முன்னுரை
இருபதாம் நூற்றாண்டில் தோன்றி சிறந்து விளங்கும் இலக்கியங்களில் சிறுகதையானது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். புனைந்து எழுதப்படும் கதை வடிவம் சிறுகதையாகும். உண்மை நிகழ்வுகள் மற்றும் நகைச்சுவை கலந்தே சிறுகதைகள் எழுதப்படுகின்றன. இவற்றையே தொல்காப்பியர்,
“பொருளோடு புணராப் பொய்மொழி
பொருளொடு புணர்ந்த நகைமொழி”
என்று இலக்கணத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறுகதை விளக்கம்
சிறுகதை அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும். மேலும் தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சக்கட்டம் முடிவு என்ற ஐந்து கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். குதிரைப் பந்தயத்தின் தொடக்கம், முடிவு போல் வேகம் உடையதாக இருக்க வேண்டும். கிளைக்கதைகள் இருக்கக் கூடாது. சிறுகதை படிக்கும் போது படித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு இல்லாமல், சிறுகதை கூறும் கருப்பொருளை சம்பவம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சிறுகதை படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் தன் கருத்தைப் பாய்ச்ச வேண்டும். கதாசிரியரின் கலை, கற்பனை, சொல்லாட்சி, அவர் கூற விரும்பும் செய்தி போன்றவை பளிச்சென தெரிதல் வேண்டும். சிறந்த சிறுகதை தாமாகவே சிறந்த முறையில் அமைந்து விடுகின்றது.
தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் முன்னோடிகளும்
தமிழ்ச் சிறுகதை வடிவம் பெறுவதற்கு முன், உரைநடையில் வீரமாமுனிவர் இயற்றிய ‘பரமார்த்த குரு கதை’, சந்திரவண்ணம் பிள்ளையின் ‘கதாசிந்தாமணி’, வீராசாமிச் செட்டியாரின் ‘விநோதரசமஞ்சரி’, செல்வகேசவராயரின் ‘அபிநவக் கதைகள்’ போன்றவை வெளிவந்து சிறுகதை காலத்தைத் தொடங்கி வைத்தது.
“இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராமானுஜீலு நாயுடுவின் ஆசையின் முடிவு (1910), நமச்சிவாய முதலியாரின் புலவர் வறுமை (1911), தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திரக் கதைகள் (1915), மாதவையாவின் குசிகர் குட்டிக் கதைகள் (1924) வெளிவந்தன” (மு.அருணாச்சலம், இலக்கிய வரலாறு, ப. 375)
இக்கதைகள் சிறுகதை என்ற வடிவ அமைப்பை பெற்றவையாக இடம் பெறவில்லை. ஆனால் வ.வே.சு. ஐயர் வடிவ அமைப்பைத் தொடங்கி வைத்தார். எனவேதான் சிறுகதையின் தந்தை என்ற நிலையில் போற்றப்படுகின்றார். இவரது முதல் படைப்பான ‘மங்கையர்க்கரசியின் காதல்’ இத்தகுதியைப் பெற்றது. இதில் இடம் பெற்றுள்ள ‘குளத்தங்கரை அரசமரம்’, மரம் கதை சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
வ.வே.சு. ஐயரைத் தொடர்ந்தே பாரதியாரும் சிறுகதைகள் படைக்கத் தொடங்கினார். அவரது படைப்புகளில் பூலோகரம்பை, ஆவணி அவிட்டம், வேணுமுதலி சரித்திரம், மன்மதராணி, சுவர்ணகுமாரி போன்றவை பாரதியால் எழுதப்பட்டது. வடிவச் செறிவு மிக்கக் கதைகளாகக் காந்தாமணி, பண்டாரத்தின் கதை, மிளகாய்ச் சாமியார் போன்றவை சிறப்பு பெற்று விளங்கியவையாகும்.
பாரதி
11.12.1882 ஆம் ஆண்டு எட்டையபுரத்தில் பிறந்த பாரதியார் தன் கவிதை மூலம் உலக மக்களை ஒரு குடைக்குள் அமரச் செய்த பெருமைக்குரியவர். இவர் தன் படைப்புகளில், சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் வித்திட்ட பெருமைக்குரியவர். இவரது கவிதை, கட்டுரை அறிந்திட்ட மக்கள் உண்டு. ஆனால் சிறுகதை அறிந்த மக்கள் மிகக் குறைவுதான்.
தாகூரின் சிறுகதைகளை ரசித்தது, அவற்றை மொழிபெயர்த்தது. அவரது தமிழ்வர்ணனை நடை சிறப்பாக அமைந்திருப்பது ஆகிய மூன்றுடன் அவருக்குள்ளே எழுந்த படைப்பு ஆர்வம், அவரது தேசிய உணர்ச்சி, சமூக சமுதாய ஈடுபாடு ஆகியவையும் சேர அதுவரையும் ஒன்பது ஆண்டுகளாகக் கவிதை எழுதி வந்த பாரதிக்கு சிறுகதையும் எழுதத் தூண்டுதலாக இருந்துள்ளன. அதன் விளைவாகத்தான்‘ஆறிலொரு பங்கு’ சிறுகதை என்கின்றார் சி.சு.செல்லப்பா. இத்துடன் தமிழ் மொழியில் சிறுகதை உதயமாவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சிறுகதை முன்னோடிகள்
சிறுகதை உருவாவதற்கு சில பத்திரிக்கையும், ஆசிரியர்களும் தங்கள் படைப்புக்களைத் தியாகம் செய்துள்ளனர். அவ்வரிசையில் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், மௌனி, பி. எஸ். இராமையா, ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்பிரமணியன், லா. ச. ராமமிர்தம், சிட்டி, தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
மேலும் சமுதாயத்தில் பெண்களின் பிரச்சனைகளைத் தங்களது எழுத்துக்களின் மூலம் 1970ல் தடம் பதிக்கத் தொடங்கினர். பெண் சுதந்திரம் என்பது புதிய அர்த்தம் பெற்றது. அவர்கள் கற்ற கல்வி அவர்களைப் புதிய திசையில் செலுத்தியது. பெண்களுக்கே உரிய சிந்தனை தமிழ்ச் சிறுகதைகளில் மையம் கொண்டது.
