும் உண்டு. அடுக்குமாடி வீடுகள் அல்லவா! அங்கே நிறைய புறாக்களும் உண்டு. கால் அதர்கள் (ஜன்னல்) வழியாக வெளியில் விழும் தானியங்களையும் உணவுப்பொருள்களையும் கொத்தித்தின்ன அவை நடைவெளிகளில் நடந்துகொண்டு திரியும். விளையாட்டுத்திடலில் விளையாடும் சிறுவர் அவ்வப்போது எழுப்பும் ஆர்ப்பாட்டக் குரலால் அவை ‘படக்’கென்று இடம் மாறி ஒரு குறுகிய தூரம் பறந்து சென்று அமர்ந்துகொள்ளும். யாரேனும் அருகில் சென்றால்கூட அவை அஞ்சுவதில்லை. அந்த அளவுக்கு அவை மனித நடமாட்டத்துக்குப் பழகிப்போய்விட்டன. யாரேனும் அருகில் செல்ல நேர்ந்தால், மீண்டும் அவை குறுகப்பறந்து சிறிதளவு தள்ளிச்சென்று அமர்ந்துகொள்ளும். இவ்வாறு பறவைகள் குறுகிய தொலைவு பறந்து இடம் மாறி அமர்வதையே, சங்கப் புலவர்கள் குறும்பறை என்கின்றனர்.

நான் மேலே கூறியுள்ளது கற்பனைக் கதை அல்ல. அன்றாடம் எங்கள் பகுதியில் நடப்பதுதான். உங்களில் சிலருக்கும் அத்தகைய அனுபவங்கள் நேர்ந்திருக்கலாம்.



ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நடைபெற்ற இது மாதிரியான ஒரு காட்சி, ஓர் அருமையான அகப்பாடல் எழுவதற்கான கருவாய் அமைந்துள்ளது. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்ற ஒரு புலவர் எழுதியுள்ள அகநானூற்றுப்பாடல் ஒன்றின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ
மனை உறை புறவின் செம் கால் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் - அகம் 254:3-7

பொன்னாற் செய்யப்பெற்ற சதங்கையை அணிந்த அழகிய அடியால்
மணல் பரந்த முற்றத்தில் நிலம் வடுக்கொள்ளுமாறு செய்து
மனையில் தங்கி உறையும் புறாக்களின் சிவந்த காலினையுடைய ஆண்பறவை
தன் பெடையொடு குறுகக் குறுகப் பறத்தலைச் செய்து, பின்பு மேலே எழுந்திட
விளையாடும் தன் தோழியராகிய இளையரைக் காணுந்தொறும்-

என்பது இதன் பொருள்.



