சிறுகதை இலக்கியங்களில் வாழ்வியல் சிக்கல்களே பெரும்பாலும் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. சமூக உணர்வுடன் படிப்பவரை அறிவுறுத்தவோ, மகிழ்வுறுத்தவோ, விழையும் சிறுகதைப் படைப்பாளர்கள் சமகாலச் சமூகச் (சிக்கல்களையே தன் படைப்புக்குக் கருத்தாகக் கொள்ளுகின்ற) வாழ்வியல் கூறுகளில் ஏற்படும் சிக்கல்களைத் தங்கள் சிறுகதைகளில் படைத்துத் தீர்வு காண்கின்றனர்.
“கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை” எவ்வாறு இருக்கும் என்பதைக் காணலாம்.
தாயம்மாளுக்கு மூன்று குழந்தைகள் பெரியவன் செல்லையா, சின்னவன் தம்பையா, அடுத்த குழந்தை மங்கம்மாள் மூன்று பேரும் அந்தக் குக்கிராமத்துப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமியும் இவர்களோடு படிக்கிறான். இவர்களுக்கு இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் விளையாடும் விளையாட்டு. ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு யாருடைய புத்தகத்தில் அதிகம் படம் உள்ளதோ அவர்கள் ஜெயிப்பவர். இப்படி இருவரும் இருக்க ராமசாமி சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும். ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்ல முடியாத வருத்தம்.
அடுத்து போட்டி வேறு விதமாகத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்க வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். கடைசியாக ராமசாமி எனக்கு சில்க் சட்டை இருக்கு, உனக்கு இருக்கா? என்று கேட்டான். இதற்குப் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான் செல்லையா. சிறிது நேரம் கழித்து, மங்கம்மாதான் இதற்குப் பதில் சொன்னாள். சில்க் சட்டை சீக்கிரம் கிழிந்து போகும் என்று, பதிலைக் கேட்டவுடன் ராமசாமி திகைத்துப் போய்விட்டான். முதல் வகுப்பு படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பு படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று வருத்தம் அடைந்தான். பிறகு எல்லோரும் அவனைக் கேலி செய்தனர்.
பிறகு, சிறிது நேரம் கழித்து, ராமசாமி கேள்வி கேட்டான். எங்க வீட்டில ஆறு பசுமாடு இருக்கு. உங்க வீட்டில இருக்கா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. பிறகு அதற்குப் பதிலாக நீ பெரிய பணக்காரன் என்று தெரியும். அதை இப்படி பீத்திக் கொள்ள வேண்டாம் என்று செல்லையாவின் தம்பி தம்பையா கூறினான். குழந்தைகள் எப்பொழுதும் தன்னிடம் இருப்பதையும், தனக்கு சொந்தமானவற்றை பிறரிடம் பெருமையாகப் பேசுவது என்பது ஒரு சந்தோஷம். அது இயல்பானதும் கூட என்பதை ஆசிரியர் இந்தக் கதையில் மிக எதார்த்தமாக விளக்கி இருப்பதைக் காணலாம்.
திடீரென்று செல்லையா அது சரி எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா? என்று கேள்வி கேட்டான். ராமசாமி சற்றும் தயங்காமல் உங்களைப் போல நாங்கள் கோழியெல்லாம் அடிச்சுச் சாப்பிட மாட்டோம். அதனால் நாங்கள் கோழி வளர்க்கவில்லை என்று பெருமிதத்துடன் பதில் கூறினான். இவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த செல்லையா, இது எல்லாம் இதற்கு பதில் இல்லை என்று அவனிடம் வம்பு செய்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான். குழந்தைகளைப் பொறுத்தவரை தோல்வி என்பது அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளுவது இல்லை என்பதையும், தான் சொன்னது தான் மிகவும் சரியானது, தான் செய்வது எல்லாம் சரியானவை என்று அவர்கள் கருதுவதையும் அதற்கு அவர்கள் ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்வதையும் ஆசிரியர் வெகு இயல்பாக எடுத்துரைக்கிறார்.
