தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
39. புனிதவதியின் இறைச் சிந்தனை
ப. சரண்யா
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
பக்தி இலக்கியங்கள் பல்கிப் பெருகிய காலம் பல்லவர்கள் காலம். இக்காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி சைவ, வைணவத் தொண்டின் மூலம் பைந்தமிழை வளர்த்தனர். இவர்களுள் புனிதவதியான காரைக்காலம்மையாரின் இறைச்சிந்தனையும், புதுமைக் கருத்துக்களையும் ‘அற்புதத் திருவந்தாதி” வழி ஆராய்வோம்.
அம்மையின் வாழ்வும் அருள் பாடல்களும்
காரைக்காலில் தனதத்தனின் மகளாய்ப் பிறந்தவர். இளமை முதல் ஈசனின் பெருமையினை எண்ணியே வாழ்ந்தவர். பரமதத்தனின் மனைவியாய்ப் பாங்குடன் பரமனின் அடியவர்கட்குத் தொண்டு செய்து வாழ்ந்து, மாங்கனியால் கணவன் பிரிய பேயுருவைப் பெற்றவர் காரைக்காலம்மையார்.
1. அற்புதத் திருவந்தாதி
2. மூத்த திருப்பதிகம்
3. இரட்டை மணிமாலை
போன்ற நூல்களில் வழி சிவபெருமானைத் துதித்தவர். பண்ணோடு மகேசனைப் பாடி அருளிய நாயன்மார்களுள் குறிப்படத்தக்கவர். காலத்தால் முற்பட்டவர். சுடலை வருணனை அரவம் குறித்த அச்சத்தினை மிகுதியும் வெளிப்படுத்தியுள்ளார்.
இறைவடிவம்
இறைவனின் உருவச் சிறப்பினை கற்பனை நயத்தோடு
“காலையே போன்றிலங்கு மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு-மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்க
வீங்கிருளே போலு மிடறு”
என்று புகழ்ந்தவர் பிரிந்தோரிடத்தில் உன் உருவம் எது? என்று வினவுகிறார். இறைவா? உன் வடிவத்திற்கு நிகர் இல்லை என்றார். மேலும்;
“நீ எந்தெந்த வடிவத்தில் இறைவனைக் காண
விளைகின்றாயோ அந்தந்த வடிவத்தில் நானே
காட்சி தருவேன்”
என்ற கீதையின் கருத்தினையே
“எக்கோலத் தெவ்வுருவா யெத்தவஎகள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்”
என்று குறித்துள்ளார்.
“காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் காண்பார்க்கும்
சோதியாய்ச் சிந்தனையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரண்”
என்று இறைவனின் எளிமையினை எடுத்தியம்பியுள்ளார். நாயன்மார்களுள் ஒருவரான இவரும் திருமாலும், நான்முகனும் காணாத தன்மையினை உடையவர் ஈசன் என்றாலும் அடியவர்கட்கு அருட்காட்சி நல்குபவர் என்று குறித்துள்ளார்.
தனித்துவம் மிக்க கருத்துக்கள்
பேயுரு பெறல்
நாயன்மார்களுள் பேயுருவினை வேண்டிப் பெற்றவர்.
“… … … பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமன்தாள் பரவிநின்றார்” என்று சேக்கிழார்.
அற்புதத் திருவந்தாதியில் எம்மானார் எலும்பு மாலையணிந்து பேயும் தானுமாய்ச் சுடுகாட்டில் ஆடுபவர் என்கிறார். மேலும் இறைவனை உணராதவரே,
“பூக்கோல மேனிப் பொடிபூசி யென்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்”
என்கிறார்.
மற்றொரு பாடலில் பேய்களுடன் பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் கழலாட தாண்டவம் ஆடும் இடத்திற்கு உமையம்மையோடு செல்ல வேண்டாம் என்கிறார். பேராசிரியர் மது. ச. விமலானந்தம். இலக்கிய வரலாற்றில் காரைக்காலம்மையாரின் பாடல்களில் சுடலை வருணனை மிகுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் இளமை நீங்கி முதுமையை விநாயகரிடம் வேண்டிப் பெற்றதாக செவிவழிச் செய்தி நிலவுகிறது. மனித உடலை விடுத்துப் பேயுருவினைப் பெற்றதோடு இறைவனின் பேய்க்கோலத்தினையும் பாடியுள்ளார்.
