தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
48.ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்
முனைவர் ச. இரமேஸ்
தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தில் பெண்களின் நிலையினை ஆண்படைப்பாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து பெண்ணின் உரிமைக்கும் உணர்வுக்கும் குரல் கொடுக்கும் வகையில் பெண் படைப்பாளர் தத்தம் படைப்புகளை படைத்து வருகின்றனர். அவ்வகையில் ஆண்டாள் பிரியதர்சினி தவிர்க்க இயலாத படைப்பாளராக உருவாகியுள்ளார். கி.பி. 1962 இல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஆண்டாள் பிரியதர்சினி கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பல்துறையில் புலமைப் பெற்ற படைப்பாளராக வலம் வருகின்றார். பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்ற இவர் பெண்களின் உணர்வுகளுக்காவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் படைப்பாளராகவும் இயங்கி வருகின்றார். இவருடைய சிறுகதைகள் ஏகம் பதிப்பகத்தால் முழுத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் சிக்கல்களையும், சிக்கல்களுக்குரிய தீர்வுகளையும், இனங்காணும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
இலக்கியப் படைப்பாளர்கள் பார்வையில் பெண்கள்
தமிழ்கூறும் நல்லுலகில் இலக்கியங்களில் காலந்தோறும பெண் பற்றிய கருத்தாக்கங்கள் ஆய்வு நோக்கில் பேசப்பட்டு வருகின்றன. சங்ககாலந்தொட்டு பெண், பெண்மை, பெண்ணடிமை, பெண்ணுரிமை, பெண்விடுதலை, பெண்ணியம், பெண்களின் வாழ்க்கைப் பரிமாணங்கள் என்று பெண் குறித்து சமூகவியல் பார்வை செலுத்தப்பட்டுள்ளன. செய்யுள், சிறுகதை, புதினம், கவிதை, திறனாய்வு, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இணைய தமிழ் என்று பல இலக்கியக் களங்களில் பெண்கள் பற்றிய நிலைகள் பேசப்பட்டு வருகின்றன.
பெண்களின் நிலை குறித்து பெண்களின் போராளி பெரியார் கீழ்க்காணும் நிலையில் எடுத்துக்காட்டுகின்றார். ‘ஓர் ஆணுக்குச் சமையல்காரியாகவும், ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வேலைக்காரியாகவும், ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணையாகவும், ஓர் ஆணின் கண்ணழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்று பெண்களின் நிலையினை வெளிப்படுத்திக் காட்டுகின்றார். பெண்களின் விடுதலைக்காகவும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீக்குவதற்காகவும், பெண்ணியப் போராளிகள் குரல் கொடுத்து வருகின்றனர். பாரதியார், பாரதிதாசன், பெரியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றவர்களையும் கடந்து பல பெண்களும் பெண்ணுரிமைக்காக பேசுகின்றனர்.
இந்நூற்றாண்டில் பெண்களின் சிக்கல்களை இலக்கியங்களாக ஆண் படைப்பாளர்களும், பெண் படைப்பாளிகளும் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆண்டாள் பிரியதர்சினி முழுமையான பெண்ணிய படைப்பாளியாக வலம் வருகின்றார். பெண்களின் நிலைப்பாட்டினை நுட்பமாக உணர்ந்து கவிதை, கதை, கட்டுரை, இலக்கியங்கள் வாயிலாக எடுத்தியம்பி வருகின்றார். ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதைகளில் காணப்படும் பெண்களின் நிலைப்பாட்டினை இனங்காட்டும் வகையில் அமைகின்றது. படைப்பாளர் ஆண்டாள் பிரியதர்சினியின் சிறுகதைகளில் காணப்படும் பெண்களின் நிலைப்பாட்டினை பின்வரும் நிலைக்களன்களில் வகைப்படுத்தி ஆராயலாம்.
