தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
49. ஆண்டாளின் பாவை நோன்பும் தைநீராடலும்
கி. சுகன்யா
ஆய்வியல் நிறைஞர் மாணவி,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி, திருச்சி.
முன்னுரை
பெண்களால் நோற்கப்படும் நோன்புகளுள் பாவை நோன்பும் ஒன்று. சங்ககாலம் தொடங்கி இன்று வரை பல பெயர்களுடன் நோன்பாகவும், விளையாட்டாகவும் கொண்டாடப்படுகிறது. நீராடலில் ஆரம்பித்த பாவை விளையாட்டு சமயரீதியான நோன்பாக மாறியுள்ளது.
பாவை விளக்கம்
‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்று பொருள். ‘பாவை’ என்றால் பெண் என்று பொருள். வணக்கத்துக்குரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை என்னும் பெயர் பெற்றது. ’பாவை’ என்ற சொல்லுக்கு ‘நோன்பு’ என்றும் பொருள். மேன்மையான நோன்பினை பற்றிக் கூறுவதால் ‘திருப்பாவை’ என்று அழைக்கப்பட்டது என்றும் சொல்வதுண்டு.
பாவை நோன்பு
பாவை நோன்பு என்ற கன்னியஎ விரதம் தமிழகத்தின் பழமையான விரதங்களில் ஒன்றாகும். நாடு செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும், பெண்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் கடைப்பிடிக்கும் விரதமாகும். இந்த விரதம் தைநீராடல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்கழி மாதத்தில் நடைபெற்ற இந்த விரதமானது தற்போது தனுர் மாத விரதம் என்று மாறிவிட்டது. பாவை நோன்பானது அதிகாலையில் கன்னிப்பெண்கள் ஒருவரையொருவர் எழுப்பிக் கொண்டு யமுனையில் நீராடி ஈரமண்ணால் தேவியைப் போல் உருவம் அமைத்து, அதைக்கொண்டு காத்யாயினி தேவியை வழிபட்டு இந்த விரதத்தை நடத்தி வந்தனர்.
பெயர் மாற்றம் ஏற்படக் காரணம்
பாகவத புராணத்தில் நோன்பு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சங்க காலத்தில் தைநீராடல் என்று அழைக்கப்பட்ட பாவை நோன்பு பிற்காலத்தில் மார்கழி நீராடலாக மாறியதற்குக் காரணம், ‘திங்கள்’ என்னும் சொல்லே மாதத்தினைக் குறிக்கும். நிலவின் வளர்ச்சி தேய்வு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இருவகை காலக்கணிப்பு முறைகள் ஏற்பட்டன.
தமிழ் மாதக்கணக்கு சூரியனை மையமாக வைத்துக் கணக்கிடாமல் சந்திரனை மையமாக வைத்து கணக்கிடப்பட்டது. அந்நாளில் மார்கழி மாதம் பௌர்ணமியில் தொடங்கி அமாவாசையில் முடிவடையும். மாதமுறைக்கு ‘அமாந்தம்’ என்று பெயர். இதற்கு நேர்மாறாக அமாவாசையில் தொடங்கி பௌர்ணமியில் முடியும் முறைக்கு ‘பூர்ணிமாந்தம்’ என்று வழங்கப்பட்டது.
நோன்பின் சிறப்பு
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர் வழிபாடெல்லாம் தனியொருவர் வழிபாடாக இல்லாமல் சமுதாயத்தின் நலம் கருதிய வழிபாடாக இருந்தது. சிலம்பில் வரும் வரிப்பாடல்கள் கன்னிப்பெண்கள் நோன்பெல்லாம் நாடு செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டும் எனும் பாவை பாட்டாகவே முடிவடையும்.
