தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
29. சங்ககால இலக்கியத்தில் மகளிரின் விளையாட்டுகள் மற்றும்
ஆடை-ஆபரணங்கள் - ஓர் பார்வை
கு. சங்கீதா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, பரமத்தி-வேலூர். நாமக்கல் மாவட்டம்.
சங்க இலக்கியம் தமிழர்களின் இலக்கியக் கரூவூலம். மானுட விழுமியங்களின் அமுத சுரபி. ஆரியக் கருத்துக்களை அள்ளித்தரும் தங்கச் சுரங்கம். குறிப்பாகத் தமிழரின் நாகரிகப் பண்பாட்டு அடையாளம். நாகரீகத்தின் படிநிலையில் மகளிர், தான் வாழ்ந்த நிலம் சார்ந்த பண்புகளை ஒழுகலாகினர். சங்ககால மகளிரின் விளையாட்டுகள் மற்றும் ஆடை-ஆபரணங்கள் பற்றிச் சங்க இலக்கியத்தில் காண்போம்.
சங்க கால விளையாட்டு
சங்க கால மக்களின் விளையாட்டுகள் ஐவகை நிலமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பாகுபாட்டை ஒட்டி அமைந்துள்ளன. அந்நிலத்திற்குரிய பொருள்கள், விளையாட்டிற்குரிய பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால இலக்கியங்களில் தமிழ்கூறும் நல்லுலகம் இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருந்தது. இதனை;
“மாயோன் மேய காடுரை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்.பொ.நூ.951)
என்ற பாடல் வழி அறிய முடிகிறது.
சங்ககால மகளிரின் விளையாட்டுகள்
சங்ககாலத் தமிழ் பெண்கள் தினைபுனம் காக்கையில் பொழுதுபோக்கிற்காகப் பலவகையான விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
ஊசல்
ஞாழல் மரக்கிளையில் தாழை விழுதால் கட்டிய ஊசலில் நெய்தல் மகளிர் விளையாடியுள்ளதை,
“ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்கயிற்றூ சறூங்கி”
(அகம்.20.5-6)
என்ற பாடல் வரிகளும்,
தினைப்புனம் காக்கும் மகளிர் விளையாடுவதற்காக வேங்கை மரத்தில் ஊசல் கட்டியிருந்ந செய்தியினை,
“ஒண்டொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடுசினை யொழிந்து கோடிணர் கஞலிய
குறும்பொறை அயலாகு நெடுந்தாள் வேங்கை”
(அகம்.368:3-5)
என்ற பாடல் வரிகளும் உணர்த்துகின்றன.
கழங்கு
கழங்கு என்பது சங்ககாலப் பெண்கள் தங்கள் இல்லங்களின் மேல்மாடத்தில் நூலால் வரிதலையுடைய பந்தையடித்து விளையாடியுள்ளனர். கழங்கு பற்றி புறநானூறு பாடல் ஒன்று உணர்த்துகின்றது.
“செறியாச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்”
(புறம்-36)
பொன்னால் செய்த காய்களைக் கொண்டு கழங்காடி மகிழும் பெண்களைப் பற்றி இப்பாடல் உணர்த்துகிறது.
இதனையே பெறும்பாணாற்றுபடையும் கூறுகிறது.
“கூழுடை நல்லில் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ் பவைபோல்
பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க
... ... ... ... ...
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை
வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்”
(பெ.ஆ.327-336)
கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி மெல்ல மெல்ல முத்தைப் போன்ற மணலிலே பொன்னால் செய்த கழலைக் கொண்டு விளையாடும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை இப்பாடலின் வழி அறியமுடிகிறது.
“கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோன்”
(அகம்.49-1)
“கிளந்துணை யாயமொடு கழங்குட னாடினும்”
(அகம்.17-2)
போன்ற பாடல்வரிகளும் கழங்கினை உணர்த்துகிறது.
ஆடைகள்
தற்பொழுது ஆடம்பரமான உலகில் ஆடை வகைகள் மிகுதியாக உள்ளன. எத்தனையோ வகையான வண்ண ஆடைகள் பருத்தி நூலால் நெய்யப்பட்டு முன்பு இருந்தன. இப்போது நெகிழியிலிருந்து கூட ஆடைகள் தயாரிக்கின்றனர். அறிவியல் வளர வளர ஆடை வளர்கின்றது. இன்று உலகில் சில பகுதிகளில் குறைந்த ஆடையுடைய மலைநாட்டு மக்கள் வாழ்கின்றனர். பெண்டிர் இடையை மறைத்தும், மார்பை மறைத்தும் மட்டுமே ஆடை அணிகின்ற நிலை இன்று கூட உண்டு.
தழை ஆடை
சங்க காலத்தில் தழை ஆடை உடுத்தும் மரபு இருந்தது. குறிஞ்சிப்பாட்டில் அதன் தலைவி தழையாடை உடுத்தியதைக் கபிலர் குறிப்பிடுகிறார்.
“பைவிரி அல்குல் கொய்தழை தைஇப்
பல்வேறு உருவின் வனப்புஅமை கோதைஎம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி” (கு.பா.102-104)
அடிவயிற்றை மறைப்பதற்காகத் தலைவி தழை உடையை அணிந்திருந்தாள் என்பது தெரிகிறது.
