தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
26. ‘சூடிய பூ சூடற்க’ சித்தரிக்கும் பன்மிய மானுட வாழ்வு
சு. மகாராஜன்
முன்னுரை
தமிழ்ப் படைப்புலகில் ஒவ்வொரு படைப்பாளியும் தான் ரசித்து வாழ்ந்த சமூக மனிதர்களின் வாழ்வைச் சிறுகதை, புதினம், கவிதை, ஊடகம் எனப் பல வடிவங்களில் நாள்தோறும் படைத்து ஒவ்வொரு மனிதனின் இருத்தலையும் பதிவுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் இலக்கியப் படைப்பென்பது எதிர்காலத் தலைமுறையின் வாழ்வியல் முன் நகர்விற்கு, பயனுடையதாக அமையும். இங்கு நாஞ்சில் நாடன் எழுதிய ‘சாகித்திய அகாடமி’ விருதுபெற்ற ‘சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதைத் தொகுப்பு வழி பிரதிபலிக்கும் பன்மிய மானுட வாழ்வை இக்கட்டுரைச் சுட்டிக்காட்டுகிறது.
நாஞ்சில் நாடன்
தமிழ் எழுத்துலகில் தன்னை தனித்ததொரு நிலைப்பாட்டில் அடையாளப் படுத்திக் கொண்டவர்களாகப் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிறந்த சமூகநோக்கம் கொண்டவராக விளங்குபவர்களில் அதிமுக்கியமானவராகத் திகழும் சி. சுப்பிரமணியம் (எ) நாஞ்சில் நாடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் எனும் ஊர்க்காரர். இவர் படைப்புத் தளத்தில் தனது ஆளமையை வெளிப்படுத்தும் விதமாகச் சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை என எழுதிப் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘சூடிய பூ சூடற்க’ (2007) எனும் சிறுகதைத் தொகுப்பினுடாக வெளிப்படும் ‘பன்மிய மானுடவாழ்வு’பற்றி இக்கட்டுரைச் சொல்ல முற்படுகிறது.
வரிசைக் கிரம்ம வாழ்மனிதர்
கிராமம் என்பது ஓர் நாட்டின் அடையாளம். இங்கே பண்பாடு, நாகரிகம், அடிப்படைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம் இயற்கையோடு அமைந்த மனநிறைவான வாழ்வு என அனைத்துக்கும் ஆதாரத்தளமாகிய நிலையில், நவீனத்துவத்தின் விளைவால் கிராமம் மாறுதலுக்குட்படும் போது மனிதர்கள் நகரமயமாதல் சூழலுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்படுகிறது. இந்நிலையினை நாஞ்சில் நாடனின் ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் சிறுகதையில் நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது பற்றிக் கூறும்பொழுது, “லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஒருமுறி. பத்துக்குப் பத்து எனும் போது இடைச் சுவர்களின் கனம் முக்காலடிவீதம், நீளவாக்கிலும் அகலவாக்கிலும் கழித்துக் கொள்ளவேண்டும். அதுவே வரவேற்பறை, டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர் ஒய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஏகன் தானே” (ப.10) என்ற வரிகளில் விளக்கிக் காட்டுகிறார். மேலும் லைன் வீடுகள் கிடைப்பதற்கான சிரமங்களைக் கூறும்பொழுது, “கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் எனும் எண்ணத்துக்கு உள்ளே இருந்தால் மட்டுமே வாடகைக்குக் கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வீடு கொடுப்பதில்லை என்பதில் அரசாங்கத்தை விடக் கெடுபிடியாக இருந்தனர் வீட்டுக்காரர்கள், வாடகைக்கு வரும் போது குடிவருவோரின் மொத்த எண்ணிக்கை நாலுக்குள் தான் என்றாலும், உத்தேசமாய் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இறந்து போகலாம் என்று எண்ணத்தக்க வயதான பெற்றோர் இருந்தாலும் லைன் வீடுகள் வாடகைக்குத் தரப்படமாட்டா” (பக்.10-11) என்பதான வரிகளில் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதையின் வரியில் மேலும மும்பை போன்ற பெருநகரத்தில் பிழைப்புக்காகச் சென்று லைன் வீட்டில் வாசிப்பவர் நிலையை, “மும்பை தாராவியில், கோவண்டியில், சுன்னாப்பட்டியில், மான் கூர்டில், கோலிவாடாவில் இந்த லைன் வீட்டை மூன்றாகப் பிரித்து வீட்டுக்கு எட்டுப் பேர் ஆணும் பெண்ணுமாய், குழந்தையும், முதியவருமாய், தாயும், பிள்ளையுமாய் பிழைத்து வாழ்வார்கள்” (ப.11) என்று நாஞ்சில் நாடன் தன் சிறுகதையில் எடுத்துரைக்கிறார்.