வரதட்சிணை வன்கொடுமை
திருமணமாகி குடும்ப அமைப்பில் இணையும் பெண்கள், வரதட்சிணைக் கொடுமையால் தங்கள் வாழ்வினை இழக்கின்றனர். வரதட்சிணை என்ற தீயச்சொல் பெண்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. கனவுகள், இலட்சியங்கள் வரதட்சிணை எனும் நெருப்பில் கொளுத்தப்படுகிறது. பல நேரங்களில் பெண்களின் உயிரையும் குடித்து விடுகிறது.
‘தீ’ என்னும் கதையில் சரசு எனும் பெண் வரதட்சிணையால் துன்புறுவதை சுட்டிக்காட்டுகின்றார். வரதட்சிணை தர இயலாத நிலையில் தன் குடும்பத்திலிருந்து விரட்டியடிக்கபபட்ட சரசு என்ற பெண்ணின் நிலையினை எடுத்துக் காட்டுகின்றார்.
‘மாப்பிள்ளைட்ட சொல்லு, செயினு வேணும்னா, என் எலும்பைத்தான் கோர்த்துச் செயினாப் போடணும். பேறு காலம் பாக்கறதுக்கே முழி பிதுங்கிடுச்சு, நாக்கு தொங்கிடுச்சு. இந்த அழகுல காரு வாங்கப் பணம் வேணும்னா, நா திருவோடு தூக்கித் தெருவோடத்தான் அலையனும். எலும்பும் தோலும்தான் மிச்சம். தணிய உருவற மாதிரி சம்பந்தியம்மா பேசுவாதான். கபோதின்னு என்னைத் திட்டுவதாதான் ரோசம் காட்டாதே. காதைச் செவிடாக்கிக்கோ கௌரவம் பாக்காத சரசு’ என்ற மேற்கண்ட கதைப்பகுதியில் குடும்பத் தளத்தில் வரதட்சிணை வன்கொடுமையால் வேதனைப்படும் பெண்ணின் அவல நிலையினைத் துன்பியலோடு படம் பிடித்துக் காட்டுகின்றார். வரதட்சிணையால் குடும்பத்தில் உள்ள பெண்களின் அமைதியும், மகிழ்வும் மறைந்து போவதை இன்றளவும் காணமுடிகின்றது.
வரதட்சிணை வன்கொடுமையல் இன்றளவு பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். மேலும் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். குடும்பத்தில் உள்ள உறவுகள் வரதட்சிணை வன்கொடுமையினை செலுத்தும் போது தாங்க இயலாத தருணத்தில் தற்கொலைக்குப் பெண்கள் தயார்படுத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலைப்பாட்டினை ஆண்டாள் பிரியதர்சினி பின்வரும் கதைப்பகுதி வழியே காட்சிப்படுத்துகின்றார்.
‘குழந்தையைத் தூக்கி வயிற்றோடு இறுக்கிக் கொண்டாள். பனிக்குட நீரில் மறுபடியும் வைப்பது மாதிரி, அடிவயிற்றுக்குள் புதைத்துக் கொண்டாள். குழந்கையின் பூப்பாதத்தில், பிஞ்சு வயிற்றில் தாமரைத் தண்டுக் கழுத்தில், பூக்கூடையான முகத்தில் பால் துளி உட்கார்ந்திருந்த உதட்டில் கண்ணில், உச்சந்தலையில் வருடினாள் சரசு. நெருப்பு இறகால் வருடினாள்.
நெருப்பே குளிர்ந்து எரி, காந்தாமல் எரி, என் மகளுக்கு காந்தல் தாங்காது, தணல் தாங்காது, அக்கினி தாங்காது. குளிர்ந்து எரி, தென்றலாய் எரி, எரிக்காமல் எரி, சந்தனமாய் எரி.
சரசுவின் நாடியிலிருந்து சுழன்று சேதி பறந்தது. அக்கினிக்கு அந்தக் குழந்தை குஞ்சு அக்கினியாளாள். அக்கினிக் குஞ்சானாள். கூடவே மனிதத் தழலாய்ச் சரசு’ என்ற பகுதியில் சரசு எனும் பெண் வரதட்சிணை வன்கொடுமையால் தன் குழந்தையோடு தீக்கு இரையாகித் தவிப்பதைக் காட்டுகின்றார். இம்மாதிரியான வன்கொடுமைகள் இன்றளவும் சமூகத்தில் நடந்து வருவதைப் படைப்பாளர் அடையாளம் காட்டுகின்றார்.
