தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
26. அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள்
ப. கோகிலவாணி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணாஅரசுக் கலைக்கல்லூரி, நாமக்கல். .
முன்னுரை
அழகு பொழியும் வனங்கள், அங்கு வாழும் எண்ணற்ற விலங்குகளின் செயல்கள், பருவம் தவறாத சாரல் மழையின் இனிமை, ஆழமான சுனைகள், இயற்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட உழவுமுறை, எங்கெங்கு காணினும் மகிழ்வோடு சுற்றித்திரியும் பறவை இனங்கள், தாங்கள் வாழும் சூழலுக்கேற்ற உணவு, உழவு, உறைவிடம் போன்றவற்றை அமைத்து மகிழ்வோடு வாழ்ந்த தொன்மைக்கால மனிதர்கள் போன்ற நிகழ்வுகள் சங்க இலக்கியம் முழுமையும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.
இத்தகு சூழல்சார் நிகழ்வுகளைச் சங்ககாலப் புலவர்கள் பதிவு செய்து வைத்தமை வெற்று வருணனையோஅல்லது வரலாறோஅல்ல, மாற்றாக இப்பதிவுகள் அனைத்தும் சங்ககால மக்களின் சுற்றுச்சூழல்சார் சரியான புரிதல்களைப் பெற்று இயற்கையை அளவாகப் பயன்படுத்தியமையால், இயற்கை அவர்களுக்கு அளித்த அன்புக் கொடையே அவர்களின் மகிழ்வான ஆரோக்கிய வாழ்வு என்பதனை நாம் உணர்ந்து கொள்வதற்கான அற்புதப் படைப்புகளாகும். இதனை அடியொற்றியே பழங்கால மக்கள் இயற்கையைப் பேணிக் காத்தமையையும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிந்தனைகளை எங்ஙனம் பெற்றிருந்தனர் என்பதனையும் அகநானூற்றின் வழி இக்கட்டுரைஆராய முனைகின்றது.
நீர்ப் பயன்பாடு
நீர் இன்றி இவ்வுலக இயக்கம் சாத்தியமற்றது. உயிரினங்களின் உயிர்மைக்கு ஆதாரமாகத் திகழ்வது நீர். ஆனால், சாயப்பட்டறைகள், வீட்டுக் கழிவுநீரை ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் கலத்தல், மரங்களை வெட்டுதல், செயற்கை எரிபொருட்களின் அதீதப் பயன்பாடு, சரியான பராமரிப்பற்ற நீர் நிலைகள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் மழைப்பொழிவு குறைந்து நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபாடும் கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
பல ஏக்கர் பரப்பில் வீட்டைக் கட்டும் நாம் நீரைச் சேமிக்க ஓர் செங்கல் கூட எடுத்து வைப்பதில்லை என்பதுவே உண்மை. இத்தகைய மனப்பாங்கு மனிதர்களிடம் இன்னும் சில காலம் நீடித்தால் இவ்வுலகில் உயிரினமே அற்றுப் போகும் அபாயம் ஏற்பட்டுவிடக் கூடும். ஆனால், பழங்கால மக்கள் நம்மைப் போன்று இல்லை, அவர்கள் நீரின் இன்றியமையாமையை முற்றிலும் உணர்ந்திருந்தனர். மலைகளில் இருந்து வழிந்து வரும் அருவி நீர் மற்றும் மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைத்தனர். இதனை
“நாயுடைமுதுநீர்க் கலித்த… … …”
(அகம்: 16-1)
“படுமலைபொழிந்தபயமிகுபுறவின்
நெடுநீர் அவல… … …”
(அகம்: 154-1,2)
“வார்பெயல் வளர்த்தபைம்பயிர்ப் புறவில்
பிறைக்கன் அன்னநிறைச்சுனைதோறும்
துளிபடுமொக்குள் துள்ளுவனசாலத்”
(அகம்: 324-5-7)
என்ற பாடல் வரிகளால் அறியலாம். மேலும் நீர்த் துறைகளை மிகவும் அகலமாகவும், ஆழமாகவும், மதகுகள் அமைத்துப் பாதுகாத்தும் நீரைஅதிக அளவில் தேக்கி முறையாகப் பயன்படுத்தினர் என்பதனை,
“அகன் துறைப் பகுவாய் நிறைய”
(அகம்:256-3,4)
“நீர்வழிந்தோடும் மதகுகளைஉடையகாவிரிக்கரை”
(அகம்:326-11)
ஆழமான சுனை என்பதனை
“நீடுநீர்நெடுஞ்சுனை”
(அகம்:358-7) போன்ற பாடல்களால் அறியலாம்.
