தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
37. ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதைகளில் சமூகப் பதிவுகள்
சி. சண்முகவடிவு
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்.
முன்னுரை
சமகால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்யும் ஆவணங்களாக இலக்கியங்கள் அமைகின்றன. காலப்போக்கில் இலக்கியங்களின் வடிவங்கள் மட்டுமல்லாது பொருளிலும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு. இதனூடாகக் கவிதை நோக்குகையில் அதன் வளர்ச்சிப் படிநிலையில் நம் முன் விரியும் தமிழில் நவீனக் கவிதையின் தொடக்கத்தைத் தேடத் தொடங்கினால் பாரதி, வள்ளலார், சித்தர்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, விடுதலைக்கான சிந்தனையை எல்லாத் தளங்களிலிருந்தும் மக்களிடையே கொண்டு வந்து குவித்ததின் வழியாகக் கவிதை பல தளங்களிலும் பயணிக்கக் தொடங்கியது. அந்த வகையில் எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய கவிதைகள் பெண்ணியம், தலித்தியம், ஏகாதிபத்தியம் உலகமயமாக்கல் என விரிந்து பறந்து செழித்தது. படைப்பு என்பது சமூக, சூழலின் தாக்கத்தால் உருவானவையாகும். இருந்த போதிலும், ஆண், பெண் வெளிப்பாடுகள் வேறுபாடுகளைக் கொண்டே அமைகின்றன.
பெண் எப்போதும் பிறரைச் சார்ந்தே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அதற்கு அடிப்படை அவர்களின் பொருளாதாரச் சுய சார்பின்மையே ஆகும். இக்காரணத்தினால் தன் விருப்பம், கனவு, எல்லாவற்றையும் இழக்கிறாள். தன் மீதுசெலுத்தப்படும் ஆதிக்கத்தைப் பெண் வெறுப்புடன் எதிர் கொள்கிறாள். பெண்ணின் இவ்வலிகளை ஒரு பெண்ணால் தான் இயம்ப முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் நவீனப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கவிஞர் மட்டுமன்றி, கட்டுரையாளர், சிறுகதையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்ற பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. இவர் எழுதிய சரஸ்வதியின் ஆயுத எழுத்து என்ற கவிதை தொகுப்பு மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
பெண்ணின் ஊன்றுகோல் கல்வி
‘அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு’ என்ற நிலை மாற்றம் அடைந்தாலும் கூட, முழுமையாக, முழு சுதந்திரத்தோடு பெண்களுக்குக் கல்வி போதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் வெற்றி பெற, வெற்றி பெற்ற பெண்கள் அவர்கள் கற்ற கல்விதான் ‘கை’ கொடுத்தது என்பது அவர்களது வரலாறு பேசுகின்றது. அதனால் பெண்கள் கல்வி பயில்வது அவசியம் என்பதை,
“பெண்ணுக்குக் கதிமோட்சம்
கல்விக்கோள் இல்லை
கல்விக்கோள்
கல்விதான் முதல் கணவன்
கைத்தலம் பற்றுபவன் இரண்டாவதே
புதியமனுதர்மம் எழுதினோம்” (1)
என்றுபெண்ணின் மனஆதங்கத்தை முன் வைக்கின்றார். அதாவது, பெண்களுக்கு வாழ்வில் வெற்றிக்கனியைப் பறிக்கக் கல்வி அவசியம், கல்விதான் கணவன். அப்பொழுதுதான் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் அறிவும் வந்தடையும், பெண்ணினம் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிறப்பு முதல் இறப்பு வரைபெண்ணின் செயல்பாடு தந்தை, சகோதரன், கணவன், மகன் எனஆண்களின் பிடியில் பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து பெண் வெளிவர ஒரே வழி கல்விதான் என்பது தெளிவாகின்றது.