செல்லையா, தம்பையா, மங்கம்மா மூன்று பேரும் வீட்டிற்கு வந்தவுடன் மங்கம்மா தாயைக் கட்டி அணைத்தாள். அதற்குள் தம்பையா தன் தாயை பார்த்து, ‘ஐயா வந்துட்டாரா அம்மா?’ என்று கேட்டான். வரவில்லை என்று தாயம்மா பதில் கூறினாள். பிறகு செல்லையாவும் மிகுந்த வருத்தத்துடன் ஐயா வரவில்லையா அம்மா? என்று கேட்டான். ஆனால் மங்கம்மாவோ, அம்மா நீ பொய் சொல்கிறாய், ஐயா வந்துவிட்டார் என்று அவளிடம் சொன்னாள். அதை கேட்ட தாயம்மாளுக்கு ஒரே சந்தோஷம், தாங்க முடியவில்லை. தன் மகளைக் கட்டிக்கொண்டு, ‘அட போக்கிரிப் பொண்ணு’ என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.
தாயம்மாள் வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு மூளையிலிருந்த ஜாதிக்காய்ப் பெட்டியை சுட்டிக்காட்டி, அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா என்றாள். மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர். பெட்டிக்குள்ளே இருந்த துணியை வெளியே எடுத்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்தால் தீபாவளி, பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழு ஈழைச் சிட்டைத் துண்டும் இருந்தன. துண்டைத் தவிர மற்ற துணிகளைப் பங்கு போட்டு விட்டார்கள் குழந்தைகள். துண்டு மட்டும் யாருக்கு என்று தெரியாமல் மூவரும் தன் தாய் தாயம்மாவை பார்த்து துண்டு யாருக்கு என்று கேட்டனர். தாயம்மா அது ஐயாவுக்கு என்று பதில் கூறினாள். அதை கேட்ட பிறகு மங்கம்மாள் கேட்டாள் அம்மா உனக்கு புதுத் துணி எடுக்கவில்லையா என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டாள். அதற்குத் தாயம்மாள் எனக்குத்தான் இரண்டு சீலை இருக்கே எனக்கு எதுக்கு? அது எடுக்க நாம் என்ன பணக்காரரா? என்றாள். இதில் இருந்து என்னதான் தனக்கு மட்டும் துணி எடுத்தால் போதும் என்று குழந்தைகள் நினைக்காமல் தன் தாய்க்கும் புதுத்துணி எடுக்கவில்லையே என்ற தாய் பாசத்தையும், புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா? என்று தாயம்மாள் கேட்கும் போது ஒரு சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை இன்னும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு பண்டிகையைக் கூட தங்கள் வாழ்க்கையில் கொண்டாடி மகிழ முடியாத ஒரு எதார்த்த நிலையை ஆசிரியர் அழகுபட படைத்துக் காட்டுவது நம்மை நெகிழச் செய்வதாகும்.
இரவு மூன்று பேரும் சாப்பிட்டுத் தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிக்கப் போக, தம்பையாவுக்கு பயம். அதனால் அண்ணனைப் பார்த்துத் துணைக்கு வாரியா? என்று கேட்டான். வெளியே சிறு சிறு துளியாக மழை தூர ஆரம்பித்தது. அங்கு தூரத்தில் முருங்கை மரத்தடியில் ஒரு உருவம் தெரிந்தது. அது யாரு என்று இருட்டில் சரியாகத் தெரியவில்லை. சற்று அருகில் சென்று பார்த்தால் இவாகள் வயதையுடைய ஒரு சிறுவன். செல்லையாவும், தம்பையாவும் அவனை போ போ என்று துரத்தினர். அவன் ராமசாமியின் வீட்டில் இருந்த எச்சில் இலையை எடுத்து வந்து, அவற்றில் ஒட்டியிருந்த பருக்கைகளையும் முருங்கைக்காய் சக்கையையும் எடுத்து சாப்பிட்டு கொண்டு இங்கு வந்து நின்றான். அதற்கு தாயம்மா ஏய் என்ன செய்கிறாய் மழையில் உள்ளே வா என்று கூப்பிட்டாள். அதற்குள் மழை வேகமாக சட சட என பெய்ய ஆரம்பித்துவிட்டது. யோசிப்பதற்கு நேரமில்லை தாயம்மா வெளியே வந்து இவர்கள் மூன்று பேரையும் உள்ளே அழைத்து வந்தாள்.
