தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
30.சோலை சுந்தரபெருமாள் சிறுகதைகள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள்
முனைவர் க. ராதிகா
முன்னுரை
சமூகம் என்பது ‘மக்கள் குழு மனிதர்களின் கூட்டம்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. சமூகம் தனிமனிதனால் உருவாக்கப்பட்டதல்ல, தனிமனிதர்களின் கூட்டு முயற்சியினால், ஒன்று கூடி உருவாக்கப்படுகிறது. மனிதன் தன் உணர்வுகளை, கருத்துக்களைக் கொடுத்தும், பெற்றும் கற்றும் தன்னைப் பிறருடன் ஈடுபடுத்திக் கொள்கின்றான். தனிமனிதன் தனது ஒற்றுமை உணர்வினால் ஒன்று கூடியும், முரண்பாடுகளால் மாறுபட்டும் உணர்வுகளால் வேறுபடுகின்ற போது. தோன்றுகின்ற அமைப்புகளைச் சமூகம் என்று குறிப்பிடுகின்றனர். காலம் காலமாக வளர்ந்து வரும் மனித குலத்தின் குணநலன்களை, வாழ்க்கை முறைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இலக்கியங்கள் சுட்டிக் செல்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியங்களின் பாடுபொருள்களிலும் வடிவஅமைப்பிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், படைப்பாளி தன் படைப்பில் தன் காலச் சமுதாயத்தைப் பிரதிபலிக்காமல் இருந்ததில்லை. தனித்துச் செயல்பட இயலாத, குழு உணர்வுடைய மனிதனே இலக்கியத்தின் படைப்பின் அடித்தளமாகிறான். ஆகவே, படைப்பாளியும் சமுதாய அங்கத்தினன் ஆவான்.
சமுதாயம் - சொல்லாராய்ச்சி
தமிழ் மொழியகராதி ‘சமுதாயம்’ என்பதற்கு “கூட்டம், சங்கம், பின்னணி, ஊர்ப்பொது” (1) போன்ற பல்வேறு பொருள்களைத் தருகிறது. ஆங்கிலம் - தமிழ் அகராதியொன்று “கூட்டு வாழ்வுக்குழு, மன்னாயம், நட்புக்குழு, சேர்க்கை, தோழமை, தொகுதி, குடிமை, பண்புடையோர் குழு” (2) என்று சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
“சமுதாயம் என்ற சொல்லைச் சமூதாயம் எனப் பிரிக்கலாம். ‘சமூ’ என்பது ‘நல்ல கூட்டம்’ எனப் பொருள்படும். ‘தாயம்’ என்ற சொல் தாய்வழிக் கூட்டத்தைக் குறிப்பது. எனவே சமுதாயம் என்பது நல்ல கூட்டத்தைக் கொண்டே அமைப்பு எனப் பொருள்படுகிறது” (3) இவ்வாறு சமுதாயம் என்ற சொல் பல பொருள்களால் விளக்கப்படுகிறது.
சமுதாயம் என்பது என்ன?
‘ராபர்ட் ரெட் பீல்ட்’ என்பவர், ‘சிறிய சமூகம்’ தமது நூலில் தனி நபர். மக்கள் கூட்டம், நாடு, நாகரிகம் எனப் பலவகை உருவில் மனித இனம் காட்சி அளிக்கிறது என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய, மனித இனம் ஒன்று கூடி வாழ்வதற்கும், வாழ்க்கையின் பயன்களை ஒருவருக்கொருவர், பிறரோடு, தாமும் பகிர்ந்து கொண்டு துய்ப்பதற்கும் ஏற்ற சூழ்நிலையைக் கொண்டிருப்பின் அந்த மக்கள் கூட்டம் சமூகம் எனப்படும் என்று வி. ஏ. வாசுதேவராஜீ கருகிறார்.
“சமூகம் மனிதவர்க்கத்தினால் உருவனாது” (4), “சமூகம் மக்களின் திரள்” (5) என்று தமிழ்ச் சொல் விளக்க அகராதி பல்வேறு சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் சமூகச் கட்டமைப்பு ஆகும்” (6)
சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற நூலில், “சமுதாயம் என்பது நோக்கங்களின் முழுமையையும் உள்ளடக்கிய சமூகக்குழு” (7) எனப்படுகிறது. “வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பின் கீழ் வாழும் மக்களுடைய சமூக வாழ்க்கையின் முழமையான அமைப்பே சமுதாயம்” (8) என்று எஸ். கே. பாஸ்கர் கிஸ்பர்ட் விளக்கம் தருகிறார்.