வெறுப்பின்மை
கணவனுக்காக வாழ்ந்து பிரிந்த பின்பு பக்தியில் திளைத்தவர் என்றாலும், மற்ற நாயன்மார்களைப் போல் ‘வெறுத்தேன் மனை வாழ்க்கை’ என்றோ எம்பெருமானாகிய சிவனை வழிபடாது வாழ்நாளை வீண்நாளாகக் கழித்துவிட்டேன் என்றோ பாடவில்லை. பிறசமயத்தைச் சார்ந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர்கள் கடந்த கால வாழ்வை வீணாகக் கழித்ததற்காகக் கழிவிரக்கம் கொள்வதைப் போல் பாடவில்லை, “இறைவனைக் கண்டால் கண்குளிரக் கண்டும், கையாரத் தொழுதும், எண்ணார எண்ணத்தால் எண்ணியும், வானவனே! தீயில் ஆடுபவனே” என்று கூறி மகிழ்வேன் என்கிறார். ஈசனின் பெருமையினைப் பாடுவதே பெருமை என்கிறார்.
வீடுபேறு
சிவனை வணங்கினால் வினைப்பயன் தொடராது பிறவியாகிய கடலைக் கடக்கலாம், காலனை வெல்லலாம், கடுநரகத்தை கைவிட்டு விலகலாம், சிவனை அன்றி வேறு எவரையும் வணங்கமாட்டேன் என்றும்
“அண்டம் பெறினும் அதுவேண்டேன்”
என்றும் குறித்துள்ளார். இறைவனுக்கு தொண்டு செய்வதே பெறும்பேறு என்கிறார். இக்கருத்தினையே சேக்கிழார்
“கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டா விறலினர்”
என்றார். ஆழ்வாரோ,
“இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே”
என்றார்.
அரவு - அச்சம்
ஈசனின் தோற்றச் சிறப்பினைப் புகழும் அதே வேளையில் அரவினை அணிய வேண்டாம் என்கிறார்.
“அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் தீய அறவொழியச் சொல்”
என்றும் பரிவோடு வேண்டுகிறார்.
மதயானையின் தோலைப் போர்த்தியிருப்பதையோ, எலும்பு மாலை அணிந்திருப்பதையோ கண்டு அஞ்சவில்லை. அரவத்தைக் கண்டு அஞ்சியதோடு அரவம் மலைமகளிடம் சினம் கொண்டால் என் செய்வீர். பிறைசூடிய பெம்மானே பிறை வளராதிருப்பதற்குப் பாம்பே காரணம். ஆரவினை ஆபரணமாக அணிந்து சென்றால் பிச்சையிட மக்கள் அஞ்சுவர் என்கிறார். இறைவனின் வாகனம், கொடி உள்ளிட்ட அனைத்தும் ஆணவத்தை அடக்கியும், அன்பின் மிகுதியால் ஏற்கப்பட்டதும் ஆகும். காரைக்காலம்மையோ அரவின் அச்சத்தினை பல விதங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
வரலாற்றுப் புதுமை
பிறந்து மொழி பயிலத் தொடங்கிய நாள் முதல் விரிசடையோன் புகழ் பாடியவர் கணவனால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர்.
“மானிளம் பிணைபோல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம் தருளால் வாழ்வேன் இவ்விளங் குழவிதானும்
பான்மையால் உமது நாமம் என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்”
என்று பாடியுள்ளார் சேக்கிழார்.
மேலும் இறைவனாலே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். திருக்கயிலையைக் கைகளால் கடந்து சென்றவர். அந்தம் முதலாகத் தொடுக்கின்ற அந்தாதியில் இறைவனைப் பாடி மகிழ்ந்தவர். அறுபத்து மூவரில் ஏனையோர் சிவ ஆலயங்களில் நின்ற கோலத்தில் இருக்க, இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் காணப்படுவது இவரது தனித்துவங்களில் தலையாயதாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.