மேலும் ஆற்றின் கரைகளிலே மரங்களை நட்டு வைத்தனர். அம்மரங்கள் ஆற்றின் கரைகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்தன என்பதனை, அகம்: 97-16-20 என்ற பாடலிலும், ஆற்றின் கரைகளை உயர்த்தினர் என்பதனை அகம்: 93-21-23 என்ற பாடலிலும் அறியலாம். இவ்வாறான நீரின் மதிப்புணர்ந்த பயன்பாட்டுச் செயல்முறைகளே அக்கால மக்களின் வளமான வாழ்வின் காரணமாகும்.
வேளாண் தொழில்நுட்பம்
கனிகளையுண்டு காடெங்கும் சுற்றித் திரிந்த ஆதிமனிதன் இன்றுள்ள நாகரீக வளர்ச்சியை எட்டுவதற்குப் பல்வேறு பரிணாம நிலைகளைக் கடந்துள்ளான். அதில் முக்கியமான இடம் வேளாண்மைக்கு உண்டு. சமனற்ற உழவுமுறை,செயற்கை உரப் பயன்பாடு, நிலத்தின் தன்மைக்குப் பொருந்தாத உழவுமுறை போன்றவற்றால் மண் வளமிழந்து வருகின்றது. இதன் விளைவு உற்பத்திக் குறைவும், உணவுப் பஞ்சமும் ஆகும். ஆனால் பண்டைய மக்களின் உழவுமுறை இவ்வாறு அமையவில்லை.
நீரைத் தேக்கி வைத்து அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்தினர். மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்து மிகுந்த வளம் பெற்றனர். இதனை,
1. பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்திலே கொழுத்த செந்தினைப் பயிரை விதைத்தல் (அகம்: 88-1)
2. சிவந்த மேட்டு நிலத்திலே வரகினை விதைத்தல் (அகம்: 367-6,7)
3. பாலை நிலத்திலே பருத்தியை விதைத்தல் போன்றவற்றால் அறியலாம்.
அடுத்து மண்ணை நன்கு பிறழும்படி உழுத பின்பு விதை விதைத்தலே நல்ல விளைச்சலைத் தரும் என்பதனை,
“பல உழுசெஞ்செய் மண்போல் நெகிழ்ந்து” (அகம்: 26-24)
“மண் பிறழும்படிஉழுதல்” (அகம்: 41-6,7)
என்ற வரிகளால் அறியலாம். மேலும் புதுப்புனமாக்கும் பொருட்டாகப் பழம்புனத்தைச் சுட்டெறித்தனர் என்பதனை அகம்: 140-11 என்பதால் அறியலாம்.
பயிர்களைப் பூச்சிகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பதற்காக அவர்கள் எவ்விதச் செயற்கை உரங்களையும் பயன்படுத்தவில்லை மாற்றாக வயலின் நடுவே பரண் அமைத்து கிளி கடிகருவி, தழல், தட்டை, குளிர், தீப்பந்தம் போன்றவற்றைக் கொண்டும், குரல் எழுப்பியும் தினைப்புனம் காத்தனர் என்ற செய்தியினை அகம்: 12-6, 32-5,6,7, 92-6,7, 94-9,10, 292-7-12, 308-10,போன்ற பாடல் வரிகளால் அறியலாம்.
இயற்கை முறையிலான நெல் பிரித்தெடுத்தலுக்கு வைக்கோலைக் கெடாவிட்டு அலைத்து தூய்மை செய்தனர் என்பதனை அகம்: 37-5,6-ல் அறியப் பெறும். இங்ஙனம் சிறந்த வேளாண் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயற்கை சார் உழவு செய்து அதீத பயன்பெற்று உலகின் பஞ்சம் போக்கி மகிழ்ந்தனர்.
வன வளம்
அதிக மழைப் பொழிவிற்கு முக்கியக் காரணமாக அமைவது மரங்களே ஆகும். அவை வனங்களில் நிறைந்துள்ளன. எனவேதான் வனம் மற்றும் மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் இன்று நாம் வனங்களிலுள்ள மரங்களை வெட்டிப் பலவாறு பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறான வன அழிவே இன்று மழையற்றுப் போனதற்கான முக்கியக் காரணமாகும். ஆனால் அன்றைய மனிதன் மரங்களைஅழிக்கவில்லை. அன்று சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாத அளவிலான அடர்ந்த மரங்களைக் கொண்ட வனங்கள் நிறைந்திருந்த செய்தியை,
“மான்றமைஅறியாமரம்பயில் இடும்பின்”
(அகம்: 238-1)
என்ற பாடலாலும், அவ்வனவளத்திற்குக் குறைவற்ற மழைவளமே காரணம் என்பதனை,
“கார்ப்பெயற்குஎதிhpயகாண்தகுபுறவில்”
(அகம்: 204-5)
என்ற பாடலாலும் அறியலாம். வன வளத்தைப் பொறுத்தே மழைவளம் அமையும் என்பதனை அவர்கள் தெற்றென உணர்ந்திருந்தனர்.
