Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

20. கணினித் தமிழின் நோக்கும் போக்கும்


முனைவர் ம. கவிதா எம். ஏ., எம்.பில்., பி.எச்டி, நெட்.,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
விவேகானந்தா மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.

முன்னுரை

சமூகம் என்பது மிகப்பெரிய மக்கள் குழுவாகும். இந்த மனிதக் குழுவானது தனக்கு வேண்டியவற்றை நிறைவு செய்து தானும் வளரும் ஆற்றல் உடையது. மேலும் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினையும் கொண்டது. இலை தழைகளை உடுத்தி வாழ்ந்த மனித சமுதாயத்தின் கடந்த காலப் பாதைகளையும் இன்று அவன் கண்டிருக்கும் உச்சங்களையும் எண்ணினால் வியப்பில் நம் விழி விரிவது தவிர்க்க இயலாதது எனலாம். மானிடச் சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளில் அவனது மொழியின் வளர்ச்சியும் இன்றியமையாததாக உள்ளது. ஓலைச்சுவடிகளை உற்று நோக்கி இலக்கியம் கற்று வந்த நம் தமிழினம் இன்று கணினியின் வழியே உலக இலக்கியங்களை உற்று நோக்கி வருகிறது. தமிழனத்தின் பரந்து பட்ட உலகப் பார்வைக்குப் பெருந்தொண்டு புரிந்த கணினித்தமிழின் வரலாற்றையும், அதன் இன்றைய வளர்ச்சிப் போக்கினையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மை

‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி
மூங்கில் போல் முசியாமல் வாழும்”

மொழி நம் தமிழ்மொழியாகும்.

எண்ணிலடங்கா இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்ட நம் மொழியின் எழுத்தாக்கங்களும், இலக்கியங்களும் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளிலேயே பாதுகாக்கப்பட்டன. தனிமனிதனின் வளர்ச்சிக்கும் பண்பாட்டு உயர்வுக்கும் தேவையான இலக்கியங்களைப் படைப்பதோடு அதனைப் பாதுகாப்பதும் பெரும் பணியாய் இருந்தது. ஏனெனில் ஓலைச்சுவடிகள் வெகுநாட்கள் உழைக்காது. ஏராளமான ஆயுர்வேத முறையில் பாதுகாப்பு செய்யப்படினும் ஓலைச்சுவடிகள் கால வெள்ளத்தாலும், கரையான்களாலும் அழிக்கப்பட்டு அழிந்து போயின. அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் தமிழ் இலக்கியங்கள் மெல்ல மெல்ல அச்சு வடிவம் பெற்று பாதுகாக்கப்படலாயின. அதன் அடுத்த கட்ட வளர்ச்சி நிலையாக, இன்றைய நவீன உலகில் தமிழின் பெரும்பாலான நூல்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் வாயிலாக நமது இல்லம் தேடி வந்து நமது உள்ளங்களை நிறைவிக்கிறது.

கணினியுகம்

‘பரிணாம வளர்ச்சியின் தாகத்தைத்
தணிக்க வந்த தங்கரதமே
உன்னைத் துறந்த வாழ்க்கையில்
மனிதர்கள் ஒரு நடைப்பிணம்”

கணினி குறித்த இந்த புதுக்கவிதையானது, மனித சமுதாயத்தில் கணினியின் முக்கியத்துவத்தைத் தெளிவுற நமக்கு உணர்த்துகிறது. கணினியின் தோற்றம் என்பது ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்புதான் எனினும் அதன் வளர்ச்சியானது அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மனித வரலாற்றில் கனிணியின் வருகை ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். மனிதனின் பிற கண்டுபிடிப்புகள் செய்யாத பல சாதனைகளை இக்கனிணியானது செய்து வருகிறது. இது ஒரு மின்னணுயுகம் என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும், இந்தக் காலத்தைச் சிறப்பாக ‘கணிப்பொறியுகம்” என்றும் அழைக்கலாம்.இன்று மனித வாழ்க்கையில் கணினி பயன்படுத்தாத துறையே இல்லை என்னும் அளவிற்கு மனித வாழ்க்கையைக் கணினி கட்டிப்போட்டுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு முக்கியக் காரணம் உலக அளவில் இணைக்கப்பட்ட கணினிகளின் அமைப்பான இணையம் ஆகும். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றம் பெறச் செய்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி ஆவார்.