இப்பொழுதெல்லாம் பெண்கள் வெள்ளியினால் செய்த கொலுசுதான் அணிகிறார்கள். ஆனால் சங்க காலத்தில் பொன் அணிகலன்களைக் காலிலும் அணிந்திருக்கிறார்கள். இங்குக் காட்டப்பெறும் பெண்கள் மணல் நன்கு பரப்பப்பட்ட முற்றத்தில் விளையாடுகிறார்கள். அப்போது அவர்கள் தாவிக் குதிக்கும்போதோ, நொண்டியடிக்கும்போதோ அல்லது கிளித்தட்டு ஆடும்போதோ கால்களை உயரத் தூக்கிக் கீழே பதிப்பார்கள் அல்லவா! அப்போது மணலில் அவர்கள் பாதங்கள் ஆழமான கால்தடங்களைப் பதிக்கும் அல்லவா! இதைத்தான் புலவர் நிலம் வடுக்கொள அவர்கள் விளையாடினர் என்று கூறுகிறார். அப்போது நிலம் சற்று அதிரும் அல்லவா? இந்த அதிர்ச்சியில் பக்கத்தில் இருக்கும் வீட்டுப்புறாக்கள் அங்குமிங்கும் மாறிமாறிப் பறந்தெழுந்து அமர்கின்றன. இதையே புலவர் குறும்பறை பயிற்றி என்கிறார். இவை மனை உறை புறவு - அதாவது domesticated birds. எனவே, அவை மனித நடமாட்டத்துக்குப் பழகிப்போய்விட்டன. இருப்பினும், நிலம் வடுக்கொள பெண்கள் குதித்து ஆடுவதாலும், அப்போது அவர்களின் கால் கொலுசுகள் ‘சலங் சலங்’ என்று ஒலி எழுப்புவதாலும் அந்தப் பறவைகள் அச்சமுற்று அங்குமிங்கும் குறும்பறை பறக்கின்றன. இவர்கள் தங்கக் கொலுசு அணிந்திருப்பவர்கள். எனவே செல்வர் வீட்டுப் பெண்கள். அதனால், வீட்டு வேலை செய்யவேண்டியதில்லை. வெளியிலும் அதிகமாகச் செல்லமாட்டார்கள். முற்றத்தில் விளையாடுவதுதான் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. எனவே அவர்கள் நெடுநேரம் விளையாடுவார்கள். குறும்பறை பயிற்றி என்பதில் வரும் பயிற்றி என்ற சொல்லுக்கு ‘மீண்டும் மீண்டும் செய்து’ என்பது பொருள். இப்படிக் குறும்பறை பறந்து பறந்து சலித்துப்போன அந்தப் பறவைகள், இறுதியில் வேறிடம் செல்ல மேலே எழுந்துவிட்டனவாம். இந்தப் புறாவின் கால்கள் சிவப்பாக இருந்தன என்பதைக்கூடப் புலவர் சொல்ல மறக்கவில்லை. பார்த்துப் பார்த்து நுட்பமாகச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியைப் போல, பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொரு சொல்லாய்ப் பொருத்தமாகப் போட்டிருக்கும் இந்த சொற்சிற்பியின் நுணுக்கமான சொல்தேர்வை ஆய்ந்து ஆய்ந்து மகிழுங்கள். சங்கப் புலவர்கள் எந்தச் சொல்லையும் வீணே பயன்படுத்தமாட்டார்கள். எந்த ஒரு சொல்லை எடுத்துவிட்டாலும் பாடலின் தரம் குறைந்துபோகும் என்ற நிலையில்தான் பாடல் எழுதுவார்கள். இந்தப் பறவைகள் பறக்கும் காட்சி, இந்த முழுப்பாடலையும், பின்னர் ஏனைய சங்க இலக்கியங்களையும் படிக்க ஒரு தூண்டுகோலாய் அமைந்தால் மிக்க மகிழ்ச்சி.


புறாக்களின் குறும்பறையைப் பார்த்தோம். ஒரு கொக்கின் குறும்பறையைப் பார்ப்போமா? ஏற்கனவே கொக்குகளின் மென்பறையைப் பார்த்திருக்கிறோம். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தொடர்ந்து படியுங்கள் தெரியும்.



ஒரு பெரிய பண்ணை வீடு; அதாவது, ஊருக்கு வெளியே, ஓர் அகன்ற நிலப் பரப்பில், சுற்றிலும் வயல்களும், சிறிய, பெரிய மரங்கள் கொண்ட சோலைகளுமாய், நடுவில் பெரிதாக அமைந்திருக்கும் ஒரு பண்ணையாரின் வீடு. வயலில் நெல் விளைந்து முற்றிப்போய் அறுவடை செய்யப்படும் நேரம். பண்ணையாரின் மகனுக்குத் திருமணமாகி, புதுமணப்பெண் அன்றைக்கு முதல் முதலாகச் சமைக்க ஆரம்பிக்கிறாள். அதற்கு அவல்பாயசம் செய்ய எண்ணுகிறாள். உலையில் பசும்பாலை வைத்தாகிவிட்ட்து. அவலுக்காக, நன்றாக முற்றிய நெற்கதிர்கள் சிலவற்றை அறுத்துக் கொணர்ந்திருக்கிறார்கள். பொதுவாக அவல் செய்ய, வீட்டிலுள்ள காய்ந்த நெல்லைச் சற்று ஊறவைத்து, ஈரப்பதமாக்கி, உரலில் போட்டு இடிப்பார்கள். வயலில் நெற்பயிரிலேயே கொய்து எடுக்கப்பட்ட நெல்மணிகள் அல்லவா! அதை வீட்டு வேலைக்காரப் பெண்கள் அப்படியே உரலில் போட்டு இடிக்கிறார்கள். இடித்து உமியை நீக்க அவல் கிடைக்கும். இதுதான் பச்சைநெல் அவல். சங்கப் புலவர் இதனைப் பாசவல் என்கிறார். அடை என்றால் இலை என்று ஒரு பொருள் உண்டு. பச்சையான இலையை, இலக்கியங்கள் பாசடை என்னும். ஆனால், இங்கே பச்சை என்பது raw என்ற பொருள் தரும். அந்த நேரத்தில், அருகில் உள்ள ஒரு வாழை மரத்தின் உச்சியில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. நிறை கர்ப்பம் - அதாவது முட்டையிடும் பருவத்தில் உள்ள விடைக்கொக்கு. உரலில் போட்டு, நெல்லை உலக்கைகளால் இரண்டு பெண்கள் மாறி மாறி ‘ணங், ணங்’-கென்று இடிக்கிறார்கள். உலை வைத்தாகிவிட்டதல்லவா? அதனால், விரைவாகவும், வலுவாகவும் உலக்கைகளை உரலில் இறக்குகிறார்கள். இந்த இடிப்புச் சத்தத்தால் கொக்கு வெருண்டுபோகிறது. வாழை மரத்தைவிட்டுப் பறந்து சென்று, அருகில் இருக்கும் ஓர் உயரமான மா மரத்தின் கிளையில் அமர்கிறது. இப்போது கொக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறது. இருப்பினும் உலக்கைச் சத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அப்படிக் கேட்கும் ஒவ்வொரு இடிப்பொலியின் போதும், பயந்த கொக்கு அடுத்தடுத்த கிளைகளுக்கு மாறிமாறிப் பறந்து சென்று அமர்கிறது. இவ்வாறு கிளைவிட்டுக் கிளைதாவி, மாறி மாறிப் பறந்து அமரும் கொக்கையே, புலவர் குறும்பறை பயிற்றும் குருகு என்கிறார். நக்கீரர் இயற்றிய ஓர் அருமையான அகநனூற்றுப் பாடலின்(141) பகுதி இதுதான்.