இரவுநேரக் காவற்பணியாளர்
‘கூர்க்கா’ எனும் சொல் நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களைக் குறிக்கும் சொல். இமயமலையின் ஒரு பகுதியான ‘கூர்க்’ பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இப்பெயரடைவு உருவானதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இந்திய, பிரிட்டிஷ் படைப் பணியில் இருந்தவர்கள். தமிழகத்தின் சில இடங்களில் இரவுநேரக் காவற்பணியிலும் ஈடுபட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்தியவர்கள். இவர்களின் வாழ்வை நாஞ்சில் நாடன் ‘தன்ராம்சிங்’ என்னும் சிறுகதையில், “கூர்க்காக்கள் என்போர் வாட்ச்மேன் அல்லர். நாள் பூரா, வாரம் ஏழு நாள் டூட்டி, தங்குவதற்கு தொழிற்சாலை வளாகத்தில் பின்புற மூலையில் சிறியதோர் கூண்டு உண்டு. அவர்கள் அவ்வளவாகச் சிறுவிடுப்புகள் எடுப்பதில்லை. நோய்வாய்ப்பட்டிருந்தாலும், எழுந்து உட்கார்ந்திருந்தால் போதுமானது. நிர்வாகம் காருண்ய அடிப்படையில் கூர்க்காவுக்கு மாத்திரம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எல்லா விடுப்புகளையும் சேர்த்து மொத்தமாக வழங்கும். ஊருக்குப் போகும் போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துவிட்டுப் போவான். போகவர பாதிலீவு போய்விடும். ஈராண்டுக்கு ஒருமுறை ஒருமாதம் தாம்பத்யம், தன்ராம்சிங் விடுப்பில் போனதையே நாம் மறந்திருக்கும் போது, ஒருநாள் காலையில் சிரித்தப்படி சல்யூட் அடிப்பான்” (ப.85) என எடுத்துக்காட்டுகிறார். அதாவது, மேற்சுட்டியவற்றில் வாழ்வியல் இயக்கத்தை தங்குமிடம், விடுப்பு, தாம்பத்ய வாழ்வு எனப் பேசும் நாஞ்சில் நாடன் கூர்க்காக்களின் குடும்பத்தில் யாரும் இறந்தால் செய்யும் சடங்குகளையும் தன் சிறுகதையில் பேசுகிறார். அதாவது,“பதினைந்து இருபது நாட்களுக்கு ஒன்று எனவரும் கடிதங்களில் சில மிக வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். தந்தியும் தொலைபேசியும் உதவாத மலைப்பிரதேசங்கள் தாய், தகப்பன் இறந்து போனாலும் பெண்டுபிள்ளைகள் இறந்து போனாலும் தபால் உறைதான். பத்துப் பதினைந்து நாட்கள் சென்று கிடைக்கும் தபால் பார்த்து நேரில் செல்ல வேண்டுமானால் மேலும் பத்துப் பதினைந்து நாட்கள் என்றாலும் உயிரின் பிரிவல்லவா? மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் செய்தி போகும் ஒவ்வொரு உறவுக்காரக் கூர்க்காவுக்கும் ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சௌபாத்தி கடற்கரையில் கூடுவார்கள். மரநிழல் பார்த்து, வட்டமாய் உட்கார்ந்து, கண்கள் கலங்க நினைவுகளைக் கூறுவைத்து, சடங்குகள் செய்து, தீவளர்த்து, அதில் தகவல் வந்த கடிதத்தை உறைவுடன் சேர்த்து எரித்து, பின்பு நெருப்பை ஆற்றி, சாம்பலைக் கொண்டுபோய் அரபிக் கடலில் கரைத்து, மொட்டை அடித்து, சமுத்திரத்தில் குளித்து, அவரவர் நினைவு சுமந்து பிரிந்து போவார்கள்” (பக்.87-88) என்று குடும்ப உறுப்பினர் இறப்பிற்குக் கூட கலந்துகொள்ள இயலாத நடைப்பிணங்களாக இருக்கும் நேபாளக் கூர்க்காக்களின் சடங்கியல் சார்ந்த வாழ்வையும் சிறுகதை வரிகளில் நாஞ்சில் நாடன் எடுத்துரைத்துள்ளார்.