கைம்பெண்களின் நிலைப்பாடு
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை கைம்பெண்களின் நிலை கவலைக்குள்ளதாகவே இருக்கிறது. கைம்பெண்ணின் நிலைப்பாட்டினை ச. இரமேஸ் பின்வரும் நிலையில் எடுத்துக்காட்டுகினறார்.
‘கணவனை இழந்த பெண்ணுக்குச் சமுதாயம் வலியுறுத்தும் எதிர்மறை நெறியே வாழ்க்கை நெறியாக அமைகின்றது. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் மறுக்கப்பட்டுக் கொடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு அதன்படியே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இக்கொடுமையான துன்பத்தினை அனுபவிக்க இயலாத பெண்கள், உடன்கட்டை ஏறுதல், உண்ணா நோன்பு இருத்தல், தற்கொலை செய்து கொள்ளல் போன்ற நிலைகளில் தங்கள் உயிரினை மாய்த்துக் கொண்டனர்’ என்று கைம்பெண்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறுகின்றார்.
‘பூஜை’ எனும் கதையில் பூரணி எனும் பெண் கணவனை இழக்கிறாள். இதனால் இப்பெண்ணைச் சமூகத்தினர் புறந்தள்ளி வைப்பதையும் அவதூறான வார்ததைகளால் பேசி புண்படுத்துவதையும் பின்வரும் கதைப்பகுதி வழியே காட்சிப்படுத்துகின்றார்.
‘என்ன அவசரம் சுமங்கலி பூஜை நடக்கறப்பா? இன்னிக்கு நீ வரணுமா? ஸ்வாமிகள் கோயிலுக்குள் எழுந்தருளி இருக்கறப்போ, இதென்ன அபசகுணம், சுமங்கலிப் பெண்களோடு ஒட்டாத தள்ளி நில்லு. குங்குலும், பூவு குடுக்க வஜ்ஜையாயிருக்கும், மத்தவங்களுக்கும் அபச்சாரமா இருக்கும். நீ கிளம்பு, இடத்தைக் காலி பண்ணு பூரணி... கூட்டம் இல்லாத பொழுதா, இன்னொரு நாளு வா... போ... போ... ‘பூரணி’ எனும் கைம்பெண்ணுக்கு சமுதாயத்தில் ஏற்படும் துன்பநிலையைக் காட்டுகின்றார். கைம்பெண்கள் ஆண்களைக் காட்டிலும், பெண்களாலேயே அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். தன்னைப்போல் இவளும் ஒரு பெண் என்று கைம்பெண்ணைக் கருதுவதில்லை. மாறாக அபசகுணமாக அடையாளப்படுத்தி தனித்துவிடும் போக்கு இன்றளவு உள்ளமையை ஆண்டாள் பிரியதர்சினி தம் படைப்பு வழியே மன வேதனையோடு எடுத்துக் காட்டுகின்றார். பெண்களே பெண்னை அவமானப்படுத்தும் போக்கு மாற்றம் அடைய வேண்டும் என தம் படைப்பு வழியே அறிவுறுத்துகின்றார்.
பாலியல் ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள்
மனித நாகரிகம் எந்நிலையிலும் உயர்வை எட்டிய போதும் மனிதர்கள் நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆண், பெண் இருவரும் சமம் என்ற போக்கு மாறி, பெண்களைப் போகப் பொருளாக, இன்பம் துய்க்கும் பொருளாக எண்ணுகின்றனர். இன்றளவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக பெண் பாலியல் சிக்கல்கள் நடந்தேறி வருகின்றது. இந்நிலைக்கு ஆணின் வக்கிர உணர்வே காரணமாகும்.
