தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
30. இலக்கண நூல்களில் அறத்தொடுநிற்றலின் அகமரபு
மா. சங்கீதா
முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னுரை
உலக மொழிகளில் தோன்றிய இலக்கணங்களில் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் அமைந்துள்ளன. இந்திய மொழிகளில் தோன்றிய இலக்கண நூல்களில் முதல் நூலாக முதன்மையான நூலாக அமைந்தது தொல்காப்பியம் ஆகும். தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்திலக்கணங்கள் அமைந்துள்ளன. அதில் இடம் பெற்றுள்ள பொருளிலக்கணம் தனித்தன்மை வாய்ந்தது. பொருளிலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரு பிரிவுகளை உடையது. அகப்பொருளில் அகத்திணையியல், களவியல், வரைவியல் கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் போன்றவற்றில் ‘அறத்தொடு நிற்றல்’ என்ற துறை இடம் பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் அகப்பாடல்களில் அறத்தொடு நிற்றல் அமையும். ஒரு பெண் நீண்ட நாட்களாக ஒருவனைச் சந்தித்து வருகிறாள். அதற்குப் பெயர் களவு. அதன் பிறகு திருமணம் நடந்து வாழ்வதற்குப் பெயர் கற்பு. தலைவி தலைவன் திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் தாழ்த்தினால் அச்செய்தியைத் தோழியிடம் கூறுவாள். தோழி முறையாகச் செவிலித் தாயிடம் கூறுவாள். செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்), நற்றாயிடம் கூறுவாள். நற்றாய் தந்தை தமையனிடம் கூறுவாள். இவ்வாறு காலந்தோறும் அகமரபைப் பின்பற்றி அறத்தொடு நிற்றல் செயல் நடைபெறுகிறது. அதனை இலக்கண நூல்களின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மரபு - சொல்லும் பொருளும்
மரபு என்றால் என்னவெனில் கட்டுப்பாடே, வேறொரு வகையாகக் குறிக்குமிடத்து ‘மரபு’ என்பர். கட்டுப்பாடு ஒருவாறு நீக்க முடியாததாகிறது, ஆனால், மரபு அவ்வாறில்லை. பழங்காலந் தொட்டுப் பெரியோர்கள் பொருட்களை எவ்வாறு குறித்தனர்? என்றால் சொற்களால் தான். அவ்வாறு அவர்கள் குறித்தப் பொருளுக்கும் கூறிய சொற்களுக்கும் என்ன தொடர்பு இருந்தது? என்று ஆராய்ந்தோமென்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஒரு சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை உடன்படாவிட்டால் உலகம் நடைபெறாது. ஒருமொழி பேசும் கூட்டத்தாரில் பலர் கூடி, ஒரு பொருளை ஒரு சொல்லால் ஒரு காலத்தில் குறிப்பிட்டனர். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர், ஏனென்று ஆராய்ந்தால் அவர்கட்கும் அதன் காரணம் தெரியாது. நாமும் அதனை ஆராய முடியாது. இதனையே ‘மரபு’ என்று குறிப்பிடுகிறோம். ‘பெரியோர் எவ்வழிச் செப்பினர் அவ்வாறு அவ்வழிச் செப்புதல் மரபு’ என்று வரையறை செய்தும் வைத்தனர். இலக்கியத்தில், இலக்கணத்தில், வாழ்க்கையில் எனப் பல்வேறு நிலைகளில் மரபைப் பின்பற்றி வருகின்றனர். இனி ‘அறத்தொடு நிற்றலில்’ அகமரபை எவ்வாறு சிந்தித்துள்ளனர் என்பதை ஆராய்வோம்.
அறம் - சொற்பொருள் விளக்கம்
ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அறத்தொடு நிற்பது சிறப்பு. அறம் என்பதற்குக் கடமை, நோன்பு, தருமம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை, அறநூல், அறக்கடவுள், தருமதேவதை. தீப்பயனுண்டாக்குஞ்சொல் எனக் ‘கழகத் தமிழ் அகராதி’ பொருள் தருகிறது. மேலும் சில அகராதிகள் அறம் என்ற சொல்லுக்குத் தருமம், புண்ணியம், அறச்சாலை, தரும தேவதை, யமன், தகுதியானது, சமயம், ஞானம், நோன்பு, இதம், இன்பம் எனப் பல பொருள்களைத் தருகிறது. அறம் அடிப்படையில் மூன்று நிலைகளில் அமைகிறது. அவை முறையே, மனத்தால் அமைவது, சொல்லால் அமைவது, செயலால் அமைவதாகும்.