கூழைக் கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண் குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடும் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் - அகம் 141/16-21

கூழையாகிய கூந்தலையும் சிறிய வளையலையும் உடைய மகளிருடன்;
பெரிய வயலில் விளைந்த நெல்லின் விளைந்த கதிரினை முறித்து,
பசிய அவலாகக் குற்றும், கரிய வயிரமாய உலக்கையின்
விரைந்த இடிப்புக்கு அஞ்சிய, நிறைந்த சூலினையுடைய வெள்ளிய பறவை,
இனிய குலையினையுடைய வாழையின் உயர்ந்த மடலில் இராது,
நெடிய காலையுடைய மாமரத்தின்கண் குறுகப் பறந்து பறந்து இருக்கும்

கூந்தல் என்பது பெண்களின் தலைமயிர். கூழை என்பது குட்டையான எனப் பொருள் தரும். வேலைக்காரப் பெண்களுக்குத் தங்கள் தலைமயிரைப் பேணிக்கொள்ள நேரம் இருக்காது. சும்மா அள்ளி முடிந்துகொண்டு வருவார்கள். சரியாகப் பேணப்படாத தலைமயிர் குட்டையாகத்தானே இருக்கும். எனவேதான் உலக்கை இடிப்போரின் கூந்தலை கூழைக்கூந்தல் என்கிறார் புலவர். தொடி என்பது வளையல். வேலைக்காரப் பெண்கள் பெரிய வளையல்கள் அணிந்திருந்தால் வேலைசெய்யும்போது வளையல்கள் முன்னும் பின்னும் நகர்ந்து இடைஞ்சலாக இருக்கும்தானே! எனவே, அவர்கள் கையை இறுகப் பிடிக்கும் வண்ணம் சிறிய வளையல் அணிந்திருக்கிறார்கள் - மொட்டைக்கையாய் இருக்கவேண்டாம் என்பதற்காக. குறும் என்பது குறுகிய அல்லது சிறிய எண்ணிக்கையிலான என்ற பொருள்தரும். உலக்கையை நன்றாக வயிரம்பாய்ந்த மரத்திலிருந்து செய்வார்கள். காழ் என்பது மரவயிரம் - அதாவது நன்றாக விளைந்து முற்றிய மரத்தின் பகுதி. உலக்கை மரத்தால் ஆனதால், அதன் தலையில் ஓர் இரும்புப் பட்டை அடித்திருப்பார்கள். அதனையும் காழ் எனலாம். (படத்தைப் பாருங்கள்) அவல் இடிப்பதைக்கூட புலவர் எத்துணை உன்னிப்பாகக் கவனித்து, ஒன்றுவிடாமல் வருணிக்கிறார் பாருங்கள்!