ஆண்டாள் பிரியதர்சினி பெண்கள் பாலியல் சிக்கல்களுக்கு இன்றளவும் எந்நிலையில் உள்ளாகின்றனர் என்பதைத் தம் படைப்பு வழியே எடுத்துக் காட்டுகின்றார். ‘வலி’ எனும் கதையில் பருவம் எய்திய ‘நிலா’ எனும் சிறு பெண்ணை அவ்வீட்டின் வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதையும், அப்பெண் அடையும் வேதனையையும் துன்பத்தோடு எடுத்துக் காட்டுகின்றார்.
‘சித்தாடை கட்டிய கன்னியாகுமரி, மதுரை மீனாட்சி. அபிராமி இப்படியான செப்புச் சிறுமிகளின் சின்ன வடிவான நிலாவை, இரும்புக் கரத்தால் இறுக்கினால் அந்தக் குழந்தையின் ரத்த அணுக்களில் இன்னமும் உற்பத்தியாகி இருக்காத காமத்துளிகளால் தத்தளித்த அந்தக் கிராதகன், பூவின் சுகந்தத்தைக் கருக்கினான்.
உடம்பில் பெண்மையின் மென்மைத்தடம் பதிந்தாலும், மனசுக்குள் மணல் வீடுகட்டி விளையாடும் நிலாவுக்குள் இணக்கு இணுக்கமாய்க் கசடுகளை இறக்கினான். பின்னால் நேர வேண்டிய பவித்ர அனுபவம் நிலாவுக்கு; தெரிய வைக்கப்பட்டது. கழிப்பறையின் துர்நாற்றத்தோடு பூந்தோட்டம் துவம்சமானது. அனிச்சத்தினும் மென்மையான பௌதீகப்பூ மதம் பிடித்த யானையால் சிதைக்கப்பட்டது. நிலாவுக்குத் தெரிய வைக்கப்பட்டது. நிலா மனசுக்குள் வளைதிருந்த வாசனைப் பூக்களின் குருதியின் துர்வாசைன பீய்ச்சப்பட்டது. மென்காற்றின் துகளெல்லாம் வன்முறையின் வடுக்கள் தூவப்பட்டன. அவனை அலைக்கழித்த செந்தீயின் ஜீவாலையில் நிலாவுக்குள் குடியிருந்த சிறுமித்தன்மை கருக்கப்பட்டது. அவளின் குஞ்சுக் கற்பனையால் நினைக்கவே முடியாத இன்னமும் எந்த ரூபத்திலும் அறிமுகம் ஆயிருக்காத பௌதீகச் சுமைக்கு உச்சபட்ச ரசாயன கொதி நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தாள். அந்தச் சீட்டு அவனைத் தின்ற தீக்கங்கின் தகிப்பை அவளுக்குள் இறக்கினாள். அவனை உளுக்கி எடுத்த விகார்ச சுமையை அவளின் மீது நெடிது படர்ந்து இறக்கினான். வலியை, வேதனையை எரிச்சலை, கதைக் கிழிசலை குருதி வழிசாலைத் தாங்க இயலாமல் முழுசுமாய் நொறுங்கினது அந்தத் தளிர்’ என்ற பகுதியில் சிறு வயது என்று பாராமல் பாலியல் வன்கொடுமைப்படுத்தும் ஆணின் வக்கிரத் தன்மையினை எடுத்துக் காட்டுகிறார். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பப்படும் பெண்ணின் மன வேதனையைத் துன்பியலோடு காட்டுகின்றார். இம்மாதிரியான வன்கொடுமைகளுக்கு ஆளாகித் துன்புறும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதையும், நாளுக்கு நாள் இக்கொடுமை நாட்டில் நடந்தேறி வருவதையும் வேதனையோடு பதிவு செய்கின்றார்.
உடல்வழியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள்
ஆண்களின் உடல் அமைப்பு வன்மைத் தன்மை நிறைந்தது. ஆனால் பெண்ணின் உடல் அமைப்பு மென்மைத்தன்மை உடையது. இயற்கையாக, பெண்களின் உடல் அமைப்பு பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. குழந்தைப்பேறு காலங்கள், மாதவிடாய்க் காலங்கள் போன்ற நிலையில் உடல் வழியே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர்.