நின்ற சிறுவனின் உடல் எல்லாம் சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்தால் ஒரு துர்வாடை. இவனை பார்த்து மங்கம்மா யாரு என்று கேட்டாள். இது வேறு யாரோ? யார் பெத்த பிள்ளையோ? என்று பதில் சொல்லிவிட்டு இவன் மழையில் நனைந்திருப்பதால் துடைக்கத் துணி எடுக்க போனாள். அதற்குள் செல்லையா, தம்பையா அவனை மெதுவாகத் திட்டி வெளியே போ, போ என்று திட்டினர். அப்படியே வெளியில் அவனைத் தள்ளினர். மங்கம்மாவும் இவர்களோடு சேர்ந்து கொண்டு அவனை போ என்று திட்டினாள்.
இதை கேட்டவுன் அச்சிறுவன் வேகமாக அழுது விட்டான். இவன் அழுவதை கேட்டு தாயம்மா என்னவென்று தெரியாமல் ஓடிவந்தாள். ஏன் அழுகிறாய். நீங்கள் ஏதாவது சொன்னீர்களா என்று தன் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள். அதற்கு மங்கம்மா, இவன் வெளியே போ என்றால் போக மாட்டேன் என்று அழுகிறான் என்றாள். அப்படி எல்லாம் சொல்லக் கூடாது என்று தன் பிள்ளைகளிடம் கடிந்து கொண்டாள். நீ அழுவாதே என்று அவனை சமாதானம் செய்து அவனிடம் பேச ஆரம்பித்தாள். நீ யாரு? உனக்கு எந்த ஊரு? ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டாள். எனக்கு ஊரு விளாத்திக்குளம் என்றான் சிறுவன். உனக்கு அப்பா, அம்மா இல்லையா, என்று கேட்டாள். அவன் ஐயா நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம், அம்மா போன வாரம் செத்துப் போயிட்டா என்றான். உனக்கு வேறு யாருமில்லையா? அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என்று தாயம்மா கேட்டாள். எனக்கு யாருமில்லை என்று பாவமாகப் பதில் சொன்னான். இங்கு நீ ஏன் வந்தாய் என்று தாயம்மா கேட்டதற்கு என் அத்தை கழுகுமலையில் இருக்காங்க. அதனால் அங்கு போறேன். விளாத்திக்குளத்தில் இருந்து இங்கு நடந்து வருவதற்கு நான்கு நாட்கள் ஆயின, இரவு இங்கு வந்து உள்ளேன் என்றான். இன்னும் எட்டு மையில் தூரம் நடந்து கழுகுமலைக்கு போனால் அவனுடைய அத்தை இவனை வீட்டில் விடுவாளோ இல்லை துரத்திவிடுவாளோ என்று தாயம்மா நினைத்து வருந்தினாள். உன் பேரு என்ன என்று கடைசியாக கேட்டாள் தாயம்மா. அதற்கு அவன் ராஜா என்று பதில் கூறினான்.