உணவு உறைவிடத் தூய்மை
செயற்கைக் குளிர்பானங்கள், நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றால் விளையும் தீங்கறியாமல் அதனைப் பெருமளவில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் சங்ககால மக்கள் தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்புடைய உணவு வகைகளையே உண்டனர். வாழும் சூழலின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்புடைய உணவினை உண்டதனால் அம்மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுத் திகழ்ந்தது. நெல்லினை உரலில் இட்டுத் தூய்மை செய்து மண் பானையில் சமைத்து உண்டனர். இதனை,
“பண்ணைவெண்பழத்துஅரிசிஏய்ப்பச்... ... ...
... ... ... குடவர்புழுக்கிப் பொங்கவிழ்ப் புன்கம்” (அகம்: 393-9-16)
என்ற பாடலாலும், மேலும் அவற்றை இட்டு உண்ண எவ்வித நெகிழிப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை, வாழை இலை அல்லது தேக்கு இலைகளையேப் பயன்படுத்தினர் என்பதனை,
“புகர்அரைத் தேக்கின் அகல்இலைமாந்தும்” (அகம்: 107-10)
“மழவிடைப் பூட்டியகுழாஅய்த் தீம்புளி
சேவியடைதீரததேக்கிலைப் பகுக்கும்” (அகம்: 311-10,11)
“... ... ... தேக்கின்
ஆகலினைகுவித்தபுதல் போல்
குரம்பைஊண்புழுக்குஅயரும் முன்றில்... ... ...” (அகம்: 315-15-17)
என்ற பாடல் வரிகளாலும் அம்மக்களின் உணவுத் தூய்மையும் அதன் விளைவாக அவர்கள் பெற்ற ஆரோக்கிய வாழ்வும் புலப்படுகின்றது.
இன்றுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணியாக அமைவதில் ஒன்று நகரமயமாதல். நாம் நகரமயமாதல், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் வனங்களையும், வேளாண் நிலங்களையும் அழித்து அடுக்குமாடிக் கட்டிடங்களை அமைத்துச் சூழலைப் பெருமளவில் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால் சங்ககால மக்கள் எளிமையாகக் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிமையான இல்லங்களை அமைத்து இனிய வாழ்வு வாழ்ந்தனர். இதனை,
“புல்வேய் குரம்பை” (அகம்: 87-3)
“காயல் வேய்ந்ததேயாநல்லில்” (அகம்: 370-5)
என்ற பாடல் பகர்கின்றது. விழாக் காலங்களில் வீட்டுச் சுவற்றில் செம்மண் பூசி தரையில் பழைய மணலை அகற்றிப் புதுமணல் பரப்பித் தூய்மை செய்தனர் மற்றும் விலங்குகளிடம் இருந்து வீட்டைப் பாதுகாக்க முள்வேலி அமைத்தனர் என்பதனை அகம்:394-8,9 மற்றும் அகம்: 221-5 போன்ற பாடல்களால் அறியலாம்.
முடிவுரை
“இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளி மண்டலமெங்கும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கின்ற சீரமைக்கப்படாத கழிவுகள், காணாமல் போன காடுகள் என சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. (சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு பக்:18) இன்றுள்ள இந்நிலை தொடர்ந்தால் சுற்றுச்சூழல் மிகவும்பாழ்பட்டு உயிரின வாழ்வு கவலைக்கிடமாகி விடக்கூடும். 1980 மற்றும் 1990 களில் தொடங்கி இன்று வரை பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களும், சிந்தனையாளர்களும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை முன்மொழிகின்ற நிலையிலும் அதன் சாராம்சங்களை அரசும் கவனத்தில் கொள்வதில்லை, மக்களும் கருத்தில் நிறுத்தவில்லை என்பதுவே உண்மைநிலை. ஆகவே நாம் நம் முன்னோர்கள் (சங்ககாலமக்கள்) கடைப்பிடித்த இயற்கைசார் வாழ்வியல் முறைகளையும், அவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிந்தனைகளையும் காணும் போது நாமும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாழ்வியலைக் கடைபிடித்து, நமதுசந்ததிகளுக்கு இயற்கையை அதன் இயல்புநிலை பிறழாமல் பாதுகாத்து அளிக்க வேண்டும் என்ற சிந்தனையைப் பெற இயலுமென்பதனை இக்கட்டுரை முன்மொழிகின்றது.
பார்வை நூல்கள்
1. அகநானூறு உரை, புலியூர்க் கேசிகன், சாரதா பதிப்பகம்.
2. சுற்றுச்சூழலியல், ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன்), எதிர் வெளியீடு.
3. பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி..., பாவை பதிப்பகம்.
4. சுற்றுச்சூழல் ஒரு பார்வை, ஏற்காடு இளங்கோ, சாரதா பதிப்பகம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.