பெண்மை மென்மை
பெண்கள் என்றாலே மென்மை உள்ளம் கொண்டவர்கள். கடுஞ்சொல் பேசாதவர்கள். எதையும் சகித்துக் கொள்ளக் கூடியவர்கள். குடும்பத்தைக் காப்பாற்றும் விளக்கு. ஆணை விட மேலான குணங்களைக் கொண்டவள் என்றெல்லாம் கூறி அடிமையாக்கிச் சுகம் காண்பது ஆண்கள் மனதளவில் பதிந்து விட்டது. பெண்களும் ஆண்களின் மகுடி வார்த்தைக்கு ஆட்பட்டப் பாம்பாக மாறிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி அடிமைப்படுத்தி விடுகின்ற நிலையை,
‘மானும் மலரும்
தேனும் இல்லை
மனுஎனஉரைப்போம்
பொன்னும் பூவும்
புதிரும் இல்லை
தெய்வமும் தாசியும்
வேசியும் இல்லை
பெண்களும் மனிதப் பிறவிகளே
பெண் ஒரு பாதி
ஆண் ஒரு பாதி
விரிப்போம் மனிதர் சிறகுகளே’ (2)
என மான், மலர், கடவுள் என்றெல்லாம் கூறிப் பெண்ணைக் கூண்டுக்கிளியாக மாற்றி இருப்பதைப் பார்க்க முடிகின்றது. அதனால் பெண்கள் விழிப்படைய வேண்டும் என்பதையும், இச்சமுகம் இருபாலருக்கும் உரியது, சமஉரிமை அளிக்க வேண்டும் என்பதையும் சிறைபட்ட கிளியை வெளிவரவும் மனச்சிறகிற்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.
பெண் உணர்வை ஆணுக்கு உணர்த்துவது
பெண்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை துயர வடுக்களே ஆக்கிரமித்துள்ளன. பெண் சிசுவதை, பாலியல் வன்முறை, வரதட்சனைக் கொடுமை, முதிர்கன்னி, ஆணாதிக்கப் போக்கு, இடைவிடாது வேலை வாங்குவது என அனைத்து நிலையிலும் பெண் தண்டிக்கப்படுகின்றாள். இதற்கெல்லாம் ஆணின் அதிகாரம், அவனுக்கென்ற அடிமையாகக் கருதுவதுமாகும். இதை,
‘அடுத்து வரும் ஜென்மத்தில்
ஆணாகப் பிறந்திருந்தால்
பாடாய்ப் படுத்தாமல்
பாவையினைத் துணை சேர்ப்பேன்
அறுவை சிகிச்சையிலே
இப்போதே ஆணானால்
தட்சனையும் ‘லிஸ்ட்’டுமின்றி
பெண்ணை மணந்திருப்பேன்’ (3)
என்ற வரிகள் ஆண்கள் பெண்களின் நிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க வழி காட்டுகின்றார். பெண் வாழும் வாழ்க்கையை ஆண் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் பெண்ணின் துன்பநிலை என்றும், ஆண் பிறவி பெண் எடுத்தால், பெண்களுக்கு நிகழும் வரதட்சனை, பாலியல் போன்ற துன்பங்கள் எல்லாம் நீக்குவர் என்பதை இங்குக் காண முடிகின்றது.
கயிறு தூக்கும் கயிறாகட்டும்
தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயம் வரும் பொழுதும், தனிச் சொத்துரிமை வரும் பொழுதும் இச்சமுகத்தை ஆண் தன்னுடையதாக்கிக் கொண்டான். அதன் நீட்சி புலிப் பல்லை ஆண் அணிந்தவன் பிற சமயத்தவரால் பெண்ணும் தாலி என்ற அடிமைச் சங்கிலியைஅணிய வேண்டியதாகி விட்டது. அதனால் அவளின் கனவுகள் யாவும் தூக்குக்கயிறாக மாற்றம் அடைந்து விட்டது என்பதை ஆசிரியர்,
‘கயிறு
தூக்குக் கயிறாக வேண்டாம்
உயரே
தூக்கும் கயிறாகட்டும்” (4)
என்ற வரிகளினால் பதிவு செய்கின்றார். பெண்ணுக்கு அணிவிக்கப்படும் கயிறானது அவளை வாழ்க்கையில் துன்பங்களில் இருந்து உயர்த்தும் கயிறாக அமைந்தால் பெண்களின் வாழ்க்கை நலமாக அமையும் என்பதைக் கூறுகின்றார்.
