அறிஞர் அண்ணா எனும் ஆளுமை தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த வரம். தனது அறிவுத்திறனாலும், அகன்ற, ஆழ்ந்த வாசிப்பு வன்மையாலும், நுட்பமுடன் ஒளிவீசிய சிந்தனைப் போக்குகளாலும் பல்வகை இலக்கியப் பிரிவுகளிலும் மிகச்சிறந்த படைப்புக்களை உருவாக்க முடிந்தது. இன்றும் அவை வரலாற்றுப் பதிவுகளாகத் தரம் மிக்கதாக விளங்குகின்றன. சமூக உணர்வு, பொறுப்பு இவற்றுடன் சமூக அக்கறையும் கொண்டு தமிழ்மொழி, தமிழன் எனும் ஒருமித்த இலக்கிலேயே தனது படைப்பாட்சியில் சுடரொளி பரப்பிய மாண்பை மறுக்கமுடியாது. அவரது கட்டுரைகளில் காணப்பெறும் சமூகச் சிந்தனைகளை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
அண்ணாவின் கட்டுரைகளில நல்ல இலக்கிய வளம் உண்டு. அரசியல் குறித்த கருத்தாக்கங்கள் உண்டு. அவற்றோடு சமுதாயம் குறித்த சிந்தனைகள் உண்டு. சமுதாய சிந்தனைகளைப் பற்றி மட்டும் நாம் எடுத்துப் பயன் பெறலாம். அண்ணா கட்டுரைகளுக்குப் பெயரிடுவதே புதுமையாகவும் மாறுபட்டதாகவும் படிக்கத் தூண்டுவதாகவும் அமையும். அதில் ஏதோ ஒன்று இருப்பதற்கான அழுத்தமான ஆர்வத்தை ஏற்படுத்தும் தன்மையது.
சில தலைப்புக்களைச் சான்று காட்டலாம்.
* சிலந்தி சிரிக்கிறது
* டாலர் - ரூபிள் சண்டை
* நாலுதலை கட்சி
* கிளிநிறம் பெற்ற கழுகு
* தேவையற்ற திருப்பணி
* சிறந்த நண்பர் சிதைந்த வாழ்வு
உலகில் நிகழ்ந்த பிரச்சினைகளை எல்லாம் எடுத்துப் பேசுகிறார். அப்படிப் பேசினாலும் அவற்றை நம் சமுதாயத்திற்காகக் கொண்டுவந்து தீர்வு குறித்து எண்ணுகிறார். எழுதுகிறார். இவரது கட்டுரைகளில் தேவைக்கேற்பப் பின்வரும் கட்டுரைத் தொகுப்புகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
1. கல்வி
2. தேவையற்ற திருப்பணி
3. கிளிநிறம் பெற்ற கழுகு
இந்நூல்களில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுதியுள்ளார். அவை யாவும், இச்சமுதாயத்தின் மீது அண்ணா கொண்டிருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டுகின்றன. மதம் குறித்த அண்ணாவின் கருத்தைப் பின்வருமாறு காணலாம்.
“ஆண்டவனைப் பாதுகாப்பதற்கு மதம் என்னும் அகழியும் மதத்தைப் பாதுகாப்பதற்குப் புராண இதிகாசங்கள் என்னும் வேலியும் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதையும் மக்கள் அறியவும் அதைப்பற்றி ஆராயவும் தொடங்கினர். எங்களையும் பிற உயிர்களையும் மறைத்துக் காத்து இரட்சிப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கு இத்துணைப் பாதுகாப்புகள் எதற்காக? எங்களைப் படைத்த ஆண்டவனை நாங்களே அறியும்படி செய்யமுடியாத ஆண்டவன் தன்னை அறிவிப்பதற்கு அனைத்தையும் அதனை விளக்குவதற்குப் புராண இதிகாசங்களையும் அவற்றை உண்டாக்குவதற்கு நம் நாட்டிலேயே சிலரையும் ஏற்பாடு செய்திருக்கின்றானே? தன்னைத்தானே பாதுகாப்பதற்காக மதம் புராண இதிகாசங்களையும் உண்டாக்கி வைத்துக் கொண்டிருக்கும், ஒரு ஆண்டவன் எங்களையும் படைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான் என்று செய்யப்படுவதை நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒப்புக்கொள்ள முடியும்? இதை மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்” (மதப்புலவர்களின் மயக்கம் ப.25)
மதத்தின் பெயராலும் ஆண்டவனின் பெயராலும் சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கும் மதத் தலைவர்கள் (மதப் புலவர்கள்) மக்கள் விழிப்படையும்போது குற்றவாளிகளாகத் தந்திரசாலிகளாக மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள். இதற்குப் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனம் வரும்போது வழி பிறக்கும் என்பதை அண்ணா உணர்த்துகிறார்.