சமுதாயப் பார்வையும் சிறுகதையும்
“ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ள அந்தப் பிரச்சினையை மட்டும் தனித்துவப்படுத்திச் சிந்திப்பது ஒரு வகை. அதே பிரச்சினையைப் புரிந்து கொள்ள அதனுடன் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டுள்ள சமுதாயத்தின் மொத்த நிகழ்வில் - இயக்கத்தில் - அந்தப் பிரச்சினையை நிறுத்தி வைத்து ஆய்வு செய்வது மற்றொரு வகை. இந்த இரண்டாம் வகை ஆய்வே சமுதாயப்பார்வை” (9) என்கிறார் மேலாண்மை பொன்னுச்சாமி.
“சமுதாயத்தை ஊடுருவிப் பார்க்கும் பார்வை... மனித சமுதாயம் என்பது சாதி, மத பொருளாதாரத்தைத் தன்னகத்தே கொண்டது. அவைகளுக்கு இடையில் நடக்கும், நல்லவைகள், கெட்டவைகள், பயன்கள், தேவையானவைகள், தேவையற்றவைகள் என்று பலவற்றையும் அறிவதே சமுதாயப் பார்வை” (10) என்கிறார் எஸ். முருகேசன்.
“தேசப் பொருளாதாரச் சிதைவுகளினால் மக்களின் உயிர் வாழ்க்கை நிலையும் நாகரீகமும், கலாச்சாரமும், மனிதத்தன்மையும் மட்டுமல்ல, கிராமக் குடும்பங்களின் உள்மனசுகளும் அசுரத்தனமாய் சிதைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றன” (11)
இத்தகைய சமுதாயப் பார்வையுடன் கூடிய சிறுகதைகள் சோலைசுந்தரபெருமாள் சிறுகதைகளில் இடம் பெறுகின்றன.
போலித்தனங்கள்
பிள்ளைகளின் நலனுக்காகத் தன் உழைப்பினால் தேயும் பெற்றோர்களையும் அவ்வுழைப்பின் மூலம் சுயநலங்களையும் போலித்தனங்களையும் நாடிடும் இளைஞர்களின் போக்குக் குறித்துக் கூறுவதாக ‘வண்டல்’ என்ற சிறுகதையில் இடம் பெறும் “ஆராயியால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை, பணம் போன போவட்டும், அவன் நல்லபடியா வரணும் தினம் தினம் வேண்டுதல் தான், அவன் வரும் வரை வயித்துல நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பாள்” (12) என்று வரிகள் அமைந்துள்ளன.
இளைஞர்களின் போலித்தனங்களுக்குப் பெற்றோர்களின் அறியாமையே காரணம் என்றும், அவர்களது கல்வி அறிவின்மையும், பிள்ளைகள் மீது அவர்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான பாசமும், இளைஞர்களின் போலித்தனத்திற்குரிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுகிறது.
வறுமைப் பிரச்சினை
வறுமை இன்று நேற்றல்ல தொன்று தொட்டே சமுதாயத்தைப் பிடித்து ஆட்டுகின்ற ஒன்றாகவே இருந்து வருகிறது.
“குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடுவும்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி” (13)
என்று பசிக்கொடுமையைப் பற்றிச் சாத்தனார் மட்டுமல்ல சங்கப் புலவர்கள் பலரும் பாடியுள்ளமையை நமது முற்கால இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
பண்பாட்டு வறுமை, புத்தியின் வறுமை போன்ற இதர வறுமைகளைத் தவிர்த்து, இங்குப் பொருளாதார வறுமைப் பற்றிப் பேசப்படுகிறது.
“பொருளாதார, ஏற்றத்தாழ்வுக்கும் மனித வாழ்வின் அவலத்திற்கும் இன்றைய சமூக அமைப்பே முழுமுதற்காரணம், உழைப்பின் மீது மதிப்பு வைத்து வாழத்துடிக்கும் மக்களுக்கும் கூட இந்தச் சமுதாயம் வாழ்வளிக்க அவர்களது வயிற்றுப் பாட்டுக்கு வேலைதர முன்வரவில்லை” (14) என்ற கருத்தினை ஆசிரியர் படித்தும் வேலையில்லாது வறுமையில் துன்புறும் ‘சேகர்’ என்ற பாத்திரத்தின் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“இன்னாமையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னாதது”
என்று வறுமையை விடக் கொடிது, எது? என்று வினவ வறுமையை விட வறுமையே கொடிது என்று கூறிடும் வள்ளுவர்,
“இன்றும் வருவது கொல்லலோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு” (15)
என்று வறுமை ஏழைகளைப் படுத்தி வைக்கும் பாட்டை வெளிப்படுத்துகிறார்.