புலவர் சொல்லவரும் அகப்பொருள் கருத்துக்கும், இந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு என்று அறியவேண்டுமானால் முழுப்பாடலையும் படியுங்கள்.

மென்பறை என்பது மெதுவாக அங்குமிங்கும் பறந்து திரிதல். அது ஓர் அகன்ற வெளியில், சற்று நீண்ட தொலைவுக்குக்கூட இருக்கலாம். ஆனால் குறும்பறை என்பது ஒரு சிறிய பகுதியில் மீண்டும் மீண்டும் இடம் மாறி அமர்வதற்காகப் பறப்பது என்பது இதனால் பெறப்படுகிறது அல்லவா!



இவ்வாறு நாம் சொல்வதை உறுதிப்படுத்த மேலும் ஒரு குறும்பறையைக் காணலாம். இது ஒரு வயல் பகுதி. ஆயினும் அகன்ற பரப்பு அல்ல. ஒரு வயலின் ஒரு சிறிய பகுதி. வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்கால் அமைத்திருப்பார்கள். ஆனால் எல்லா வயல்களுக்கும் வாய்க்கால் வழியே நீர் செல்ல வழி இருக்காது. சற்று உள்ளே தள்ளியிருக்கும் வயலுக்கு, அதன் அருகிலுள்ள வயலின் வரப்பைச் சற்று உடைத்துவிட்டு அதிலிருந்து நீர் எடுத்துக்கொள்வார்கள். இருப்பினும், முந்தைய வயலின் எல்லா நீரும் அடுத்த வயலுக்கு வடிந்து ஓடிவிடாதபடி, அந்த உடைப்பைச் சற்றுத் தடுத்து வைத்திருப்பார்கள். எனவே முதல் வயலில் நீர் தேங்கி ஓரளவுக்கு நிறைந்து, தடுப்புக்கு மேலே வரும் நீர் வழிந்து அடுத்த வயலுக்குப் பாயும். நீர்வளம் மிக்க பகுதிகளில் அவ்வாறு நிறைந்து வழியும் நீரே அருவியாய்ப் பாயும். ஆற்றிலிருக்கும் சில மீன்கள், மடைவழியே வாய்க்காலுக்கு வந்து, வாய்க்கால் வழியே சென்று வயலுக்குள்ளும் இருக்கும். அந்த மீன்களைக் கொத்தித் தின்ன குருகுகள் வயலுக்குள் அமர்ந்து குறும்பறையாய்ப் பறந்து திரியும். ஆற்றிலிருக்கும் மீன்களுக்கு, ஆற்றில் புதுப்புனல் வேகமாக வரும்போது, அதை எதிர்த்து நீந்துவதில் அலாதி மகிழ்ச்சி. எப்படியோ வயலுக்குள் வந்துவிட்ட மீன்கள், வயலுக்குள் இருக்கும் சிறிதளவு நீரில் வளைந்து வளைந்து நெளிந்துகொண்டிருக்கும்போது, தடுப்பின் மேல் புதுநீர் வேகமாகப் பாயும்போது, பெருமகிழ்ச்சி கொண்டு வேகமாகத் தடுப்புக்கு அருகில் வந்து, வழிந்து விழும் நீரில் எதிர்த்து ஏற முயலும். இவ்வாறு எதிர்நீச்சல் போடும் மீன்களை எளிதில் பிடித்து விடலாம்.

அப்படிப்பட்ட ஒரு கொக்கைக் காட்டுகிறார் ஒரு புலவர். இவரும் நக்கீரரே. அகநானூற்றில் 346-ஆம் பாடலின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

---------- ---------------- ------------ இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறும் தறி குத்தித் தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பய
பார்வல் இருக்கும் .. .. - அகம் 346:1-11

இதன் பொருள்:

----------------- --------------------- -------------------- கூரையின் உட்பக்கச் சாய்ப்பின் மேலுள்ள
மாரிக்காலத்துச் சுண்ணச் சாந்து பூசிய ஈரமான வெளிப்புறத்தை ஒத்த
இறகினையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது,
வெள்ளியாலான வெண்மையான பூவிதழ் போன்ற கயல் மீனைப் பெறுவதற்காக,
கள்ளை மிகுதியாக உண்ட களிப்பினால் மிக்க செருக்கினைக் கொண்ட உழவர்,
காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, இனிய சுவையுடைய
மெல்லிய தண்டையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே வைத்துக் கட்டி
பெரிய நெற்பயிரையுடைய வயலில் பசிய பள்ளங்களை அடைப்பதற்கு,
சிரமப்பட்டுச் செய்த, உறுதியான திறப்புக்களின் வளைந்த தடுப்பின்
மேலே பொங்கி வழிந்து விரையும் நீரைப் பார்த்து, மெல்ல மெல்லச் சென்றவாறு
கூர்த்து நோக்கியிருக்கும் ...



இறை = இரண்டு பக்கமும் சரிவான வீட்டுக்கூரையின் உட்பக்கம்; கூரை, பொதுவாக நீண்ட சோளத் தட்டை அல்லது கேப்பைத்தாள் ஆகியவற்றால் வேயப்பட்டிருக்கும். மழைக் காலத்தில் ஒழுகும் என்பதால், உட்பக்கம் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டிருக்கும். சுதை என்பது சுண்ணாம்பும், நுண்மணலும் கலந்த கலவை - சாந்து எனப்படும். மழைக்காலத்தில் நீர் இறங்குவதால் இந்த சாந்துப்பகுதி நனைந்து வரிவரியாகத் தெரியும். கொக்கின் நனைந்த இறகுகள் போன்று என்கிறார் புலவர். What a comparison என்று சொல்கிறமாதிரி தோன்றுகிறதல்லவா? சிறகு என்பது இறக்கை, wing. இறகு என்பது இறக்கையின் ஓர் இழை, feather, quill என்பர். கூரல் என்பது இறகு. அது நனைந்திருக்கிறது என்கிறார் புலவர். கொக்குக்கு இறகு ஏன் நனையவேண்டும்? ஆற்றிலோ, கடற்கரையிலோ மீன் பிடிக்கும் கொக்குக்கு இறகு நனையத் தேவை இல்லை. நம் கொக்கு வயலில் அல்லவா இருக்கிறது. நெற்பயிருக்கு இடையில் குறும்பறை பறந்து திரியும் போது பயிர் உரசி இறகு நனைந்துவிடும் அல்லவா! நனைந்த பறவை வெகு தொலைவு பறக்கமுடியாது. மேலும், ஒரு வயல் என்பதுவும் சிறிய பரப்புத்தானே. வளர்ந்த பயிர்களுக்கு ஊடே வளைந்து நெளிந்து திரியும் மீன்களைப் பிடிப்பதுவும் கடினம். எனவே, குறும்பறை பறந்து பறந்து களைத்துப்போயும் நனைந்து போயும் உள்ள கொக்கு, புதிதாக நீர் வந்து, வாய்மடையின் வழியே உள்ளே பாயும்போது, தடுப்புக்கு மேல் பொங்கி வழியும் நீரில் எதிர்த்து ஏற முயலும் கயல்களைப் பிடிக்கக் கவனமாய் உற்றுப்பார்த்த வண்ணம் பையப் பைய எட்டெடுத்து வருகிறது என்கிறார் புலவர். பார்வல் என்பது பார்வை - சாதாரணப் பார்வை அல்ல. காவல் பரணில் (watch Tower) நிற்கும் காவலர் (security guard) பார்க்கும் பார்வை.


அடுத்து ஓர் அன்னப்பறவையின் குறும்பறையைக் காண்போம். புராணங்களிலும், இதிகாசங்களிலும், நம் சங்க இலக்கியங்களிலும், ரவிவர்மா ஓவியங்களிலும் (சில திரைப்படப்பாடல்களிலும்) அன்னம் என்ற ஒரு பறவையைப் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் (பெரும்பாலான உயிரியல் பூங்காக்களிலும்) அன்னங்கள் இல்லை. ஆகவே, அன்னங்கள் முன்பொரு காலத்தில் புலம்பெயர் (migratory) பறவைகளாக இருந்து இப்போது அவை வேறுநாடுகளுக்கு மாறிச் சென்றிருக்கவேண்டும்.

அன்னப்பறவை என்றாலே, நட்புக்கு இலக்கணமாக விளங்கிய கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பும், பிசிராந்தையாரின் பாடலும்தான் நினைவுக்கு வரும். இதோ அந்தப் பாடலின் ஒரு பகுதி.