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்ற பாரதியின் கனவானது பரிபூரணமாக நிறைவேறும் வகையில் இணையத்தின் வழி தமிழ் மொழி அடைந்த பயனானது பலப்பல. நம் தாய்மொழியாம் தமிழ் மொழி நம் நாட்டைத் தாண்டி சில நாடுகளில் பேச்சு மொழியாகவும், சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளமை இங்கு நோக்கத்தக்கது. அங்கு வாழும் மக்கள் தம் தாய் மொழியினையும், தமது பண்பாட்டினையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

”மக்களின் சிந்தனைத் திறன்இ அறிவின் முதிர்ச்சி, செயற்பாட்டுத் திறன் அனைத்திற்கும் அடிப்படையாகத் தாய் மொழி அமைகிறது” என்ற டேவிட் பிரபாகர் அவர்களின் கூற்றானது இங்கு நோக்கத்தக்கது.

உலகெங்கும் வாழும் தமிழர்களும், அவர்களது சந்ததியினரும், தமிழார்வலர்களும் பயன்பெறும் வகையில் உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், புத்தகக் கடைகள், நூலகங்கள் இவற்றில் உள்ள கலைக் களஞ்சியங்கள், அகராதிகள், நிகண்டுகள் போன்றவற்றை இணையத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ்க் கல்வியை ஆரம்பப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கணினியின் வழி வழங்கத் திட்டமிட்டு அதற்கான முயற்சியினையும் மேற்கொண்டு வருகிறது. இதன் வழி தமிழ்மொழியின் வளர்ச்சியானது, காலந்தோறும் உறுதி செய்யப்படுகிறது எனில் அது மிகையன்று.

கணினித் தமிழின் தோற்றம்

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே ஆகும். அதன் பிற்பகுதியில்தான் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துருக்கள் உள்ளன. இன்றையச் சூழலில் கணினியில் ஆங்கிலமொழிக்கு அடுத்த நிலையில் கோலோச்சும் மொழியாக நம் தமிழ்மொழி உள்ளது.

‘ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் திருவள்ளுவர் எனும் கணினி உருவாக்கப்பட்டது. பின்னர் 48 சொற்றொகுப்பு பெங்களூரைச் சேர்ந்த மென்பொறியாளர் ஆய்வுக்குழு (Software Research Committee) எனும் நிறுவனம் உருவாக்கி தமிழ்க் கணினியில் அறிமுகப்படுத்தியது”

பல்வேறு அறிவியலாளrகளின் தளராத முயற்சியில் தமிழ்க் கணினியானது குறுகிய காலத்தில் செம்மையுற்று வருகிறது. கணினிப் பயன்பாட்டாளrகளாகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற இதழியல் துறையானது, கணினித் தமிழ் குறித்த பல்வேறு விழிப்புணர்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.முதல் தமிழ்க் கணினிக் கருத்தரங்கும், மாநாடும்

உலகில் எந்தவொரு அமைப்பானாலும், மக்கள் மனதில் நிலைத்து நின்று தனது செல்வாக்கை நிலை நிறுத்த அத்துறைச் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது அவசியமாகின்றது. அந்த வகையில் ‘தமிழும் கணிப்பொறியும்” என்ற தலைப்பில் முதல் முதலில் கணினித் தமிழக் கருத்தரங்கம் 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 மற்றும் 6ஆம் நாட்களில் நடைபெற்றது. முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு 1997ஆம் ஆண்டு மே 17,18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநாடுகளும், கருத்தரங்குகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுக் கணினித் தமிழின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு துணை நின்றன. இத்தகைய கணினித் தமிழின் வளர்ச்சியானது தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சிக்கான இன்றைய வித்து எனலாம்.

கணினித்தமிழின் படிநிலை வளர்ச்சி

இன்றைய அவசர உலகில் மண்ணிலிருந்து விண்ணுலகு வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது இணையமாகும். இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ் மொழியே ஆகும் (தினமணி, 07.02.1999). அதன் பயன்பாட்டிற்கு வானமே எல்லையாகக் கூறலாம். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை தரணி முழுவதும் பரப்ப இணையமானது பல்வேறு வகைகளில் உதவி வருகிறது.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்”

என்ற தொல்காப்பிய பாயிரத்தில் கூறப்பட்ட எல்லைகளைக் கடந்து உலகு தழுவி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். உலகம் முமுவதும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் உறவுகளை ஒன்றிணைப்பதே விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் தோன்றிய கணிப்பொறியும், இணையமும் தான். இன்று இணையத்தில் உள்ள மின் இதழ்களும், அச்சு இதழ்களும் தமிழை உலகிற்கு எடுத்துக்காட்டி தமிழின் அடையாளம் மாறாமல் காத்து வருகின்றன. மேலும் உலகளாவிய நிலையில் தமிழ்மக்கள் தாய்மொழியோடும், தங்களது பண்பாட்டு விழுமியங்களோடும் இணைந்திருக்கவும், தமிழ்மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை அனைத்து நூல்களையும் அறிந்து கொள்ளவும் இணையத்தின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது.