பெண் எழுத்தாளர்கள்
ஆண்கள் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்ததோடு அல்லாமல், பெண்களும் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். இந்நிலை 1970 முதல் தொடங்கியுள்ளது. ஆர். சூடாமணி, இராஜம் கிருஷ்ணன், இலட்சுமி, வாசந்தி, சிவசங்கரி, அம்பை, ஆண்டாள் பிரியதர்ஷினி, திலகவதி, உஷா சுப்பிரமணியன், சிவகாமி, உமாமகேஷ்வரி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
சிறுகதை நடை
“தேவையற்ற வருணனைகள் சிறுகதையில் இடம் பெறக்கூடாது. ஆனால் சொற்கட்டு மிக முக்கியமானது. பயனற்ற ஒரு சொல் கூட சிறுகதையில் அமையக்கூடாது. கதையின் நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். ஒரு கதையைப் படித்து முடித்த பின்னர் அதில் முழுமையும் நிறைவும் இருப்பது புலனாக வேண்டும். இத்தகைய முழுப் பண்பைப் பெறாதவை வெறும் நிகழச்சிக் கோவையாக அமையுமேயன்றி சிறுகதை ஆகா” என்று தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் கா.வாசுதேவன் குறிப்பிடுகின்றார்.
ஒரு கதையின் பொருளும் நோக்கும் எதுவாகவாயினும் இருக்கலாம். ஆனால் அதன் இயல்பு ஒரு வகையில் உறுதியாக இருக்க வேண்டும். கதையில் இடம் பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கதையின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைந்திருத்தல் வேண்டும்.
கதைக்குரிய கருப்பொருளை முடிவு செய்து அது முற்றுப் பெறப் பாத்திரங்களை அமைத்தல், கருவால் வந்த கதை என்பர். குறிப்பிட்ட குணச் சித்திரத்தை முடிவு செய்து கொண்டு நிகழ்ச்சிகளையும் சூழல்களையும் அமைத்தல் குணச்சித்திரத்தால் வந்த கதை என்பர். மேலும் குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவிக்க ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டு கதை அமைத்தல், உணர்ச்சி பதிவால் வந்த கதை என ஸ்டீவன்சன் கூறுகின்றார்.
சிறுகதை பற்றிக் கூறும் அறிஞர்கள்
இலக்கியத் தரமுடைய சிறுகதைகள் 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது என அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றுள் சில கருத்துக்கள்
எட்கர் ஆலன்போ, “சிறுகதை என்பது தன் பெயருக்கு ஏற்ப சிறிய வடிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும். அளவிலும் அது சொல்லும் கருத்திலும் முழுமை பெற்றிருத்தல் வேண்டும்” என்று கூறுகின்றார்.
‘சிறுகதை’ என்பது, எளிமையான அல்லது ஒளிமையாக விளங்க வேண்டிய ஒரு படைப்பு ஆகும். கற்பவனது கவனம் ஒருமுகப்பட்ட நிலையில் இடையீடு நேருமுன் அல்லது அயர்ச்சி தோன்றுமுன் முற்றி முடிவுபெற வேண்டும் என்கின்றார்.
பிராங் ஓ கானர், ‘சிறுகதை’ என்பது பிரச்சினைகளை அலசிடும் படைப்பன்று. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கொண்டதன்று. அது மனித சூழமைவு பற்றி உள்ளவாறு கூறுவதாகும்”
அட்சன், “ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதையாகும்” என விளக்கம் தருகின்றார்.
ஸ்டீவன்சன், “எனக்குத் தெரிந்த வரையில் மூன்றே மூன்று வழிகளே உள்ளன. ஒரு கதையை மையப்படுத்திப் பாத்திரங்களைப் பொருத்தலாம் அல்லது ஒரு பாத்திரத்தைக் கொண்டு, அதை வளர்ப்பதற்கான நிகழ்ச்சிகளைப் படைக்கலாம் அல்லது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தாக்கத்தை விளக்கும் வகையில் செயல்களையும் மாந்தர்களையும் படைத்து கதையை உருவாக்கலாம் என பல்வேறு அறிஞர்கள் பலவிதங்களில் எல்லாம் சிறுகதை பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறாக சிறுகதை என்பது சீக்கிரத்தில், அதாவது, குறைந்த கால அளவில் சமூகத்தில் காணப்படும் நன்மை, தீமைகளை மையப்படுத்தி, அம்பு தைத்தார் போல் மனித மனங்களில் பதியச் செய்யும் சிறப்புக்குரியது. மேலும் சிறுகதை எவ்வாறெல்லாம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மற்றும் சிறுகதை பற்றி அறிஞர்கள் கருத்துக்கள் ஆராய்ந்து அறிந்து விளக்கப்பட்டுள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.