பிறகு அவனுக்கு சாப்பாடு போட்டு படுக்க வைத்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருப்பதால் கோணிப் பைகளை போட்டு இரண்டு ஓலை பையையம் உதறி விரித்து அனைவரையும் படுக்க வைத்தாள். இறைவனுடைய படைப்பு இப்படி இருக்கிறது என்று நினைத்து தாயம்மா தூங்கிப் போனாள். அதிகாலை வெடிச்சத்தம் கேட்டு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொரு குழந்தையாக சீயக்காய்ப் போட்டுக் குளிப்பாட்டினாள். அனைவரும் குளித்தனர். ராஜா மட்டும் வேண்டாம் எனக்கு எரியும் என்று சொன்னான். அதற்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் தோஷம் போகும் வா மெதுவாகத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறேன் என்றான். நான் உன் அம்மான்னு நினைச்சிக்கோ என்று அவனைக் குளிப்பாட்டினாள். அனைவரும் புதிய துணியைப் போட்டுக் கொண்டனர். ராஜா மட்டும் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றான். தாயம்மாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இறைவனுடைய விளையாட்டா என்று எண்ணி வருந்தினாள். மங்கம்மா தன் தாயின் அருகில் வந்து காதில் அந்த பட்டு துண்டையாவது அவனுக்கு கொடேன் என்றாள். அது ஐயாவுக்கு வெளியில் நாளு இடந்து போரவரு என்று வருந்தினாள். பிறகு அவற்றை எடுத்துக் கொடுத்துக் கட்டிக்க சொன்னாள். பிறகு குழந்தைகள் மூவரும் ஐயா எங்கே எப்போ வருவாங்க என்று கேட்டனர். அவர் பக்கத்து ஊருக்கு போயிருக்காரு தூர உறவினர் செத்துப் போய்விட்டார்களாம். நீங்கள் தீபாவளி கொண்டாடுங்க நான் வந்து விடுகிறேன் என்று கூறியதை குழந்தைகளிடம் கூறினாள். இதற்குள் ராமசாமி வீட்டில் வெடிச் சத்தம் கேட்டது. அவனுடைய அக்காவுக்கு இது தலை தீபாவளி, ஊரில் பெரிய பணக்காரர். அதனால் அங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவர்களுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் ராமசாமி, அக்கா கணவரை ராஜா, ராஜா என்று அழைத்தனர்.
பணக்காரர் வீட்டில் எப்படி எல்லாம் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்பதையும், ஏழைகளின் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை எவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள், அதிலும் அனாதையாக ஒருவன் வந்தவுடன் தன் தாய் சொன்னதைக் கேட்டு அந்த குழந்தைகள் எப்படி மனம் மாறுகிறார்கள், அவனைத் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள் என்பதையும், குழந்தைகளின் மனம் ஒரு வெள்ளைமனம் என்று விளக்கியுள்ளார். பிறகு ராமசாமி தெருவில் வந்து மங்கம்மாவை பார்த்து எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார் என்று பெருமையாக கூறினான். தன் (மாமா) அக்கா கணவனை எல்லோரும் ராஜா என்று அழைக்கிறார்கள் என்று விவரம் ஏதும் தெரியாமல் எங்க வீட்டு ராஜா வந்திருக்கிறார் என்கிறான் சாதாரணமாக. அதைக் கேட்டு மங்கம்மா இவன் தன்னிடம் சண்டையிடத்தான் இப்படி செய்கிறான் என்று எண்ணி இவள் தயக்கமே இல்லாமல் எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார் என்றாள்.
இக்கதையில் குழந்தைகளின் மனநிலையையும் ஒரு களர் நிலம் போல அவற்றில் நல்லவற்றை விதைத்தால் நல்லவை வளரும், தீயவற்றை விதைத்தால் தீயவை தான் விளையும் என்பதைக் கூறும் விதமாக உள்ளது. பாரதிதாசனின் குடும்ப விளக்கில் கூறுவதை போல
“கல்வியில்லா பெண்கள் களர் நிலம்
அங்கே புல் விளைந்திடலாம் நலல் புதல்வர்கள் விளைவதில்லை”
என்ற வரிகளைப் பொய்யாக்கிப் பாரதியாரின் புதுமைப் பெண்ணாகத் தாயம்மாவைப் படைத்துக் காட்டியுள்ளார்.
இதே போல பாரதிதாசனின் குடும்ப விளக்கில்
“பெண்களுக்கு கல்வி வேண்டும்
வீட்டை பேணுவதற்கே
பெண்களுக்கு …………….
பெண்களை பேணுவதற்கே
என்ற வரிகளுக்கேற்ப குழந்தை கதாபாத்திரம் ஆன மங்கம்மா, சிறுவயதிலே கல்வியில் தேர்ந்து போட்டிகளில் தன் அண்ணனின் மானத்தையும் காக்கின்ற புதுமைப் பெண்ணாக விளங்குகிறாள். இன்று விளையாட்டில் காக்கும் மங்கம்மா நாளை வீரப்பெண்ணாக விளங்குவதற்கு இது ஒரு ஒத்திகையாக விளங்குகிறது.