அன்னச் சேவல் அன்னச் சேவல்
------------ ---------------- ---------------
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயின் இடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ - புறம் 67:1, 6-9



இதன் பொருள்:

குமரியாற்றின் பெரிய துறையில் அயிரைமீனை மேய்ந்து,
வட(திசைக்கண் இமய)மலைக்குப் போகின்றாயாயின், இவ்விரண்டிற்கும் இடையதாகிய
நல்ல சோழநாட்டுக்குச் சென்று பொருந்தின், உரையூரின்கண்
உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி,
இங்கு குறும்பறை என்பதற்கு இளம்பேடை என்று பொருள் நீட்டிக்கப்படுகிறது.

(ஔவை.துரைசாமி உரை:- குறும் பறை - இளமை பொருந்திய பெடை யன்னம். குறுமை, இளமை குறித்து நின்றது; குறு மகள் என்றாற்போல, பறத்தலை யுடையது பறை.)

இங்கும், பறை என்பது பறத்தல் என்றே பொருள்கொள்ளப்பட்டு, பறத்தலையுடைய பறவைக்கு ஆகிவந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனினும் குறும் என்பதற்கு குறுக என்ற பொருள் எவ்வாறு இங்கு பொருந்தும் என்று காண்போம்.

கிராமப்புறங்களில் அநேகமாக எல்லார் வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள். இரவில், குஞ்சுகளுடன் சேர்ந்த கோழியைப் பஞ்சாரங்களில் அடைத்துவைப்பர். மற்றபடி பெரிய கோழிகள் தத்தம்பாட்டுக்குக் கிடைத்த இடங்களில் அடைந்துகொள்ளும். மாலையில் பொழுது சாயும் நேரத்தில், கோழிகள் எங்கு மேய்ந்துகொண்டிருந்தாலும் வீடு திரும்பும். வீட்டின் முன்புறம் முற்றத்தில் திண்ணைக்கு மேலே கூரை போடப்பட்ட பகுதியில் நெட்டு-குறுக்குச் சட்டங்கள் இருக்கும். கீழேயிருந்து தாவிப் பறந்து அந்த விட்டத்தில் கோழிகள் அடையும். கோழிகள் ஒவ்வொன்றாக வரவர இடநெருக்கடி அதிகமாகும். மேலும் கோழிகளுக்கே இயல்பான பழக்கம் - அவை ‘சட்’டென்று ஓரிடத்தில் நிலைகொள்ளமாட்டா. அங்குமிங்கும் தாவித் தாவிப் பறந்து இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அதுதானே குறும்பறை.



நெடுநல்வாடையில் புலவர் நக்கீரர் இந்தக் காட்சியை அழகாக வருணிக்கிறார்.

மனை உறை புறவின் செங்கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப - நெடு. 45 - 48

இது ஒரு மாலைநேரக் காட்சி. இரண்டு புறாக்கள் கூதிர்காலத்து அடைமழையில் இரவென்றும் பகலென்றும் அறியாமுடியாமல், உண்ணக்கூட வெளியில் செல்லாது, தம் இருப்பிடத்திலேயே தங்கி. மாலை நேரத்தில் தம் உள்ளுணர்வினால் அடையும் நேரம் என உணர்ந்து மதலைகளில் மாறிமாறி இருக்கும். மதலை என்பது தூண்களின் உச்சியில் சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பிதுக்கம். அங்கு வீட்டுப்புறாக்கள் அடையும். புலவர் பிசிராந்தையாரும் தாம் பாடும் நேரம் “கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை” என்கிறார். மாலையில் பறவைகள் வீடுகளில் அடையும் இந்த இயல்பினைக் கருத்தில் கொண்டால், உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ என்ற தொடருக்கு ‘உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண் குறுகக் குறுகப் பறந்து தங்கி’ என்ற பொருள் சிறந்து விளங்கும் என்பது விளங்கும்.


குறுகிய இடத்தில், குறுகக் குறுகக் குறும்பறை பறந்த பறவைகளை விட்டு, இப்போது நெடிய இடத்தில், நெடுக நெடுகப் பறக்கும் பறவைகளைப் பார்ப்போமா!