மக்களைக் காப்பாற்ற ஆண்டவன் என்பது மக்கள் நம்பிக்கை. அந்த ஆண்டவன் மதத்தையும் அதைக் கட்டிக் காக்கும் புராண இதிகாசங்களையும், அதை எழுதிப் படைத்தவர்களையும் சார்ந்து இருக்கிறான் என்றால் அதன் போலித்தனம் வெட்ட வெளிச்சமாகிறது. இதற்குத்தான் தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை வலியுறுத்துகிறார். அண்ணா இதைத் தெளிவாக உணர்த்துகிறார். இது, தான் பிறந்து வாழும் சமூகத்தினை நேசிக்கும் மனத்தைக் காட்டுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வந்த பிறகுதான் அவர்கள் மக்களை இனி ஏமாற்ற முடியாது என்று மதத்திற்கும் ஆண்டவனுக்கும் மத நூல்களுக்கும் வேறு விளக்கங்கள் சொல்லி பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது என்கிறார்.
எனவே, தெளிவாக அண்ணா இதுகுறித்துத் தன் கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் வைக்கிறார்.
இதற்காக மதப்புலவர்கள் ஆண்டவனையும், மதத்தையும் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகத் தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் கதை எழுதி வைத்து ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்தோடு ஒத்துவராமல் அவர்களுக்குள்ளேயே மயக்கத்தை உண்டு பண்ணுவது மட்டுமின்றி அவற்றைக் கேட்பவர்களுக்கும் மயக்கத்தை உண்டு பண்ணி விடுகின்றது. எனவே இந்த மயக்கம் தீராது; தீர்க்க முடியாதது என்றால் இதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் காலத்தை கற்பனை உலகில் சொல்லவிடாமல் கருத்திற்கும் காலத்திற்கும் ஏற்றமுறையில் மக்கட்குப் பயன்படக்கூடிய காரியத்தைச் செய்யுங்கள் என்று மதப்புலவர்களுக்குப் பகுத்தறிவுடன் கூறுகின்றான். இதில் என்ன தவறு?
இதில் என்ன தவறு எனும்போக்கு தவறு செய்பவர்கள் சொல்வது தவறு என்று கூறுவதில் தவறு இல்லை என்கிறார் அண்ணா. சமூகத்திற்குப் பயன்படக் கூறுவதையே பகுத்தறிவு செய்யும் என்றும் உணர்த்துகிறார்.
“இடந்தேடிகள்” எனும் கட்டுரையில் கட்சி என்பது கொள்கைப் பிறப்போடு மக்களுக்காகப் பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தும்போது குறிப்பிடுகிறார்.
எனவேதான் நாம், கட்சி நோக்குடன் அல்ல, நகர நிர்வாகம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் கூறுகிறோம். இடந்தேடிகளை ஆதரிக்காதீர்கள், அவர்களுக்காகக் கட்சிகளை கொள்கைகளைப் பலியிடாதீர்கள், பொதுவாழ்வை, புதியதோர் சுரண்டல் ஸ்தாபனமாக்காதீர்கள் என்று கூறுகிறோம்.
இவரது கட்டுரைகளில் ஒரு கருத்தைக் குறிப்பிடும் போது ‘பகுத்தறிவாளன் குறிப்பிடுகிறான்’ என்றோ அல்லது ‘நாம்’ கூறுகிறோம் என்று பொதுநிலையில் கூறுவது கவனிக்கத்தக்கது. தன்னை ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகக் கொண்டு நாங்கள் கூறுகிறோம் என்று முன்மொழிகிறார். இது சிறப்பானதாகும்.
‘ஏழையின்விழா’ எனும் கட்டுரை மே தினம் குறித்தது. இதில் ஒரு சமூகம் ஏழையை உருவாக்கும் என்றால் அது அழிந்து போகப் போகிறது. அழிவை நோக்கி நகருகிறது எனும் புதிய நோக்கிலான உண்மையான சிந்தனையை வைத்து எழுதினார்.