அறத்தின் வழி நிற்றல்
தொல்காப்பியம் தமிழ்ப்பண்பாட்டின் ஆணிவேர். திணைக்கோட்ப்பாடு தமிழர்க்கு மட்டுமே உரியது. மற்ற எந்த மொழிகளிலும் திணைக்கோட்பாடு இல்லை.
“உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆ இரு திணையின் இசைக்குமன் சொல்லெ” (தொல்-484)
அறத்தொடு நிற்றல் பற்றிய செய்தி இடம் பெறுகிறது. தொல்காப்பியத்தில் தெளிவாக,
“அறத்தொடு நிற்கும் காலத் தன்றி
அறத்தியல் மரபிலள் தோழி என்ப” (தொல் -1152)
அறத்தொடு நிற்றலுக்கான தேவை என்ன என்பதைப் பற்றி ஆராயும் போது, களவொழுக்கத்தில் வாழ்ந்த தலைவன், தலைவியைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் காலத்துச் சூழ்நிலைகள் காரணமாக, தலைவியைப் பெண் பேசி வந்தாலும், தலைவனை மணந்து கொள்ள மறுப்பு ஏதாவது ஏற்பட்டாலும், அறத் தொடு நிற்கும் நிலை ஏற்படும் என்பதைப்,
“பிறன்வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்” (தொல் -1060. 41-43)
என்பதைத் தொல்காப்பிய நூற்பா உணர்த்துகிறது.
அறத்தொடு நிற்றல்
‘அறத்தொடு நிற்றல்’ என்பதற்கு ‘களவினைத் தமக்கு முறையே தெரியப்படுத்துதல்’ எனக் ‘கழகத் தமிழ் அகராதி’ பொருள் தருகிறது. பெருந்திணையில் கூட அறத்தொடு நிற்கும் நிலை அமையும் என்பதை,
“அறன் அழித்துரைத்தல் ஆங்கு நெஞ்சழிதல்
எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்” (தொல் -1216 8-9)
தலைவன் செய்யும் செயல்கள் அறனில்லை என்று உணர்த்துகின்ற நிலையையும் தொல்காப்பியம் உணர்த்துகிறது. அறத்தொடு நிற்றல் பற்றித் தொல்காப்பியம், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப்பொருள், மாறனகப்பொருள், இலக்கண விளக்கம், சுவாமிநாதம் ஆகிய நூல்கள் விளக்குகின்றன.
அறத்தொடு நிற்றற்குரிய கருத்துக்கள்
தோழி அறத்தொடு நிற்கும் காலத்துத் தலைவனுடைய எளிமையையும், அவனுடைய புகழையும், அவனுடைய விருப்பத்தையும், தோழி உரைப்பாள். அதோடு வெறியாட்டு நிகழ்ந்தாலும், வேலனிடம் எதிர்த்துப் பேசுவாள். காரணக்காரியங்களைத் தெளிவாகச் சொல்லி உண்மையையும் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்வாள்.
“எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல்
கூறுதலுசாஅதல் ஏதிடு, தலைப்பாடு
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ
அவ் எழுவகைய என்பனார் புலவர்” (தொல் -1153)
தொல்காப்பியத்தில் எப்போது தோழிக்கு அறத்தொடு நிற்கும் என்பதைக் கூறவில்லை. ஆனால், பிற்கால இலக்கணங்களும் அகமரபைப் பின்பற்றி உணர்த்துகின்றன.
இறையனார் களவியலில் அறத்தொடு நிற்றல்
அறம் என்பது தக்கது, அறத்தொடு நிலை என்பது தக்கதனைச் சொல் நிற்றல் என்பதாகும். பெண்டிற்கு அறம் என்பது கற்பு. அதாவது ‘கற்பின்தலைநிற்றல்’ என்பதாகும்.