முதிர்க்கன்னி
பெண்கள் வேலைக்குச் சென்றே தங்கள் வாழ்வில் பாதிநாட்களைக் கழித்து விடுகின்றனர். சிலர் தன் தந்தையின் துன்பத்தைப் போக்கக் காலம் கடத்துகின்றனர். சகோதர சகோதரிகளுக்காகச் சிலர் காலம் கடந்து திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆடவன் வருவான் கரம் பற்றுவான் என்று நினைத்த நிலை முற்றிலும் ஏமாற்றமே. இந்த நிலைக்கு ஆறுதலாக அமையும் ஆசிரியரின் வரிகள்,
“வனவாசம் தாண்டியும்
வந்துசேராதராமனைத் தவிர்த்துக்
கிளம்புகிறாள் சரஸ்வதி
தானேவில்லேந்தி” (5)
என்று பெண்கள் இனியாவது உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடு என்பதை வழிபடுத்துகின்றார்.
பெண்ணுடல் புண்ணுடலா?
பெண்ணைக் காமப் பொருளாகப் பார்க்கக் கூடிய மரபு இன்றும் உள்ளது. பெண்கள் என்றால் ஆணின் சுகத்துக்காகவும், அவனுக்குப் பணியாற்றவும் தான் கடவுள் படைத்தான் என்ற நிலை காண முடிகின்றது. அதனால் தான் இன்று பாலியல் வன் கொடுமை. இது சிறுமியர்களையும் விட்டு வைக்காமல் பெண்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அவலம் யாவரும் அறிந்ததுதான். இதை,
“கழுத்துக்குக் கீழ்த்தான்
பெண்ணின் பயன்பாடா?
ஆம் எனில்
மயக்கத்துக்கு
முண்டங்கள் போதுமோ…?” (6)
என இழிவுப் பண்பு கொண்ட ஆணைப் பார்த்துப் பெண் கேட்பதாக அமைத்துள்ளார். அதாவது, உன்னுடைய ஆசைக்கு என்றால் பிணம் போதாதா என்கின்றார். இன்று பிணத்தையும் விட்டு வைக்காத காமுகர்களைச் சாடியுள்ளார். இதை எதிர்த்துப் போராடும் எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வரவேண்டும் என்பதையே ஆற்றுப்படுத்துகின்றார்.
முடிவுரை
பெண்களை முன்னேற்றுவது கல்வி. அக்கல்வியை ஒவ்வொரு பெண்ணும் கற்றால் தான் வாழ்வில் தன் காலில் நிற்கமுடியும் என்பதைக் காட்டுகின்றது. சமுகம் பெண்ணை அடிமைப்படுத்த முயல்வதை விடக் கரம்பிடித்த ‘கை’ வாழ்வில் உயரத் தூக்குவதாக அமைந்தால் சிறப்பாக அமையும் என்பதை அறிய முடிகின்றது. பெண் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வது ஆணினத்திற்காக. ஆனால், அவ்வினம் இவளை ஒரு எலும்பு தோல் போர்த்திய உடம்பாகப் பார்ப்பது அவமானத்திற்கு உரியது என்பதைச் சமுதாயத்திற்கு ஆசிரியர் உணர்த்தியிருப்பது புலனாகின்றது.
குறிப்புகள்
1. ஆண்டாள் பிரியதர்ஷினி, சரஸ்வதியின் ஆயுத எழுத்து, குமரன் பதிப்பகம், ப.20
2. மேலது ப.12
3. மேலது ப.25
4. மேலது ப.39
5. மேலது ப.89
6. மேலது ப.53
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.