தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
33. வள்ளுவர் காண விரும்பிய சமுதாயம்
மு. சதீஸ்குமார்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
“வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு”
திருக்குறள் தமிழனின் அடையாளம் காட்டும் நூல் என்பதைத் தமிழராகிய அனைவரும் ஒப்புதல் வேண்டும். குறள் ஒவ்வொன்றும் மனிதன் எவ்வகையிலேனும் உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கே எழுதப்பட்டதாகும். திருவள்ளுவர் தேடல் உத்திக்கு வழிவகுத்துத் தம் நூலை யாத்துள்ளார். நவில்தொறும் நூல் பயம் காணுமாறு குறள் எழுதப்பட்டுள்ளது. அறம் என்ற ஒன்றை, ஒழுக்க அடிப்படையில் திருவள்ளுவர் வற்புறுத்தி விளக்கி எழுதியிருப்பது போல, உலகில் எவரும் எழுதி காட்டவில்லை. திருக்குறள் ஓர் உலகப்பொது நூல், இந்தியத் தேசிய நூல், தமிழர் பண்பாட்டு நூல், தமிழ்மறை ஆகும். உலகம் விளக்கமுற உதிக்கின்ற ஞாயிறு போல் உள்ளங்களில் விளக்கேற்றியவர் வள்ளுவர்.
சமுதாயம்
சமுதாயம் என்பதற்குப் பகுத்தறிந்து தனக்கு இது தேவை, தேவை இல்லை என ஆய்து அறிந்து தெளிந்த சிந்தனை, நல்வழிப்பட்டு நடந்து பிறரையும் நடத்தி வைப்பவர்களான நிறைந்த கூட்டத்தையே சமுதாயம் என்று வள்ளுவர் உணர்த்துகிறார். நம் வாழ்க்கையில் சிறந்த நெறிகளைப் பின்பற்றி மேன்மைகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்க்கையின் சாரத்தை ஒன்றே முக்கால் அடியில் பிழிந்து சாறாகக் கொடுத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை.
வாழ்வாங்கு வாழ்தல்
உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான். இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன் வாழும் முறையினை நன்கறிந்து மேன்மையுற வாழ்ந்திடுவோர் தெய்வத்திற்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவர். வாழவேண்டிய முறைகளில் சிறந்ததென வள்ளுவர் அறிவுறுத்துவது ஒருவனும் ஒருத்தியும் கற்பன கற்று, கேட்பன கேட்டு, மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மன மாசற்று, விடுதலை பெறுவதற்குப், பிள்ளைப்பேறுண்டாகவும், அன்பு பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், ஈகை எழவும் போன்ற வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும். இல்வாழ்க்கையிலிருந்து ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்துக் கொண்டு தீதின்றி வந்த பொருள் கொண்டு அற உணர்வுடையவனாகி, வாழும் முறைப்படி வாழ்பவன் விண்ணுலகிலுள்ள தெய்வங்களுக்குச் சமமாகக் கருதப்படுவான். அது மனிதனிடமுள்ள தெய்வத்தன்மையை வெளிக்கொணர்கிறது. இக்கருத்தினை,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள்-50)
பிறப்பின் பயனுடைய புகழினை எய்திடல் வேண்டும் என்பது வள்ளுவரின் விழைவும் வேட்கையுமாகும் என்பதை இக்குறள் விளக்குகிறது.
அறிவார்ந்த மக்கட்பேறு
தம்மிலும் புதல்வர் அறிவினராகில் உலகத்தார்க்கெல்லாம் இனிமையாம் என்று தம்மோடு அறிவார்ந்த மக்களைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இதேபோல் தம் குழந்தைகளை அறிவுடைமைப்படுத்துதலே பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருத்தல் வேண்டும். தம்மைவிடத் தம்மக்களை அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்துள்ள எல்லா மனிதருக்கும் இன்பம் தருவது இதனை,
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள்-68)
சமுதாய மக்கள் நாளும் அறிவின் வயப்பட்டு முன்னேறுதல் வேண்டும். இது மன்னுயிர்கெல்லாம் தம்மின் இனிது ஆம் என்று கூறுகிறார்.