“காப்புக் கைமிக்கும் காமம் பெருகினும்
நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்
வரைவுஎதிர் கொள்ளாது தமர் அவண் மறுப்பினும்
அவன் ஊர்ஞ்சுங் காலம் ஆயினும்
அந்நா லிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ
அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே” (இறை. களவியல் -29)
காப்பு என்பது இரு வகைப்படும். அவை நிறைக்காவல், சிறைக்காவல் ஆகும். நிறைக்காவல் என்பது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கமாகும். இதனை வள்ளுவரும் வலியுறுத்துகிறார் என்பதை,
“சிறைக்காக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைக்காக்குங் காப்பே தலை” (குறள்-வாழ்க்-7)
சிறைக்காவல் என்பது தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகைக் குழறல், கோழிக்குரல் காட்டலாகும். வேட்கை பெறுகினும், அயலார் வரைந்து புகும் காலமாயினும், வரைவினையேற்று கொள்ளாது தமர் அவ்விடத்து மறுப்பினும், அவனுக்கு நிகழும் ஊறு (ஏதம்) அஞ்சும் காலம் ஆயினும் ஆகிய அந்நாலிடத்தும் மெய்கணின்ற நாண் நீங்கி அறத்தொடு நிற்றல் தோழிக்குரியதாகும், என இறையனார் களவியல் உணர்த்துகிறது.
தமிழ்நெறி விளக்கத்தில் அறத்தொடு நிற்றல்
தமிழர்களின் ஒழுகலாறுகளை முறையாகக் கூறும் நூல் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்பதாகும். விளக்கம் என்பது விளக்கு போன்ற ஒளி பொருந்தியது என்று பொருள். விளக்கம் என்ற சொல்லால் அமைந்த இலக்கண நூல் ‘தமிழ் நெறி விளக்கம்’ ஆகும். இதற்குப் பின்பு நம்பி அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் போன்ற நூல்கள் தோன்றின. இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும், பொருளியலில் இருபத்தைந்து நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் அகத்திணைக்கு இன்றியமையாத முதல், கரு, உரிப்பொருளை 13 நூற்பாக்களில் குறிப்பிடுகிறார். களவை கந்தர்வத்துடன் ஒப்பிடுகிறார். கற்பு என்ற பிரிவில் அறத்தொடு நிற்றல், உடன்செலவு சேயிடைப்பிரிவு, ஆயிடைப்பிரிவு நான்கு பிரிவுகளில் உணர்த்துகிறார். தமிழ்நெறி விளக்கத்தில் அறத்தொடுநிற்றலில் அகமரபை எவ்வாறு பின்பற்றியுள்ளார் என்பதை,
“மறுதலை யில்லா மாண்பியல் கிளவியற்
தலைவி தோழிக் கறத்தொடு நிற்றலும்
செவிலி புகழ்தலும் தோழி யுணர்த்தலும்
முதுவாய்க் கட்டுவி முருகென மொழிதலும்
அதுகுறித் தினைதலு மறல வினவலும்
பொய்யென மொழிதலும் பொன்றத் துணிலலும்
கையன் றென்றலுங் காரிகை நேர்தலும்
பாங்கி வெறிக்கட் படர்க்கைமுன் னிலையும்
ஈன்றோ டன்வயிற் கைத்தா யியம்பலும்
வரைவெதிர் மறுத்தலு மையலுந் தெளித்தலும்
கிளந்த தமர்வயி னற்றாய் கிளத்தலும்
இளையோற் கெதிர்தலும் வெளிப்படை யென்மனார்” (த.நெ.விளக்கம்-22)
தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும், செவிலி புகழ்தலும், தோழி உணர்த்தலும், முதுவாய் கட்டுவிச்சி முருகென மொழிதலும், அதுகுறித்து வினவலும், பொய்யென மொழிதலும் பொன்ற துணிதலும், கையன்று என்றலும் காரிகை நேர்தலும், பாங்கி வெறிகட் படர்க்கை முன்னிலையும், ஈன்றோடன் வயிற்கைத்தாய் இயம்பலும், வரைவெதிர் மறுத்தலும் மையலும் தெளித்தலும், கிளந்த தமர்வயின் நற்றாய் கிளத்தலும், இளையோர் எதிர்தலும் வெளிப்படையாக அதன் துறைகள் உணர்த்துகின்றன.