இறைசேவைவாழ் மனிதர்
‘நம்பியார்’ என்பவர் இறைவழிப்பாட்டு சேவைகள் செய்யும் பட்டர் ஆவார். இவர்கள் ஆதிசைவர்களின் மருவு என்றும் பார்ப்பனர்களின் உட்பிரிவு என்றும் கூறுவர். சாத்தாக்கள் என்று அழைக்கப்படும் வழிபாட்டுத் தீவிரம் இழந்து போன கோவிலுக்கு இறைசேவை செய்து வருபவர். இவர்கள் வாழ்வில் வறுமை சூழந்திருக்கும் அவலத்தை ‘பரிசில் வாழ்க்கை’ எனும் சிறுகதையில் “நம்பியார் போல பூசைக்கான கூலிநெல்லை, பொலியளவு மரக்காலுக்கு அளப்பார்களா கொத்து அளவு மரக்காலுக்கு அளப்பார்களா என்று தெரியாது. கடவுளுக்கு வஞ்சனை செய்வார்களா எனும் நம்பிக்கை உண்டு நம்பியாருக்கு. பொலியில் அளந்த நெல்லானால் காயப் போட்டு குத்தினால் கோட்டைக்கு பத்தரை மரக்கால் பச்சரிசி இருக்கும், குருணையும் சேர்த்து, சண்டு புடைத்த நெல்லானால், எட்டுமரக்கால் அரிசி. இதில் மூன்று கோயில் பூசைச் செலவுகள், சாப்பாடு, துணிமணி, பிள்ளைகளின் படிப்பு, வைத்தியம், நல்லதுகெட்டது, நாள்கிழமை - நாளும் கிழமையும் நலிந்தவர்க்கு ஏது என்றாலும் கைத்தாங்கலாக நடந்து கொண்டிருந்தது குடித்தனம்” (ப.63) என்ற வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் “பூசைநேரம் இடைஞ்சல் இல்லாமல், அவர் பூசை செய்யும் மூன்று கிராமங்களிலும் குழந்தை பிறந்தால், பெண்பிள்ளை சமைந்தால், எவரும் உயிர் நீத்தால் நடக்கும் சடங்குகளில் புண்ணிய நீர் தெளிக்கக் கூப்பிடுவார்கள். தர்ப்பை, ஓமக் குச்சிகளுடன் போகவேண்டும். நாலணா தட்சணையும் பக்காபச்சரிசி, தேங்காய், உருண்டை சர்க்கரை, கால்பக்கா பருப்பு, சீப்புவாழைப் பழம், தண்டு, நாலுகத்தரிக்காய், இரண்டு வாழைப் பழம், சின்னப் பூசணி, இளவன், வெள்ளரி, புடலை, சேனை என அரைக் குட்டிச் சாக்குதேறும். காரியங்கள் முடிந்து குட்டிச் சாக்கை தலையில் சுமந்து, சடங்கு நடந்த வீட்டை திரும்பிப் பார்க்காமல், எவரும் எதிர்ப்பு வராமல் படி இறங்கிப் போகவேண்டும். பின்னாலிருந்து வீட்டு மூதாட்டியின் குரல் கேட்கும் “திரும்பிப் பார்க்காம போவும் ஓய்” என்று இளக்காரத்துடன், பாதையில் கண்ணில் படுபவர் கேட்பார்கள் சற்றும் குறையாத கேலியுடன் “ஓய் நம்பியாரே! நல்லகோளுதான் இண்ணைக்கு! அம்புடையும் அவிச்சுத் திம்பேரா, விலைக்கு குடுப்பேரா ஓய்?’’ என்பார்கள்” என்கிற வரிகளில் வறுமையிலும், ஊராரின் கேலிக்குட்படும் நம்பியாரின் வாழ்வையும் நாஞ்சில் நாடன் தன் சிறுகதையில் சித்தரித்துள்ளார் எனலாம்.