நோன்பு விதி
‘மேலையார் செய்வனகள்’ என்று ஆண்டாள் அருளிச் செய்தமையால் மார்கழி நோன்புக்கு வேத விதியில்லை என்றும் ஆன்றோர் கடைபிடித்ததே மூலம் என்பதும் பண்டையோரின் கொள்கையாகும். இந்த விரதத்தை மேற்கொண்டால் சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும். திருமணமான பெண்கள் மேற்கொண்டால் மாங்ல்ய பலம் கூடும் என்று நம்புகின்றனர்.
மார்கழி மாதச் சிறப்பு
மார்கழியை வடமொழியில் ‘மார்க்சீரிசம்’ என்பட். ’மர்கம்’ என்பது ‘வழி’ என்றும் ‘சீர்சம்’ என்பது தலைசிறந்தது, உயர்ந்தது என்றும் கூறுவர். எனவே தான் ஆண்டாள் திருப்பாவையில்
‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’
என்று பாடினார்.
மனிதர்களாகிய நமக்கு பன்னிரு மாதங்களும் தேவர்களுக்கு ஒரு நாளைக்கு சமம். பன்னிரு மாதங்களை தட்சிணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை), உத்தராயணம்(தை முதல் ஆனி வரை) என்றும் குறிப்பிடுகின்றனர்.
உத்தராயணம் தேவர்களுக்கு ஒரு இரவாகவும், தட்சிணாயனம் ஒரு பகலாகவும் அமையும். உத்தராயணம் தொடங்குவதற்கு முந்தைய மாதமான மார்கழி தேவர்களுக்கு அதிகாலைக்கு ஒப்பாகும். அதிகாலையான பிரம்மமுகூர்த்தம் 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரமாகும். இந்த நேரம் இறை வழிபாட்டுக்கு உரியதாகும். எனவேதான் ஆண்டாளும் அதிகாலைப் பொழுதைக் கொண்டே நோன்பினை நோற்றாள். மார்கழி மாதச்சிறப்பு புராண இதிகாசங்களில் காணப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் கூறுகிறான்.
நோன்பு வழக்கில் உள்ள இடங்கள்
கேரளாவில் திருவாதிரை நாளின் இறுதியில் கேரள மக்கள் ஆடை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு பாயசத்துடன் விருந்து உண்டு மகிழ்வர். ஆதலால் மார்கழி தைநீராட்டம் என்று வழங்கி வந்து பின் சமய நோன்பாக மாறியுள்ளது. மார்கழியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. சிலர் பீடை மாதம் என்பர். பீடை மாதமாக இருந்தால் அர்ச்சுணனக்கு இம்மாதத்தில் கீதையை உபதேசித்து இருப்பாரா கண்ணன்? எனவே தான் திறக்காத கோவில்களும் திறக்கும் மதாம் என்பர்.
பாவை பாட்டு வகைகள்
திருப்பாவை பாடல்களில் இறுதி அடியில் ‘ஏலோர் எம்பாவாய்’ என்ற சொல் வந்துள்ளது. ‘ஏல்’ என்பதற்கு ஏற்றுக்கொள்’ என்றும் ‘ஓர்’ என்பதற்கு ஆராய்ந்து பார் என்றும் பொருள். பாவை நோன்பை காமம் சாலா வயதையுடைய (5-9) பெண்களும் நோன்பினை நோற்றதாகத் திருப்பாவை பாடல்கள் குறிப்பிடுகின்றன.
மார்கழி நோன்பு தமிழகம் மட்டுமின்றி, கேரளம், தாய்லாந்து போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து நாட்டு அந்தணர் கடைத்திறப்பு மந்திரம் ஒன்றினைப் பாடுகின்றனர். இப்பாடல் ‘சிவாலயத் திறப்பு’ என்றும் ‘கயிலைத்திறப்பு’ என்றும் கூறுவர்.
தாய்லாந்து நாட்டில் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை திரிபவா, திரியம்பவா என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பாவை முத்தாய் 30 பாசுரங்களை உடையது. மார்கழி எனும் காலமும் அதில் உள்ள நோன்பும் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இந்நோன்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.