நம்பி அகப்பொருளில் அறத்தொடு நிற்றல்
தொல்காப்பியர் காலத்தில் அகம், புறம் எனவும், அதற்கு பின்னர் அறம், பொருள், இன்பம் எனவும் ஆயிற்று. இன்பத்தை அகத்திலும், அறம் - புறம் இவற்றைப் புறத்திலும் அமைக்கின்றனர். 13ஆம் நூற்றாண்டில் நாற்கவிராச நம்பி என்பவர் அகப்பொருள் நூலை எழுதினார். அந்நூல் நம்பியகப்பொருள் விளக்கம் என்று அழைக்கப்பட்டது. இதில் ஐந்தியல்களில் 252 நூற்பாக்கள் அமைந்துள்ளன. மூன்றாம் இயலாகிய வரைவியலில் ஆறு நூற்பாக்களில் ‘அறத்தொடு நிற்றல்’ துறை அகமரபைப் பின்பற்றி அமைந்துள்ளது.
“முன்னிலை முன்னிலைப் புறமொழி என்றாங்கு அறத்தொடு நிற்றல்
அன்ன இருவகைத்து அறத்தொடு நிலை” (நம்பியகப் -175)
முன்னிலை - என்பது முன் நிற்பாரோடு நேரடியாகக் கூறுதலாகும்.
முன்னிலைப் புறமொழி - என்பது முன் நிற்பவரிடம் கூற வேண்டியதை வேறு யாரிடமோ கூறுவது போலக் கூறுதாகும்.
அறத்தொடுநிற்றலின் விரி
அறத்தொடு நிற்றல் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. அவை;
1.தலைவி அறத்தொடு நிற்றல்
2. பாங்கி (தோழி) அறத்தொடு நிற்றல்
3.செவிலி (வளர்ப்புத் தாய்) அறத்தொடு நிற்றல் ஆகும்.
தலைவி அறத்தொடு நிற்றல்
கையறு தோழி கண்ணீர் துடைத்துழி கலுழ்தல் கூறல் - இதில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் துயருக்குப் பாங்கி காரணம் கேட்டலும், அதற்குத் தலைவி பதில் கூறலும் என இருவகையில் அமையும்.
தலைமகன் தெய்வங்காட்டிக் கூறல் - தெய்வத்திடம் ஆணையிட்டுக் கூறியதைத் தலைவிப் பாங்கியிடம் கூறுதல். தலைமகன் ‘இனி நின்னைப் பிரியேன்’ என்றவன் பிரிந்தது பற்றித் தலைவி பாங்கியிடம் கூறுதலை,
“யாரும் இல்லைத் தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான்எவன்
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே” (குறுந் -25)
பாங்கியிடம் தலைவன் என்னைக் களவில் புணர்ந்தபோது ‘நின்னைப் பிரியேன்’ என்று கூறியது அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. குருகுப் பறவை ஓடுகின்ற நீரில் ஆரல் மீனைப் பிடிக்கக் கவனமாக இருந்தது. அதுவும் அவன் சொல்லைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவன் கூறியது பொய் என்றால் யான் யாது செய்வேன்? என்று கூறுகிறாள்.
மேலும், இயற்பழித்து உரைத்துழி இயற்படமொழிதல் - இது தலைவனைப் பாங்கி பழித்துக் கூறல் அதற்கு தலைவி இயற்பட மொழிதல் என இரு வகைகளைப் பெற்றுள்ளது. தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றல் - தலைவன் சொன்ன உறுதி மொழியில் தலைவன் தவறியதால், அதனைப் பொறுத்தருளத் தெய்வத்திடம் வேண்டுவோம் எனத் தலைவி பாங்கியிடம் கூறுதல். இல்வயிற் செறித்தமை சொல்லல் - தலைவியை தாய் வீட்டை விட்டு செல்லக்கூடாதென்று இற்செற்செறித்ததை பாங்கியிடம் கூறுதல். செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் - இரவுக்குறிக்காகத் தலைவன் வந்ததைச் செவிலி பார்த்ததைத் பாங்கிக்குத் தலைவி அறத்தொடு நிற்றலில் இடம் பெறுகின்றன.