அயலக மனிதர்
தன்னுடைய நிரந்தர இடம் விட்டு பிற இடத்துக்குச் செல்பவர் அயலக மனிதராகக் கருதப்படுவர். இத்தகைய அயலக மனிதகளாகப் பிற மாநிலம் செல்லும் போது பிரச்சினைகளும் சிக்கல்களும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை ‘வளைகள் எலிகளுக்கானவை’ எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதையில், “சவம் காட்டுமிராண்டிக் கூட்டம் எங்கேருந்துதான் வாறானுவளோ?” “போனவருசம் இதேபோல மருத போற வண்டியிலே பத்து அஞ்நூறுவேரு...?” “குளிக்கவும் மாட்டான், குண்டியும் களுவமாட்டான்”, “டிரஸ்ஸீக்கு பஸ்காரத்தைப் பாத்தியா? தார்ப்பாய்ச்சிக் கெட்டும், தொப்பியும் சட்டையும்...” (ப.24-25) என்பதான வரிகளில் எடுத்துரைத்து “எப்படி சம்மணம் போட்டு உக்காந்திருக்கான் பாரு, கெழட்டு கூதிமவன். அவுனுக்கு அப்பன் வீட்டு வண்டிமாரி!’’ “டிக்கட்டு கூட வாங்கமாட்டாணுவோ!” “வேற ஏதாம் பெட்டியிலேமாறி இரியும் வே...” “சொல்லுகம்லாவே” அடுத்த பெட்டிக்குப் போங்கோ...”(ப.26) என்கிற சொற்பிரயோகத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார் சிறுகதை ஆசிரியர். இங்கு கன்னியாகுமரி சுற்றுலா வந்து திரும்பும் பயணியை அயலகமனிதர் என்ற ஒரே காரணத்தால் அதிகாரத்துடன் மனிதநேயமற்ற முறையில் திட்டுவதும், காயப்படுத்துவதுமான போக்கு இருப்பதைத் தன்னுடைய சிறுகதையில் படம் பிடித்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன் எனலாம்.
முடிவுரை
எழுத்தாளர்கள் வெவ்வேறான மனிதர்களின் இருத்தலையும், குணயியல்புகளையும் பதிவுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் நாஞ்சில் நாடன் ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதையில் லைன்வீடு வாழ் மனிதர், இரவுநேரக் காவற்பணியாளர், இறைசேவைவாழ் மனிதர் ஆகிய மூவரின் வறுமையான வாழ்வையும், அயலகமனிதர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் சிறுகதையில் வெளிப்படுத்துகிறார் எனலாம். கூர்க்காவின் வாழ்வியலை எடுத்துரைத்து அவர்களுக்கான வாழ்வியல் நெருக்கடிகளையும் நம்முன் விவரிக்கும் விதமாக நாஞ்சில் நாடனின் சிறுகதைத்திறன் அமைந்துள்ளது எனலாம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.