பெண்களின் உடல் வழியாகத் துன்பங்களை எதிர்நோக்கும் போது மனரீதியாகவும் துன்பம் அடைகின்றனர். ஆண்டாள் பிரியதர்சினி பெண்கள் அடையும் உடல் வழியான துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றார்.
‘சரஸ்வதியின் ஏடு தொலைந்து போனது’ எனும் கதையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடையும் உடல் மற்றும் மனவேதனையைச் சுட்டுகின்றார்.
காலை அகட்டி அகட்டி நடந்தாள் பவுனு. லேசாக உராய்ந்தாலும் சுரீரென்றது நெருப்புக் கங்கினால் தீய்த்த மாதிரி எரிந்தது உடல் உபாதை.
புத்தகச் சுமை ஒரு கையில் காலைத் தடுத்ததால் தூக்கிப் பிடித்த பாவாடை ஒரு கையில் நழுவிய தாவணியையும் சேர்த்துப் பிடித்தாள். அடுத்த அடி எடுத்து வைக்கக் கூட கஸ்டமாயிருந்து. நடக்க முடியாமல் ரெண்டு தொடையையும் உராய்ந்து தீயாய்க் காந்தியது தோல் வறண்டு போயிருந்தது.
சீக்கிரம் வாயேண்டி... மப்பா இருட்டிட்டு வருதுல்ல...
பச்சையம்மா ஓட்டமும் நடையுமாய்ப் பத்தடி முன்னே போய்க் கொண்டிருந்தாள். ஒரு பர்லாங் போல நடந்து ஏலமலை மேடு ஏறி இறங்கினால் சைக்கிளோடு அவளின் அண்ணன்காரன் நிற்பான்.
வெரசா நடடி ஆட்டங் காட்டுதியே. அண்ணங் கத்தும்... பதறினாள் பச்சையம்மா. ம்ஹிம் பவுனுவால் முடியவில்லை. கால் ரெண்டும் காலையிலேயே இற்றுப் போயிருந்தன. முட்டியில் பாறாங்கல்லைக் கட்டின மாதிரி பாரம். நீட்டவும் முடியாமல் மடக்கவும் முடியானல் வாதை. கூடவே இந்த வலிவேறு ஊசியாய்க் குத்தியது’ என்ற மேற்கண்ட கதைப்பகுதியில், பவுனு என்னும் பெண் மாதவிடாய்க் காலங்களில் இம்மாதிரியான உடல்வழி துன்பத்தினையும், மனவழி துன்பத்தினையும் எதிர்கொண்டு வாழ்கின்றனர். படைப்பாளர் ஒரு பெண் என்பதால் பெண்கள் அடையும் வேதனையை உணர்வியலோடு தம் படைப்பில் பதிவு செய்துள்ளார்.
பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை
பல்வேறு சிறப்புகளுக்குடைய பெண்கள் இன்றளவு பல அவலநிலையை எதிர்கொள்கின்றனர். பெண்களின் சிறப்பினை உணராத ஆண் சமூகம், பெண்களைப் போகப்பொருளாக, வியாபாரப் பொருளாகவே எண்ணுகின்றனர். ஆண்களின் இச்சைகளைப் போக்கும், விற்கப்படும் அவலம் தொடர்வதை ‘பரிகாரம்’ எனும் கதை வழியே படைப்பாளர் அடையாளமிட்டுக் காட்டுகின்றார்.
அரசியல்வாதியின் சுயநலத்திற்காக சிறுவயது பெண் சூறையாடப்படும் அவலத்தினை பின்வரும் நிலையில் சுட்டுகின்றார்.