“பச்சப் பாலனுக்கு ராவிலகூட ஒண்ணும் கொடுக்கல்ய்யா... ஒரு பாலு கொடுத்தீயோன்னா பண்ணை அய்யா வந்தோன வாங்கினு வந்து தாரேனுங்க... கெஞ்சினார்” (16) ‘எதிர்பார்ப்புகள்’ என்ற கதையின் மூலம் தையம்மாவின் வறுமை நிலையை உணர்த்தும் முகமாக மேற்கூறிய வரிகள் அமைந்துள்ளன.
படித்தவர்கள் உழைக்க முன்வராத நிலை
படித்த இளைஞர்கள் தாங்கள் படித்தபடிப்பிற்கேற்ற வேலை செய்ய தான் எண்ணுகிறார்கள். ஆனால் உழைக்க முன்வருதில்லை எனலாம். “இதுக்குத்தான் எல்லாத்தையும் வித்து எம்.ஏ., படிக்க வச்சேனா? “இங்கே எதுக்கு வந்தே? அங்கேயே ஏதாவது கிடைக்கிற வேலையைப் பாத்துகிட்டு இருந்துட வேண்டியது தானே?” (17) என்று சேகரின் தந்தை படித்து முடித்துவிட்டு காலத்தை வீணாக்குவதை நினைத்து குமுறுகிறார்.
ஆசிரியர்கள் தன்நிலை தாழ்தல்
ஆசிரியர்கள், தங்களுடைய சொந்தக் காரியங்களை கவனித்து விட்டு, அதற்குப் பின் பள்ளிக் கூடத்திற்குச் செல்கின்றனர். இதனால் தங்களுடைய காரியங்களைப் பார்த்துவிட்டு வந்த அலுப்பால், பள்ளியில் வந்து பாடம் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் நன்கு உறங்குகிறார்கள் என்பதை “தூண்” என்ற சிறுகதை சித்திரிக்கின்றன.
“அவரோட மருமவன் எல்லாராலும் இளைய சோழன்னு அழைக்கடும் பாண்டியன் “ப்பேன்” காத்துக்கு கீழ் தலைக்கு பிள்ளைகளின் கட்டுரை நோட்டு புத்தகக்கட்டை வைத்துக் கொண்டு காலை செளிரியமாய் நீட்டிப் போட்டபடி நல்ல தூக்கத்தில்...” (18) என்று ‘தூண்’ என்ற கதையில் வரும் வரிகள் ஆசிரியரின் பொறுப்பற்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஆணுக்கு நிகர் பெண்ணுக்கும் கல்வி
‘புதுயுகம்’ என்ற கதையில், வசந்தா என்பவளின் மகள் பானுமதி. மகன் பாஸ்கர், தன் மகனை மட்டும் படிக்க வைக்க வேண்டும் பானுமதி பெண் என்பதால் படிக்க வைக்க வேண்டாம். சமையல் செய்துவீட்டு வேலையைப் பார்த்தால் போதும் என்று கூறுகிறாள். பின்பு, பாஸ்கரின் பிடிவாதத்தால் பானுமதியும் மேற்கல்வியைத் தொடர வசந்தா ஒத்துக் கொள்கிறாள் என்பதைச் சித்திரிக்கின்றது.
“பெண்ணாம் பெரிய பெண்ண... தனியா வுட்டுட்டு நாம எப்படி இங்க...? தம்பி இப்டிக் கேட்டா...? வசந்தாவின் மனசுக்குள் கும்பல் கும்பலாய் சண்டை வாய்க்கு வாய் வார்த்தைத் தடித்து நின்றது. ஒரு முடிவுக்கு வந்தாள். யாரு கேட்டா என்ன? எம் புள்ளைங்க படிக்கிறது. பெத்த நமக்குத் தானே பெரும... அந்த விடியல் பானுவுக்கு சந்தோஷ ரெக்கைக்கட்டிவிட்டது. அந்த சந்தோஷம் இந்த யுகாந்திர பறவைக்கு மட்டும் தானா?” (19) என்ற வரிகள் மூலம் பெண்ணுக்குக் கல்வி அவசியம் என்பதைத் தாய் உணர்வதை அறிய முடிகிறது.
ஆணுக்கு நிகராகப் பெண்ணும் கல்வி கற்று முன்னேற வேண்டும். அதனைப் பழைய தலைமுறையினர் ஒத்துக் கொள்ளும்படியாக ஆசிரியர் ‘புதுயுகம்’ என்ற கதையைப் படைத்துள்ளார்.
காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்கள்
‘இன்னார்க்கு இன்னார் என்று’ என்ற கதையில் சங்கரன்பிள்ளை என்பவரின் மகன் ராகவன், காதலித்த பெண்ணை மணந்து கொண்டான். இதனால் மகனை வெறுத்த சங்கரன் பிள்ளை, தன் மனைவி இறந்ததைக் கூடத் தெரியப்படுத்தவில்லை. சங்கரன்பிள்ளை உடல்நிலை சரியில்லாது மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிந்த மருமகள் உடனே மாமனாரைப் பார்க்க ராகவனும் செல்வியும் குழந்தையுடன் வந்தார்கள். துளசித் தண்ணீர் ஊற்றக் கூட சம்மதிக்காது இறுதிவரை பிடிவாதமாக இருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது இக்கதை.
‘இன்னார்க்கு இன்னார் என்று’ என்ற கதையில் ‘ராகவா’ இந்தா துளசித் தண்ணீரை, உன் கையாலே தகப்பனாருக்கு கொடு’ அலங்காரம் குவளையை அவனிடம் நீட்டினாள். வேண்டாம் என்று சிரமப்பட்டுச் சொன்னவர் அலங்காரத்தின் கையில் துளசித் தண்ணீரைக் கொடுக்கச் சொல்லி சைகை காட்டினார்” (20) என்ற வரிகள் மூலம் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவனை இறுதிவரை ஒதுக்கி வைத்த தகப்பனாரின் பிடிவாதத் தன்மையைக் காணமுடிகின்றது.
முடிவுரை
சோலை சுந்தர பெருமாள் காணும் சமுதாயம், கனவுகளை வளர்த்துக் கொள்கிற குழந்தையைப் போல அழகியப் பொருட்களுக்கு ஆசைப்படுகின்ற சமுதாயம் எனலாம். அச்சமுதாயம் ஆசைகள், ஏக்கங்கள் காரணமாக நம்பிக்கைகளை, நெஞ்சில் தேக்கிக் கொண்டு வாழ்கின்றது எனலாம். தற்போது நம்பிக்கைகள் வேரற்றுப் போகும் போது கூக்குரலிட்டு அழுகின்ற, அச்சமுதாயம் சில வேளைகளில் எதிர்ப்பட்டவற்றின் மீது உடனே பாய்கின்றது. இன்னும் சில நேரங்களில் மௌனமாக அழுது முகம் புதைத்துக் கொள்கின்ற சமுதாயமாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது.
அடிக்குறிப்புகள்
1. தமிழ் மொழியகராதி, ப-582
2. English - Tamil Dictionary (Ed.) by A. Chidambaranatha Chettiar, P-161.
3. ச.மாயாண்டி, சு. சமுத்திரத்தின் சத்திய ஆவேசம் காட்டும் சமுதாயப் பார்வை, ப-7
4. எஸ்.கே. பாஸ்கல் கிஸ்பர்ட் (தமிழாக்கம்;; ஜே. நாராயணன்) சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப.20
5. தமிழ் லெக்சிகன், ப-130
6. சி.இ. மறைமலை, இலக்கியத் திறனாய்வு ஓர் அறிமுகம், ப-57.
7. எஸ். கே. பாஸ்கல் கிஸ்பர்ட் (தமிழாக்கம் : ஜே. நாராயணன்) சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள் ப-21.
8. மேலது பக் - 46-47
9. ஜே. எஸ்தர்கிறேஸி கல்கி போட்டிச் சிறுகதைகளில் சமுதாயப் பார்வை (1988-1989) ப-82
10. மேலது
11. மேலது ப.82
12. சோலைசுந்தரபெருமாள்;, வண்டல் ப.15
13. முத்துச் சண்முகம் மற்றும் இராம பெரிய கருப்பன், அகிலன் கருத்தரங்க ஆய்வுரைகள், பக் 91-92
14. மா. இராமலிங்கம் அகிலனின் கலையும் கருத்தும், ப-16
15. எஸ். இராமகிருஷ்ணன், திருக்குறள் ஒரு சமுதாயபார்வை, ப-96
16. சோலை சுந்தரபெருமாள், எதிர்பார்ப்புகள், ப-25
17. சோலை சுந்தரபெருமாள், வேலை ப-75
18. சோலை சுந்தரபெருமாள், தூண் ப-75
19. சோலை சுந்தரபெருமாள், புதுயுகம் ப-105.
20. சோலை சுந்தரபெருமாள், இன்னார்க்கு இன்னார் என்று, ப.37.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.