6. நோன்பறை

நாம் இறுதியாகக் கண்ட குறும்பறை அன்னங்கள் புலவர் பார்க்கும்போது என்ன செய்துகொண்டிருந்தன என நினைவுக்கு வருகிறதா? குமரியில் அயிரை மாந்தி, வடக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. ஒருவேளை அவை வடமலைக்குப் பெயர்ந்துகொண்-டிருக்குமோ எனப் புலவர் பாடுகிறார். குமரி எங்கே, இமயம் எங்கே, அத்துணை தொலைவு அன்னப்பறவைகள் பறக்குமா? பறக்கும் - காரணம் அவை புலம்பெயர் பறவைகள்.



குயில், மயில், குருவி, பருந்து, காக்கை போன்ற பறவைகளை நாம் ஆண்டு முழுவதும் பார்க்கலாம். காரணம் அவை நம் உள்ளூர்ப் பறவைகள். ஆனால், கொக்கு, நாரை போன்ற பறவைகளை ஆண்டு முழுவதும் நாம் பார்க்க முடியாது. வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களில் ஆண்டில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே காணப்படும் பறவைகள் வெளிநாட்டுப் பறவைகள். இவைகளை migratory birds என்பர். மேல்நாடுகளில் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கடும் குளிர் நிலவும். எங்கிலும் பனிமயமாக இருக்கும். பறவைகளுக்குத் தங்குமிடங்கள் மட்டுமல்ல, உணவும் கிடைப்பது அரிது. எனவே, அந்தப் பருவத்தில் அவை நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதிகளுக்குப் பறந்து வந்து, முட்டையிட்டுக் குஞ்சும் பொரித்து, அவற்றை வளர்த்துப் பறக்கப் பழக்கி, (அதற்குள் மேல்நாடுகளில் பருவநிலை மாறிவிட) மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பப் போய்விடும். இவ்வாறு பறவைகள் புலம்பெயர்ந்து திரிவதையே migration என்கிறார்கள். அன்னங்கள் புலம்பெயர் பறவைகள் என்று பார்த்தோம். அவற்றில் ஒருவகைப் பறவைகள் கிழக்கு ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் வாழும். குளிர்காலங்களில் அவை தெற்கு நோக்கிப் பறந்து, இமயமலையைக் கடந்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் குடியிருக்கும் என்று பறவை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, அன்றைய தமிழர்கள் அன்னங்கள் இமயமலையில் குடியிருப்பதாக நம்பினார்கள். இதன் அடிப்படையில்தான் பிசிராந்தையாரின் (முந்தைய)பாடல் அமைந்துள்ளது. அதைப் போன்ற இன்னொரு பாடலை நற்றிணையில் காணலாம். பரணர் எழுதிய குறிஞ்சித்திணைப் பாடல் அது.

நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும்
அசைவில் நோன்பறை போலச் செலவர
வருந்தினை வாழியென் உள்ளம் ஒருநாள்
காதலி உழையள் ஆகவும்
குணக்குத்தோன்று வெள்ளியின் எமக்கும்ஆர் வருமே - நற் 356

இதன் பொருள்: நிலத்தின்கண் ஆழ்ந்த இடத்தினையுடைய தெளிந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய
ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னங்கள்
பொன்பொருந்திய நெடிய சிகரங்களையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற
தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய
வளராத தம் இளம் குஞ்சுகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லும்போது
அவற்றின் தளர்ச்சியற்ற பொறுத்தலுள்ள பறத்தலைப் போல, சென்றுவர
நீ வருந்திநின்றனை; என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; இனி மற்றொரு பொழுதிலாயினும்
நங் காதலி நம் அருகில் இருப்போள் ஆக
கிழக்கில் தோன்றும் வெள்ளி போல நமக்குக் கிடைக்குமோ?