ஒழுக்கத்தின் உயர்வு
சமுதாயம் ஒழுக்கத்தின் வழி நடைபயின்று, பிறப்பிற்குப் பெருமை வந்து எய்துமாறு வாழ்ந்திடல் வேண்டும் என்றும்,
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்” (குறள்-133)
ஒழுக்கத்தினின்று பிறழ்ந்தால் பிறப்பே இழிவாகும் என்று உறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர். அதாவது ஒழுக்கமுள்ள சமுதாயத்தையே பெரிதும் விரும்புகிறார் என்பதை அறிய முடிகிறது.
தொல்காப்பியம் இக்கருத்தை,
“குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்” (தொல்-சொல்-57)
ஒருவர்க்கு ஒழுக்கம் உடைமையாகிய செல்வமே குலப்பண்பு ஆகும் என்கிறது.
மேலும் கம்பராமாயணம் இக்கருத்தை,
“ஒழுக்கம் உடைமை குடிமை
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்” (கம்ப-நாட்டுப்-38)
என்ற பாடல் வரிகளில் விளக்குகிறது.
ஒருவருக்கொருவர் உதவும் பாங்கு
சமுதாயம் உயர்ந்தோங்க வேண்டுமானால் ஒருவருக்கொருவர் உதவிடும் நற்பண்பு கொண்டோராய் ஒழுகுதல் வேண்டும்.
“ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவர்
விற்றுக்கோள் தக்க துடைத்து” (குறள்-220)
உதவிடும் நற்பண்பால் துன்பமே வரினும் அதற்கெனத் தன்னையே விலையாகக் கொடுக்கவும் தயங்காது முன் வருதல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். இக்கருத்தையே புறநானூறு
“ஒப்புரவின்மையே வறுமையாதல்
புரப்போர் புன்கன் கூர
இரப்போர்க்கியா இன்மையான் உறவே” (புறம் -72:17:8)
என்ற பாடல் மூலம் ஒப்புரவின்மையே வறுமையாதல் என்றும், அதற்கெனத் தன்னையே கொடுக்கவும் தயங்காத உறவு கொள்ளுதல் வேண்டும் என்கிறது. மேலும்,
“மனுயிர் ஓம்பி அருள்ஆள்வாற் கில்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை” (குறள்-244)
தம் உயிர்போல எல்லோரையும் பரிந்து பார்த்து நடப்பார்க்கு, எந்தக் காலத்திலும் வினை இல்லை என்கிறார். அதாவது, கருணை குணம் கொண்டவராக இவ்வுலகில் வாழ்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
புகழ் பெற வாழ்தல்
நிலையாக எதனையும் தன்னகத்தே கொண்டு இயங்காத உலகத்தில் புகழ் ஒன்றே நிலைத்து நிற்கும் பேராற்றலை உடையது என்பதை உணர்ந்து சமுதாய மக்கள் புகழீட்டிப் பெருமை பட வாழ்தல் வேண்டும் என்பதை,
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழப்பால்
பொன்றாது நிற்பதொன்று இல்” (குறள்-233)
என்ற குறளில் விளக்குகிறார்.
