தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
34. பட்டினப்பாலையில் உருத்திரங் கண்ணனாரின் நகர வாழ்வியல் குறித்த சிந்தனைகள்
மு. சத்தியராஜ்,
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
சங்க இலக்கியங்கள் சங்ககால மக்களின் வாழ்வியலை எடுத்துக் கூறுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டு நூல்களுள் பட்டினப்பாலையும் ஒன்றாகும். பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிக்கும். நகரமாக விளங்கிய சிறப்புக்களையும், சோழ மன்னனின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர் முறைகளையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும், கரிகாலனுடைய வீரச்செயல்கள் என பல செய்திகளைப் பட்டினப்பாலை வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றில் சங்க காலத்திலேயே தலைநகரமாகவும், உலகப் புகழ் வாய்ந்த துறைமுகமாகவும் விளங்கியதை உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் பாடியுள்ளார். இப்புலவரின் நகர வாழ்வியல் குறித்த சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சோழ நாட்டின் சிறப்பு
“சோழ நாடு சோறுடைத்து” எனும் பழமொழிக்கு ஏற்ப சோழ நாடானது பண்டைய காலத்திலிருந்தே மிகுந்த வளமுடன் விளங்கியது. சோழ நாட்டின் அகன்ற வயல்களுக்கிடையே நன்கு முற்றி கரும்பினைக் காய்ச்சுவர். இதனால் கரும்புப் பாகின் மணம் கமழ்ந்து அப்பகுதியே நிறைந்திருக்கும். கரும்பைக் காய்ச்சும் போது வெளிவரும் புகையால் நீர் நிறைந்த வயல்களில் வளர்ந்த நெய்தல் மலரானது வாடிக் காணப்படும். இங்குள்ள வயல்கள் என்றும் மாறாத புது வருவாயுடையதாக விளங்கியதை,
“விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின் வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்” (பட்டினப். 8 -11)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இதனை;
“எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்”
என பெரும்பாணாற்றுப்படை பாடலடிகள் (260-261) காட்டுகின்றன.
சோழ நாட்டின் வளம் பொருந்திய மனைகளில் அகன்ற முற்றத்தே நெல் காயவிடுவர். ஆந்த நெல்லினைத் தின்ன வரும் கோழிகளை விரட்டும் பொருட்டு நிறைந்த அணிகலன்களை அணிந்த மகளிர் தம் காதில் அணிந்திருக்கும் குழைகளை எடுத்து வீசி கோழிகளை விரட்டுவர். அந்த அளவுக்குச் செல்வம் நிறைந்த வளமனைகளைக் கொண்டதாக விளங்கியதை உருத்திரங் கண்ணனார் புலப்படுத்துகிறார்.
நகரச் சூழல்
வெள்ளை உப்பினைக் கூவி விற்றுப் பண்டமாற்றாகக் கொண்டு வந்த நெல்லை ஏற்றி வந்த படகுகள் குதிரை லாயத்தில் வரிசையாகக் கட்டியிருப்பது போல் படகுகளை கட்டியிருப்பர். இங்கு மரங்கள் மற்றும் மலர்கள் நிறைந்த சோலைகளும், பொய்கைகளும் நிறைந்து இயற்கை வளம் கொழிக்கும் இடமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது. நகரத்தின் மையத்தில் இயற்கைச் சோலைகளையும், பொய்கைகளையும் அமைப்பதன் வாயிலாக சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பண்டைய தமிழரிடத்தில் இருந்ததை அறிய முடிகிறது. இதனை,
“வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
... ... ... ... ...
வான்சுடர் பொய்கை
இரு காமத்து இணை ஏரி” (பட்டினப். 29 - 39)
என்னும் பட்டினப்பாலை பாடலடிகள் காட்டுகின்றன.