திருமுருகாற்றுப்படையில் குறமகள் தழையாடை உடுத்தியதும் தெரிகிறது.
“முடித்த குல்லை இலையுடை நறும்பு
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு
சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்கல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரோடு” (தி.மு.ஆ201-205)
பட்டினப்பாலையிலும் இதுபோன்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
“பைந்தழை மா மகளிரோடு” (ப.பா.91)
காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவ சேரிப்பெண்டிர் தழை ஆடை உடுத்தியிருந்ததை இப்பாடல் கூறுகிறது.
ஆபரணங்கள்
ஒரு சமுதாயதயத்தின் நாகரீகத்தையும் வளர்ச்சியையும் காட்டுவன அணிகலன்கள். தொடக்கக் காலத்தில் இயற்கைப் பொருள்களாகிய தாவரங்களையும், செடி கொடிகளையும் மலர்களையும் ஆபரணம் போன்று அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர். அதனைக் குழை என்று கூறினர். காதில் பூ இதழ்களை அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்று பழங்காலத்தில் பெயர் பெறும். இப்போதும் காதணியைத் தோடு என்றுதான் கூறுகின்றோம். காழ் என்றால் விதை என்று பொருள், அரையில் சில் காழ், பல் காழ் என விதைகளை போன்ற பொருள்களை அணிந்திருந்தனர். காழ் என்பது மணிகளையும் குறித்தது அதனை மேகலை என்று கூறினர்.
பழங்காலத்தில் ஆபரணங்களை அணி, பூண், இழை, கலம் என்ற பல பெயர்களால் அழைத்தனர். அணிதல் என்பது ஆடை அணிதல் ஆகும். ஆடைகளையும் அணிகலன்களையும் கழற்றி மீண்டும் போட்டுக் கொள்ளலாம். ஆபரணத்தை அணிந்தவர்கள் நடக்கும் போதும், ஓடும் போதும் ஓசை கேட்டால் அந்த அணியைக் கலன் என்று அழைத்தனர். தோள்களிலும், கைகளிலும் தொடுக்கப்படுவதைத் தொடி என அழைத்தனர். ஒண்தொடி, ஆய்தொடி, செறிதொடி, பைந்தொடி என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இளம்பெண்கள் அணிந்த முன்கை வளையளைக் குறுந்தொடி என அழைத்தனர். சங்க மகளிர் அணிந்திருந்த அணிகலன்களைப் பற்றி மேலும் காண்போம்.
“சிறுகுழை துயல்வரும் காதின்” (பெ.ஆ.161)
ஆயன் மகள் காதுகளில் சிறுகுழை அணிந்திருந்தால் என்பதை பெறும்பாணாற்றுப்படை கூறுகிறது.
“புனல்ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்” (பெ.ஆ.312-316)
மகளிர் நீராடும் போது தன் காதணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நீராடுகின்றனர். அக்காதணியை மீன்கொத்திப் பறவை தனக்கு உணவு எனக் கருதித் தூக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றது.
“நூலின் வலவா நுணங்கு அரில்மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய” (பொ.ஆ.161-162)
கரிகால் வளவன் பாடினிக்கு முத்துக்களோடு பொருந்திய பொன்னாலான மாலையைக் கொடுத்தான் எனத் தெரிகிறது.
“பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு” (ம.கா.681)
இப்பாடல் மூலம் மதுரை நகரத்து மகளிர் முத்துக்கள் பொருந்திய மாலை அணிந்திருந்தனர் எனத் தெரிகிறது.
“நுண்பூண் ஆகம்வடுக்கொள முயங்கி” (ம.கா.569)
மேலே கூறியது போல் மதுரை நகரப் பரத்தையரும் அணிந்திருந்தனர் என்பது இப்பாடல் மூலம் தெரிகிறது.
“திருந்துகோல் எல்வளை”(கு.பா.167)
குறிஞ்சி நிலத்தலைவி ஒளி பொருந்திய வளையலை அணிந்திருந்தாள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
முடிவுரை
சங்ககாலத்தில் மகளிர் விளையாட்டுக்களை அம்மக்களின் பண்புகளுக்கேற்ப விளையாட்டினைத் தேர்ந்தெடுத்து பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே விளையாடியுள்ளனர் என்பது புலனாகிறது. சங்ககாலத்தில் மகளிர் ஆடை - ஆபரணங்கள் சமுதாயதயத்தின் நாகரீகத்தையும் வளர்ச்சியையும் தங்களின் செல்வங்கள் மிகுதியாக இருந்தமையையும் புலப்படுத்துகிறது.
குறிப்புகள்
அகம் - அகநானூறு
புறம் - புறநானூறு
பெ. ஆ - பெரும்பாணாற்றுப்படை
கு. பா - குறிஞ்சிபாட்டு
தி. மு. ஆ - திருமுருகாற்றுப்படை
ப .பா - பட்டினப்பாலை
பொ. ஆ - பொருணராற்றுப்படை
ம. கா - மதுரைக்காஞ்சி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.