கணினித் தமிழின் இன்றைய நிலை

நம் வாழ்க்கையை வசதிப்படுத்திக் கொண்டிருக்கின்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் பலப்பல. நாம் பேசும் மொழியின் வாழ்விலும், வளர்ச்சியிலும் அவற்றின் தாக்கமுண்டு. ஊர் ஊராகச் சென்று ஓலைச் சுவடிகளைச் சேகரித்துத் தமிழ் இலக்கியத்தை அழியாமல் பாதுகாத்த உ. வே. சாமிநாத அய்யரின் கனவை நிறைவேற்றும் வகையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கான இணையதளங்களைத் தமிழ் மொழிக்காக உருவாக்கி, நம் இலக்கியங்களை உலகெங்கும் உலாவரச் செய்துள்ளனர். மேலும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட இலக்கியங்களைப் பார்வையிடுவதற்குத் தமிழ் மொழியிலான தேடியந்திர மென்பொருளும் உருவாக்கப்பட்டுச் செயலாக்கத்தில் உள்ளது. இவை மட்டுமல்லாமல் மேலை நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் பலரின் தணியாத முயற்சியால் இணையத்தில் தமிழானது விரைவாகப் பரவி வருவது பாரட்டுதலுக்குரியது.

‘விழுதுகள் காக்கப்பட்ட வேண்டுமானால் தமிழர்கள் தமிழ்மொழியோடு தொடர்பறாது வாழ வேண்டும். தமிழ் இலக்கியத்தோடும் தமிழ் கலைகளோடும். உறவுற்றதாக அவர்கள் வாழ்வு அமைய வேண்டும்” என்ற வா. செ. குழந்தைசாமி அவர்களின் கூற்றானது இன்று மெய்ப்பித்து வருகிறது என்பது மிகையன்று. மேலும், தனிமரம் தோப்பாகாது என்னும் முதுமொழிக்கேற்ப கணினியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அனைத்துப் பிரிவினரின் ஒன்றிணைந்த செயல்பாட்டிற்காகத்தான் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமாகும்.முடிவுரை

ஆதியும் அந்தமுமாக கணினியானது மாறிவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் கணினியிலும், இணையத்திலும் ஏற்படும் பலவித வளர்ச்சிகளுக்கு இணையாகத் தமிழறிஞர்களின் ஆர்வமும், தமிழமைப்புகளின் முயற்சியும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் செயல்பாடும், அதிகரிக்க வேண்டும். ஏனெனில் கால மாறுதல்களுக்கேற்ப கணினித் தமிழின் வளர்ச்சியைச் செம்மைப்படுத்தி, துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மாற்றம் ஒன்றே மாறாதது. மொழி வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைக் கடந்த நாம், இன்றைய கணினியுகத்தில் கணிப்பொறி நுணுக்கம் அறிந்த அறிஞர்கள் மற்றும் தமிழறிவு மிகுந்த அறிஞர்களின் ஒன்றிணைந்த செயல்பாட்டின் வழி தமிழின் செயலாண்மையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள், சமயம், ஆராய்ச்சி, திறனாய்வு நூல்கள், கட்டுரைகள் என அனைத்தும் கனிணியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மேலும் உலகத்தமிழ் இணையக் கருத்தரங்க மாநாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இத்தகைய முயற்சிகளை அனைத்து நிலைகளிலும் ஊக்குவிக்க வேண்டும். இம் முயற்சியானது வெறுமனே தமிழர்களின் தமிழ் வாசிப்பிற்காக மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும், தரணியெங்கும் புகழ் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான். அப்போது தான் நமது வீடும் சிறக்கும், அதன் வழி நாடும் நலம்பெறும்.

துணை நூல்கள்

1. இணையத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் கருத்தரங்க நூல், தஞ்சாவூர்- 5 (2003)

2. முனைவர் வை. சு. க. கண்ணன், மின் தமிழ், தாணி பதிப்பகம், காரைக்குடி - 1 (2003)

3. வா. மு. சே. ஆண்டவர், கணினியில் தமிழ், சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை- 93 (2001)

4. துரை. மணிகண்டன், இணையமும் தமிழும், நல்நிலம் பதிப்பகம், சென்னை-17 (2008)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p20.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License