“ஏழை, இன்று அழுகிறான். இன்னும் கொஞ்ச நாட்களில் அவன் கண்கள் வறண்டுவிடும். நீர் வராது. ஏழை சிரிக்கப் போகிறான். தன் சகாக்களின் தொகை கண்டு பலரகமான ஏழைகள் இருப்பது கண்டு அந்த ஏழைகளைக் கண்டு சீமான்கள் பயந்து, பதுங்குவதுண்டு… பிரபுவின் அலங்காரத்தை ஏழையின் அலங்கோலம் கேலி செய்யும், பிரபுவின் பன்னீர் வாடையை ஏழ்மையின் துர்நாற்றம் இருக்குமிடம் தெரியாது அழித்துவிடும். ஏழை பெறுகிறான். ஏழ்மை வளருகிறது. இல்லாதார் தொகை ஏறுகிறது. இதன் உண்மையான கருத்து, சமூகம் எனும் மாளிகையின் சுற்றுச்சுவர் சரிகிறது என்பதுதான். பூந்தோட்டத்தை நோக்கிப் புயல் வருகிறது என்று பொருள் என்கிறார். எனவே, திட்டவட்டமாக ஏழையை உருவாக்கும் சமூகம் அழிந்தே போகும் என்கிறார் திட்டவட்டமாக.
“பஞ்சாப் கிளர்ச்சி” பற்றிய கட்டுரையில் தனது கருத்தைத் தெளிவாக முன் வைக்கிறார்.
“... ... ... ஆனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டதும், மேலானதுமான நாட்டு எதிர்காலம் என்று சிறந்த குறிக்கோளைத் துணையாகக் கொண்டு நண்பர்கள் சிந்திக்க வேண்டும். இந்த அளவு ஆற்றலும் அஞ்சா நெஞ்சம் தியாக உணர்ச்சியும் கொண்டுள்ள முஸ்லிம் லீக்கை நாட்டு விடுதலைக்கும் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டாக வேண்டிய புதிய வாழ்வு அமைப்புக்கும் பயன்படுத்தும் விதத்திலே சமரசம் ஏற்படுத்திக் கொண்டால் இந்திய பூபாகத்தின் வளமும் வனப்பும் எத்தனை மடங்கு அதிகரிக்கும்? இந்தக் காரியத்தை மறந்து நீயா? நானா? என்ற போக்கிலே நுழைவதன் மூலம் எவ்வளவு சக்தி விரயமாகக்க வேண்டி நேரிடும் என்பதை யோசிக்க வேண்டுகிறோம்?
மேற்கண்ட வரிகளில் சக்தியை ஆக்கப்பூர்வமாக நாடு பயன் கொள்ளப் பயன்படுத்த வேண்டும். நாடு என்று வரும்போது அங்கு தன்முனைப்புக் கௌரவம் பார்க்கக்கூடாது. நாட்டுக்காக இறங்கி வந்து சமரசம் செய்து கொள்ளலாம். அனுசரித்துப் போகலாம். அங்கே தனிமனிதனை விட கௌரவம் முக்கியம் அல்ல என்று உணர்த்துகிறார். எனவே வார்த்தையில்கூட “யோசிக்க வேண்டுகிறோம்” என்று பயன்படுத்துகிறார். இது அண்ணா சமூகத்தின் மீது கொண்டுள்ள உண்மையான உயர்ந்த பற்றை வெளிப்படுத்துகிறது.
சமூகத்தில் நிகழும் அவலத்திற்கும் நிலைமைக்குமான காரணத்தையும் அதன் தீர்வையும் உண்மையைத் தெளிவாகச் சுட்டி உணர்த்துகிறார்.
“இந்தியாவின் வறுமைக்கு, அரசியல் வரலாற்றிலிருந்தும் மதம் பழக்கவழக்கம் முதலியவற்றிலிருந்தும் காரணம் காட்டுகின்றனர். பல்கிப் பெருகிப் போயிருக்கிற மக்களின் பெருத்த தொழிற்சக்தி முழுவதும் உபயோகப் படுத்தப்படவில்லை. அனேகமாக வீணாக்கப்படுகிறது. இதுவன்றோ முக்கியமான உண்மை என்கிறார்.
தனது வாழ்க்கை முழுக்கத் தமிழ்ச் சமூகம் தழைத்துச் செழித்து முன்னேற பாடுபட்டவர் அண்ணா. அதற்குக் களமாகத் தனது படைப்புலகை அமைத்துக் கொண்டார். இதற்குச் சாட்சியாக அவரது கட்டுரைகள் இதனை உறுதி செய்கின்றன.