பாங்கி அறத்தொடு நிற்றல்
செவிலி தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதல் - தலைவியிடம் மாறுபாட்டைக் கண்ட செவிலி பாங்கியிடம் வினாதல். பாங்கி வெறிவிலக்கலும் செவில் பாங்கியை வினாதல் - தலைவியின் மாற்றம் கண்டு செவிலி வெறியாட்ட நினைக்கப் பாங்கி அதனை விலக்கச் சொல்லவும், செவிலி அதற்கானக் காரணம் கேட்டலும் என இரு வகையில் அமையும். பாங்கி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் - தலைவன் பூங்கொடுத்து அவளோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டதைப் பாங்கிச் செவிலியிடம் கூறுதல் பாங்கி புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் - ஆற்றில் விளையாடும் போது வெள்ளம் வர அடித்துச் செல்லப்பட்ட தலைவியைக் காப்பாற்றியதால் இருவருக்கும் களவொழுக்கம் ஏற்பட்டதைப் பாங்கிச் செவிலியிடம் கூறுதல். பாங்கி களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் - தலைவியை தாக்க வந்த யானையிடமிருந்து ஒருவன் அவளைக் காத்தான். அப்போதிலிருந்து அவனுடன் களவொழுக்கத் தொடர்பு ஏற்பட்டதாகப் பாங்கி செவிலியிடம் கூறுவதை,
“சுள்ளி சுனைநீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதனால் கடித்தான் உளன்” (திணைமாலை.2)
தினைப் புனக்காவலின் போது யானை தாக்க வர, பரணில் ஏறிக் காத்துக்கொள்ள முடியாதபோது ஒருவன் வந்து தலைவியைக் காத்து அவள் கூந்தலில் மலர்களைச் சூடினான். அன்று முதல் அவனோடு தலைவிக்குக் களவொழுக்கம் ஏற்பட்டதாகப் பாங்கிச் செவிலியிடம் கூறினாள்.
செவிலி அறத்தொடு நிற்றல்
“மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாவுழி
முன்னிலை மொழியால் மொழியும் செவிலி” (நம்பியகப் -178)
தலைவியிடம் காணப்படும் வேற்றுமைகளை அறிந்து அதற்கானக் காரணத்தை நற்றாய் செவிலியிடம் வினாவுதல் ஒரு வகையாக மட்டும் அமையும். தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல் - தலைவியிடம் காணப்படும் வேற்றுமையை அறிந்து அறிந்து அதற்கான காரணத்தை நற்றாய் செவிலிதாயிடம் நற்றாய் வினாவுதல். செவிலி முன்னிலை மொழியால் நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் - நற்றாயிடம் ஒரு செல்வர் நம் மகளுக்கு பெதும்பைப் பருவத்தில் இங்கு ஒரு கலைமான் வந்ததோ!” என்று கேட்டு அவளுடன் இணைந்தார். இவ்வாறு நம்பியகப் பொருளில் மூன்று நிலைகளில் ‘அறத்தொடுநிற்றல்’ செயல் நடைபெறுகிறது.
மாறன் அகப்பொருளில் அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிலை நிகழுமிடம் - அறத்தொடு நிலை என்பது தவறுதலான கருத்தோடுக் காரியங்களை நடத்தவிடாது உண்மையை எடுத்துக் கூறுவது “கற்பெனும் பிடியில் நின்று களவு ஒழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிபடுத்தலே அறத்தொடு நிற்றல் எனலாம்” என வ. சுப. மாணிக்கம் குறிப்பிடுகிறார்.
“தலைவனூ றஞ்சினும் தமர்வரைவு மறுப்பினும்
பிறர்வரைவு நேரினும் காவல் பெருகினும்
அந்நான் கிடத்துறு மறத்தொரு நிலையே” (மாறன்அகப் . 56)
அறத்தொடு நிற்கும் முறையும் ஒருவித ஒழுங்கிலேயே நடைபெறும் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய், தந்தை, தன்னையனுக்கும் அறத்தொடு நிற்பாள்.