‘கன்னியாகுமரி அம்மன் மாதிரி சின்ன சிறுமியா உங்களுக்கான களப்பலி? பேத்தி வயதுக் குழந்தையையா பெண்டாள நினைப்பது? உயிரைத் தவிர வேறெந்தச் சொத்தும் இல்லாத சொத்தைக் குடும்பம் என்பதால் ஒரு லட்சத்துக்கு ஆசைப்பட்டு நாயாய் ஓடி வருவார்கள் என்று நினைத்தீர்களா? பன்னிரண்டு வயசுக கன்னிச் சிறுமிக்குத் தாலி கட்டி மலர வைத்தால் உங்களின் பதவி நீடிக்கும் என்ற ஜோசியப் பரிகாரத்துக்குக் கைதியாகி இருக்கும் உங்களை நினைத்தால் வெறுப்பாயிருக்கிறது, அருவருப்பாயிருக்கிறது, அவமானமாய் இரக்கிறது. உங்களின் சிம்மாசனப் போராசைக்கும் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கும் எளியவர்களைப் பலியாக்குவது நியாயமா?’ என மேற்கண்ட பகுதியில் பெண்களின் அவல நிலையைச் சுட்டுகின்றார். பெண்களை ஆண்சமூகம் வியாபாரப் பொருளாக பெண்கள் இருப்பதையும் மன வேதனையோடு எடுத்துக் காட்டுகின்றார். பெண்களும் ஆணுக்கு நிகர் சமானம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதிய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றார்.
தொகுப்புரை
காலந்தோறும் பெண் பற்றிய கருத்தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பெண்களின் நிலைப்பாடு குறித்த ஆய்வுகள் இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான ஒன்றாக அமைகிறது.
குடும்பம், சமுதாயம் என்ற தளங்களில் பெண்கள் அடையும் வேதனைகளை, துயரங்களை, சிக்கல்களை ஆண்டாள் பிரியதர்சினி கதைகளில் மையமிட்டுக் காட்டியுள்ளாரர்.
குடும்பத்தில் பெண் எதிர்கொள்ளும் சிக்கல் வரதட்சணை வன்கொடுமை ஆகும். வரதட்சணையால் பெண்களின் வாழ்வு அழிந்துவிடினும், பெண்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்வதைக் காட்டுகின்றார். நாகரீக உலகில் இவ்வுலகம் சென்றுள்ள போதும், இம்மாதிரியான வன்கொடுமைகள் தொடர்வதைச் சுட்டுகின்றார். வரதட்சிணை வாங்குதல், கொடுத்தல் ஒழிய வேண்டும் என தம் படைப்பு வழியே உணர்த்துகின்றார்.
குடும்பப் பொருளாதாரத்தைச் சமப்படுத்தும் கடமை பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் தளங்களில், ஆண்வர்க்கத்தினால் பெண்கள் பணிச்சுமைகளுக்கு உள்ளாவது, பாலியல் சிக்கல்களுக்கு உள்ளாவது போன்ற நிலைப்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். பணிபுரியும் தளங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற அறைகூவலைத் தம் படைப்பு வழியே முன் வைக்கின்றார்.
இன்றளவும் பெண்கள், போகப்பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும், துச்சப் பொருளாகவும் எண்ணப்பட்டு வருகின்றனர் தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக பல பெருமைகளுக்குச் சொந்தக்காரியாக விளங்கும் பெண்கள் இன்றளவு பல நிலைகளில் அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இத்தீய செயல்பாடுகள் மாற்றமடையவேண்டும். பெண்ணின் பெருமையை அனைவரும் உணர்ந்து பெண்களின் நல்வாழ்விற்கு உறுதுணைபுரிய வேண்டும் எனும் கருத்தாக்கத்தினை ஆண்டாள் பிரியதர்சினி படைப்புகள் வழியே அறியமுடிகிறது.
சான்றென் விளக்கம்
1. இராணிபரகாஸ் (ப.ஆ.) இலக்கியத்தில் பெண்கள் ப.60
2. ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதைகள் ப.104
3. மேலது ப.107
4. ச. ரமேஸ் தேவதேவனின் கவிதைப் படைப்புலகம் ப.232
5. ஆண்டாள் பிரியதர்சினி, ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதைகள் ப.206
6. மேலது ப.77-78
7. மேலது ப.231
8. மேலது ப.239.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.