இக்கருத்தையே குறுந்தொகைப் பாடல்
“நில்லாமையே நிலையிற் றாகலின்
நல்லிசைவேட்ட நயனுடை நெஞ்சில்” (குறுந்:143:2-4)
நிலையாததாகிய இவ்வுலகத்தின்கண் கெடாது நிலை நிற்பது ஓங்கிய புகழ் ஒன்றுமே அன்றி வேறொன்றும் இல்லை என்கிறது. மேலும் புறநானூறு
“மன்னா உலகத்து மன்றுதல் குறித்தோர்
தம் புகழ் நீறீஇத் தம்மாய் ந்தனரே” (புறம் -165:1-2)
என்ற பாடல் மூலம் புகழ் நிற்றலையும் புகழது சிறப்பையும் வள்ளுவத்தினை எண்ணிப் புகழீட்டி வாழ்ந்திட முனைதல் வேண்டும். மேலும்,
தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடல் மதியினை மயக்கும் மதுவினைத் தொடர்ந்து அருந்துவது என்பது உயிரை மாய்த்துக் கொள்ளச் சிறிது சிறிதாக நஞ்சினை உண்பதற்கு ஒப்பாகும். அதை மீறி உண்ணத் தலைப்பட்டால் ஒழுக்கமுடைய அறிஞர்களால் அவர்கள் எண்ணப்படாதவராகும் நிலை ஏற்படும் என்பதை,
“துஞ்சினார் செத்தாரின் வேறெல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்” (குறள்-926)
அறிவுடைமையுடனும் ஊக்கமுடைமையுடனும் செயல்படுதல் வேண்டும் என்றும் நிலைத்த அறத்தினையே பேசுவதால் வள்ளுவம் இக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் துணையாக நிற்கும் என்பதை இச்சமுதாயம் கருத்தில் கொண்டு வள்ளுவத்தைப் போற்றி அதன் வழி புகழோடு வாழத் தலைப்படுதல் வேண்டும் என்கிறார்.
மேலும், தூய மனத்தினை உடையவராய் மனித இனத்தின் வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது, இம்மண்ணுயிரைக் காப்பது போன்று ஒழுகுதல் என்ற மாண்பு அமையுமானால் அஃது அனைத்து வகை புகழையெல்லாம் அளிக்க வல்லது என்பதையும் கருத்தில் கொண்டு வாழ்தல் வாழ்க்கைக்கு உகந்த வழி என்கிறார் வள்ளுவர்.
ஈகைப்பண்பு
சமுதாய மக்கள் வறுமையினைக் கண்டு மனமிரங்கி இன்னார், இனியர் என்று பாராது எல்லோர்க்கும் உதவிடும் ஈகைப் பண்பு கொண்டொழுகியும் அறிவுடைமையுடன் ஊக்கமுடைமை கொண்டும் விளங்கிடுதல் வேண்டும் என்றும்,
“ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள்-231)
புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல், அக்கொடையான் அல்லது உயிர்க்கு இலாபம் வேறு ஒன்று இல்லை என்கிறார் வள்ளுவர்.
சமுதாய நலத்தைக் காக்க வேண்டும் என்பதையும் நமது பல்வேறு அதிகாரங்களில் அறுதியிட்டு உறுதிபடக் கூறுவதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
பொருளீட்டலில் நாட்டம் கொண்டு பொய்மையுற வாழும் இன்றைய மானிடம் வாழ்வாங்கு வாழ்ந்து, அறிவார்ந்த நன் மக்களை ஈன்று, ஒப்புரவு கொண்டொழுகி, தீமை பயத்தலான பழக்கங்களைத் தவிர்த்து ஒழுக்கத்தின் வழி நின்று புகழீட்டி வாழ்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
முடிவுரை
“வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதல்”
உலகிற்கு தமிழனின் கொடை திருக்குறள். உலக மானுட வாழ்வுக்கு நெறிமுறை வகுத்த மாமறை அது. நூலறிவும் நுண்ணறிவும் உலகியலறிவும் ஒருங்கே முற்றிய திருவள்ளுவப் பெருந்தகையனார் மாந்தர்க்கு அறங்களும் நெறிகளும் நல்லுரைகளும் புகட்டுவதற்கு மேற்கொண்ட உத்திகள் பற்பல. திருக்குறள் நீதி நூலாகவும், கவிச்சுவை அமைந்த பனுவலாகவும் விளங்குகிறது. திருக்குறட்பாக்கள் நீதியைச் சொல்லுவதன்றிக் கவிச்சுவையும் பெற்று இனியவனாக அமைந்திருப்பதனால் அவற்றை மக்கள் விரும்பிப் படித்து உள்ளத்தில் தேக்கிக் கொண்டார்கள். சமுதாயத்தில் நன்மக்கள் என்ற பெயரினை எண்ணத்தில் தெளிவும் உறுதியும் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதியை ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டால் வள்ளுவர் கண்ட சமுதாயம் மலரும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.