உணவுச் சாலைகள்
தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்பது வழக்கு. காவிரிப்பூம்பட்டினத்து மக்களும் தானம் வழங்குவதில் சிறந்து விளங்கினர். அறம் செய்வதற்கென்றே அமைக்கப்பட்ட அட்டில் சாலைகள் காவிரிப்பூம்பட்டடினத்தே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. இவ்வட்டில் சாலைகள் புலிப்பொறி பொறித்த கதவுகளையும், திருமகள் உருவம் பொறித்த மதிலையும் கொண்டு அமைந்திருந்தது. இங்கு சமைத்த சோற்றினை வடித்த கஞ்சியானது ஆறுபோல் தெருவில் வழிந்தோடியது. அதைப் பருக வந்த எருதுகள் தம்முள் போரிட்டதால் சேறு படர்ந்தது. பின் அவ்வழியே எந்நேரமும் தேர்கள் ஓடியதால் சேறு புழுதியாக மாறி மதிற்சுவரின் மீது படர்ந்து காட்சியளித்தது.
மதம் சார்ந்த கோயில், பள்ளிகள்
பூம்புகார் நகரத்தில் அனைத்து மதம் சார்ந்த கோயில்களும் அமைந்திருந்தது. இங்கு பிறவிப் பயனை அடையும் பொருட்டு அனைத்தையும் துறந்து தவம் செய்யும் துறவிகள் தங்க சமண சமயம் சார்நத தவப்பள்ளிகள் நகரின் ஒரு புறத்தே அமைந்திருந்தது. அதுபோல பௌத்தப் பள்ளிகளும் இங்கு அமைந்திருந்தன. மற்றொருபுறம் வைதீகர்களின் வேள்விக் குண்டம் அமைந்த இடங்களில் எந்நேரமும் வேள்விகள் பல செய்வதால் புகை வந்து கொண்டே இருக்கும். பூதங்கள் காவல் காக்கின்ற தன்மையுடையதும், தெய்வம் தங்கும் தன்மை பொருந்தியதுமான நகரமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது.
காவிரியாற்றின் சிறப்பு
காவிரியாறு சோழநாட்டை சிறப்பாக வளப்படுத்தியுள்ளதை,
”வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்” (பட்டினப். 5 - 7)
என்ற பாடல்கள் காவிரியின் நீர் வளத்தைக் குற்றம் இல்லாத புகழைக் கொண்ட விண்மீன் தான் இயல்பாக இருக்கும் வடதிசையில் இல்லாமல் இடம் மாறி தென் திசைக்குப் போனாலும் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடிப் பறவைக்கு மழைத்துளி கிடைக்காமல் மழைப் பொய்த்துப் போனாலும் காலந்தோறும் பெருக்கெடுத்து வருவது காவிரி என காவிரிநீரின் சிறப்பை இப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
சோழநாட்டின் நீர்வளம்
“காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில்வதியும்” (பட்டினப். 13-15 )
இவ்வரிகள் மூலம் சோழநாட்டில் உள்ள விளைநிலங்கள் எப்போதும் வறண்டு போகாதவை. கரும்பின் சாற்றைப் பிழிந்து காய்ச்சும் போது வரும் புகையினால் பக்கத்து வயல்களில் இருக்கும் நீர்களில் நன்கு மலர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள் வாடி இருக்கும். வளமாக விளைந்திருக்கும் செந்நெற்கதிர்களைப் பருத்த வயிற்றைக் கொண்ட முதிர்ந்த எருமைக் கன்றுகள் நெல்கூடுகளின் நிழலில் தூங்கும். இவ்வாறு சோழநாட்டின் நீர்வளத்தை இப்பாடல்கள் விளக்குகிறது. மேலும்,
“கோள் தெங்கின் குலை வாழை
காய்க் கமுகின் கமழ் மஞ்சள்”(பட்டினப். 29 - 39)
நீர் வளங்களான காவிரியாறு பொய்கைகள் மழைத்துளி போன்றவை இருந்ததால் குலைகளையுடைய தென்னை மரங்கள், வாழை மரங்கள், பனை மரங்கள், காய்களையுடைய பாக்கு மரங்களும், மாமரங்களும் இருந்துள்ளன. மணம் வீசும் மஞ்சளும், கிழங்கினையுடைய சேம்பும், முளையையுடைய இஞ்சியும் விளைந்துள்ளன.