தலைவி அறத்தொடு நிற்கும் முறை
பாங்கியிற் கூட்டம் நீங்கிய ஏனைய மூன்று புணர்ச்சியில் தலைவன் ஒருவழித்தணத்தலிலும், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த போதும் - குறிவழிச்சென்ற தலைவனைச் செவிலி கண்ட போதும், செவிலி ஐயங்கொண்ட தலைவியை இற்செறித்த போதும் - தலைவி வருத்தம் கைமிகக் கொண்டிருக்கத் தோழி தலைவியை வேறுபாட்டிற்குக் காரணம் யாது? என வினவிய போதும், வினவாதவிடத்தும் தலைவி அறத்தொடு நிற்பாள் என உணர்த்துகிறது.
தோழி அறத்தொடு நிற்கும் முறை
“அறிவுடைச் செவிலிக் கவண்மகண் முன்னிலை
நெறியிரு வகையால் நினைவுற வுணர்த்தும்” (மா.அ.58)
செவிலிக்கும் அவள் மகளாகிய தோழி முன்னிலை மொழியாகவும், குறிப்பாகவும் உணர்த்துவாள்.
செவிலி அறத்தொடு நிற்கும் முறை
தோழி வாயிலாகத் தலைவியின் களவை அறிந்த செவிலி நற்றாய்க்கு அவள் மனம் தெளிவுறும்படி அறத்தொடு நிற்பாள்.
அன்னை அறத்தொடு நிற்கும் முறை
செவிலி வாயிலாகத் தலைவியின் களவை அறிந்த நற்றாய், சொல்லாடப் பெறாள். ஆதலின் குறிப்பினாள் உணர்த்துவாள். தன்னையும் தந்தையும் குறிப்பினாலேயே உணர்ந்து கொள்வர்.
அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழுமிடம்
“முற்றிழை வேறுபா டுற்று வினாவுழி
யெதிர்மொழி கொடுபோ ரேந்திழைப் பாங்கி
சதிர்பயில் செவிலி தாயொடு மூவர்” (மா.அ.62)
களவில் புணர்ச்சி காரணமாகத் தலைவி உடம்பில் ஏற்படும் வேறுபாடுகளைக் கண்டு தலைவியைத் தோழியும், தோழியைச் செவிலியும், நற்றாயும் வினவுவாள். அவ்வாறு வினவும் போது, அதற்கு எதிர்மொழி (பதில்) கொடுப்போர் தலைவி, பாங்கி, செவிலித்தாய் என்னும் மூவராவர். அதாவது தோழிக்கு தலைவியும், செவிலிக்கு தோழியும், நற்றாயுக்குச் செவிலியும் அக மரபைப் பின்பற்றிப் பதில் கூறுவர் என்பது புலனாகிறது. மேலும் உடன் போக்கு நிகழ்ந்தவிடத்து அறத்தொடுநிற்றர்க் உரியவராகப் பாங்கி, செவிலி, நற்றாய் மூவரும் முறையே அறத்தோடு நிற்பர் என முன்னோர் மரபைப் மாறனகப்பொருள் உணர்த்துகிறது.
இலக்கண விளக்கத்தில் அறத்தொடு நிற்றல்
முன்னிலை மொழியும், முன்னிலைப் புறமொழியும் இருவகையை உடையது அறத்தொடு நிற்றலாகும். அறத்தொடு நிற்றலின் விரியாக “கையறுதோழி கண்ணீர் துடைத்துழிக் கலுழ்தல் காரணம் கூறல் முதலாக செவிலி கனைஇருள் கண்டமை கூறல்” ஈறாகக் கிடந்த தலைவி கூற்றுக்கள் ஏழும், செவிலி தலைமகள் வேற்றுமைக்கு காரணம் கேட்பினும், தான் வெறிவிலக்கிய வழிக் காரணம் கேட்பினும், பூவும், புனலும், களிறும் ஆகிய இவை காரணமாகப் புணர்ச்சியினை அறிவித்தலாகிய பாங்கி கூற்றுகள் மூன்றும், தலைமகன் வேறுபாடு கண்டு நற்றாய் தன்னை வினவியவிடத்து முன்னிலை மொழியானே செவிலி கூறும் கூற்றுமாகிய இவை அனைத்தும் களவொழுக்கம் வெளிப்படாது நின்ற இடத்து அறத்தொடு நிற்றலின் விரியாக இலக்கண விளக்கம் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் முன்னோர் மொழிந்த அகமரபை அப்படியே பின்பற்றுயுள்ளார் என்பது புலனாகின்றது.