அல்கிரை = அல்கு இரை = வைத்து உண்ணும் உணவு. இன்று பலபேர் ஒருநாள் நிறைய சமைத்து, உண்டது போக மீதியை குளிரூட்டியில் (refridgerator) வைத்து அன்றாடம் எடுத்துச் சுடவைத்துச் சாப்பிடுகிறார்களே - அதுவும் அல்கு இரை தான்! ஒய்தல் = கொடுத்தல்; அசைவில் நோன்பறை = அசைவு இல் நோன் பறை; அசைவு = தளர்ச்சி; நோன் = பொறு, To endure, bear, suffer patiently - as hunger; (Tamil Lexicon) தெளிந்த கடல்பகுதியில் இரையை எடுத்துக்கொண்டு, அதைத் தன் குஞ்சுகள் வைத்து உண்ணுவதற்காக வடக்கே இமயமலையில் அந்தக் குஞ்சுகள் இருக்குமிடத்தை நோக்கி அன்னம் பறந்து செல்கிறது. நீண்ட தொலைவு செல்லவேண்டும் அல்லவா! எனினும், அவை தளர்வு கொள்வதில்லை. அதுமட்டும் அல்ல, அதனால் ஏற்படும் வலிகளைப் பொறுத்துக்கொண்டே பறக்கிறது. தளர்வு இல்லாத, பொறுமையுடன் கூடிய - நோவுகளைச் சகித்துக்கொள்ளும் பறத்தல். அதுவே நோன்பறை. புலம்பெயர் அன்னங்கள் ஆயிரக்கணக்கான மைல் தூரத்தை, இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து சென்று கடக்கக்கூடியவை என்கின்றனர் பறவையியலார். எனினும், இதைப் பார்த்த புலவருக்கு, “சற்றும் வலிக்காதோ, சலிப்புத்தான் தோன்றாதோ” என எண்ணத் தோன்றுகிறது. நோன் பறை என்பதை வலிய சிறகு என்றே உரைகள் கூறுகின்றன. எனினும் அசைவில் நோன்பறை போல வருந்தினை என்று புலவர் கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும். சிறகோ வலிமையானது, சிந்தையோ தளரவில்லை - அப்புறம் என்ன வருத்தம்? நோன் = பொறு, To endure, bear, suffer patiently - as hunger; என்ற தமிழ்ப் பேரகராதியின் பொருளில் நோன்பறையின் போதுள்ள உள்வருத்தம் வெளித்தெரிகிறதல்லவா!

விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் என்ற வருணனையைப் பாருங்கள்! புலவர் கற்பனையாக இதைச் சொல்லவில்லை - நேரில் கண்டே இவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவாகிறதல்லவா! விலங்குதல் என்றால் விலகி இருத்தல். பெரும்பாலான பறவைகளைப் போலன்றி, அன்னத்தின் சிறகில் இறகுகள் அடுக்கடுக்காய் இருப்பதைப் படத்தில் காணுங்கள். மேலடுக்கில் இருப்பவைதான் தூவி எனப்படும் மெல்லிய இறகு. மன்னர்களுக்கு படுக்கை மெத்தை செய்யப் பயன்படும் என்று நெடுநல்வாடை கூறுகிறது.


அன்னங்களில் ஏழு வகை உண்டு. அவற்றில் ஐந்து வகை அன்னங்களுக்குக் கால்கள் கருப்பாக இருக்கும். தென்னமெரிக்காவில் வாழும் இருவகை அன்னங்களுக்குக் கால்கள் சிவப்பாக இருக்கும் என்று பறவையியலார் கூறுகின்றனர் (The legs of swans are normally a dark blackish grey colour, except for the two South American species, which have pink legs - நன்றி - விக்கிப்பீடியா) ஆனால் தென்னமெரிக்க அன்னங்கள் புலம்பெயர்வதற்காக அங்கேயே சற்று வடக்கு நோக்கிப் பறக்கும் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். Mute swan (Cygnus olor)என்ற ஒரு வகை அன்னங்கள் மேற்கு ஐரோப்பிய - ஆசிய நாடுகளில் வசித்து, புலம்பெயர இந்தியா வரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றுக்குக் கால்கள் கருப்பாகவே இருக்கும் என்று கூறுகின்றனர். அவற்றில் ஒரு சில குஞ்சுகளுக்குப் பிறவியிலேயே நிறமி செல்களில் (colour pigments) ஏற்படும் குறைபாடுகளால் கால்கள் சிவப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவற்றை அவர்கள் Cygnus immutabilis என்கின்றனர். ஆனால் இவை மிகவும் அருகியே காணப்படும் என்றும் பெரும்பாலும் அவை பெண்ணாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இங்கு புலவர் காட்டும் அன்னமும் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். எனவே இந்த அன்னம் தென்னமெரிக்க அன்னமாகவோ அல்லது நிறம் மாறிய ஐரோப்பிய அன்னமாகவோ இருக்கவேண்டும்.

(பறவைகள் இன்னும் பறக்கும்...)

 | 

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p52b.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License