சுங்கச் சாவடிகள்
காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கம் வாங்குவோர் உறக்க மயக்கத்தால் சோர்ந்திருந்து இரவின் கடைசி யாமத்தில் சிறிது உறங்கினர். வெண்மையான பூங்கொத்துக்களையும் தாழையின் மடல்களையும் கொண்டிருக்கின்ற கடற்கரையில் பண்டசாலைத் தெருக்கள் இருந்தன. அங்குத் தம் அரசனுக்கு வரவேண்டிய சுங்கப்பொருளை மற்றவர் கொள்ளாமல் காக்கும் பழமையான புகழையுடையோர் சூரியனின் தேரில் பூட்டியக் குதிரைகளைப் போல நாள்தோறும் குறைவில்லாமல் சுங்கப் பொருளைப் பெற்றனர்.
பண்டசாலை
பொருள்களை ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்துள்ளார்கள் என்பதையும், பொருட்களை பாதுகாக்க பாண்டசாலை இருந்ததையும் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்புவும்” ( பட்டினப். 126 - 127)
இப்பாடல் வரிகளில் மழை மேகங்கள் தான் குடித்த நீரை மலை மீது பொழிகிறது. அந்த நீர் இறுதியில் கடலில் கலக்கின்றது. இந்தக் காட்சி மழைக்காலத்தை போன்று காணப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து கடல் வழியே படகுகளில் வந்த பொருட்களை இறக்கி நிலத்தில் ஏற்றவும், நிலத்தில் இருந்து வரும் பொருட்களை படகுகளில் ஏற்றி மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லவும் பண்டசாலை அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் குவிந்த பொருட்கள் மீது அடையாளமாக அவற்றின் மீது சோழ மன்னனின் அடையாளச் சின்னமான புலி இலச்சினையிட்டு அப்பண்டங்களை அடுக்கி வைத்தனர். அவை பார்ப்பதற்குப் பெரிய மூங்கிலைக் கொண்ட மலைகளைப் போன்று இருந்தன. அவற்றின் மீது ஆண் நாய்களும், ஆட்டுக்கிடாவும் ஏறிக் குதித்து விளையாடின. இவை பார்ப்பதற்கு மலையாடு போல காட்சியளித்தன.
அங்காடித் தெரு
நெருங்கிய படிகளை உடைய நெடிய ஏணிகள் சாத்தப் பெற்ற வளைந்த சுற்றுத் திண்ணைகளையும் பல கட்டுக்களையும் சிறியனவும் பெரியனவுமாகிய வாயில்களையும் பெரியனவுமாகிய வாயில்களையும் பெரிய இடைகழிகளையும் உடையன மேகம் தங்கும் உயர்ந்த மாடங்கள். அங்குத் தென்றல் வரும் சாளரங்களைப் பொருந்தி உயர்ந்த மலைப்பக்கத்தில் நுண்ணியதான மகரந்தத் தூள்களைச் சிதறும் செங்காந்தளின் அழகிய கணுக்களில் கவிந்து ஒன்று சேர்ந்து தோன்றும் பூக்குலையைப் போன்றனவும் தொடி என்னும் கையணி அணிந்தவரும் ஆன மகளிர் நின்று செந்நிறமுடைய முருகப் பெருமானுக்கு வெறியாட்டு ஆடும் மகளிர் பாடும் பாடலுக்குப் பொருத்தமாய்ப் பாடினார்.
“குறுந் தொடை நெடும் படிக்கால்
கொடுந் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி” ( பட்டினப். 142 -144)
இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து அங்காடித் தெருக்கள் எங்கும் நாள்தோறும் திருவிழா ஓயாது நிகழ்ந்து கொண்டிருந்தது.
முடிவுரை
இக்கட்டுரையின் வாயிலாகப் பட்டினப்பாலையில் உள்ள சோழ நாட்டின் சிறப்பு, நகரச் சூழல், உணவுச் சாலைகள், மதம் சார்ந்த கோயில், பள்ளிகள், காவிரியாற்றின் சிறப்பு, சோழநாட்டின் நீர்வளம், சுங்கச் சாவடிகள், பண்டசாலை, அங்காடித் தெரு போன்ற செய்திகளை அறிய முடிகிறது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.