சுவாமி நாதம்
சுவாமி நாதம் எனும் ஐந்திலக்கண நூலில் முன்னிலை, புறசொல் எனும் இரு நிலைகளில் அறத்தொடு நிற்றல் மொழிகிறது.
“அறம்உணதாய் செவிலியைப்பெண் வேற்றுமைவினாதல்
ஆவள்முன்னின்று உணர்த்தல் இரண்டேசெவிலி அறமாம்
முறையின் இவை அறத்தொடு நிலைபதினே ழாகும்
மூவெட்டுங் களவுவெளிப் படுமுன்வரை வாகும்
இறையுடன் போய்வரைதல் மீண.டேவரைதல் உடன்போக்கு
இடையீடு உற்றே வரைதல் வெளிப்படைமூன்று அதனினம்
இறைதவிரும் போக்கே, கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சிஎன வேதொகைமூன்றாம் உடன்போய் வரைவே” (சுவாமி-110)
செவிலி அறத்தொடு நிற்றலும் உடன்போய் வரைதலையும் நூற்பா -109,110 முன்னோர் கூறிய அகமரபைப் பின்பற்றி அறத்தொடு நிற்றலில் ‘சுவாமி கவிராயர்’ குறிப்பிடுகின்றார்.
நிறைவுரை
தொல்காப்பியர் காலம் தொடங்கி இறையனார் களவியல், தமிழ் நெறி விளக்கம், நம்பியகப்பொருள், மாறன் கெப்பொருள், இலக்கண விளக்கம் வரை தொடர்ந்து, சென்ற நூற்றாண்டில் தோன்றிய சுவாமிநாதம் வரை முன்னோர் வரைந்த அகமரபைப் பின்பற்றி அறத்தொடு நிற்றலுக்கான இலக்கணங்களை யாத்துள்ளனர். சில இடங்களில் அகமரபில் பிறழ்வு, நெகிழ்வு, மாற்றம் ஆகியனவும் நிகழ்ந்துள்ளன. இவ்விலக்கணங்களைப் பின்பற்றிச் சங்க இலக்கியங்களிலும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும், சிற்றிலக்கியங்களில் கோவை இலக்கியத்திலும் அகப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது இக்கட்டுரையின் வழி ஆராயப் பெற்றுள்ளன.
துணை நின்ற நூல்கள்
1. ச. வே. சுப்பிரமணியன் (ப. ஆ), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.
2. ச. வே. சுப்பிரமணியன் (ப.ஆ), சங்க இலக்கியத்தில் அறத்தொடு நிற்றல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.
3. ச. வே. சுப்பிரமணியன் (ப.ஆ), தொல்காப்பியம் முழுவதும் (வி. உ), மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.
4. ச. வே. சுப்பிரமணியன் (ப.ஆ), குறுந்தொகை, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.
5. ச. வே. சுப்பிரமணியன் (ப.ஆ), தொன்னூல் விளக்கம், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.
6.சுபாஷ் சந்திரபோஸ், அகப்பொருள் விளக்கம், 23பி-2739 தொப்புள்பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர்.1
7. நக்கீரர் உ. ஆ), ச. பவானந்தம் பிள்ளை (ப. ஆ), இறையனார் அகப்பொருள், சாரதா பதிப்பகம் சென்னை-14.
8. கா. ர. கோவிந்தராச முதலியார் (ப. ஆ), வீரசோழியம், நியூ செஞ்சுரி புக் கவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
9. வ. சுப. மாணிக்கம், தமிழ் காதல், சாரதா பதிப்பகம், சென்னை - 14 .
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.