தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
80.ஐங்குநூற்றில் இடம் பெறும் கொன்றை மலரும் அதன் மருத்துவக் குணங்களும்
முனைவர் வி. மல்லிகா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
முன்னுரை
தமிழ் இலக்கியப் பரப்பு பரந்து விரிந்துள்ளன. சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் காலப்பழமை வாய்ந்தவை. தமிழர்களின் அறிவு, வினைத்திறம் வாழ்வியல் மருத்துவம் ஆகியவற்றை அறியச் சங்க இலக்கியங்கள் மாபெரும் துணைபுரிகின்றன. இன்றைய விஞ்ஞான உலகில் மருத்துவம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருப்பினும், அவை அறிவுறுத்தும் மருந்துகள் தற்சமயம் நோயிலிருந்து விடுபட்டாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இயற்கை நமக்கு அளித்த மலர்கள், பழங்கள், மரங்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணத்தைக் கொண்டு விளங்குகின்றன. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில் இடம் பெறும் மலர்களும் அவற்றின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பூக்களின் வகைகள்
1. நீர்ப்பூ
2. நிலப்பூ
3. மரப்பூ
4. செடிப்பூ
5. கொடிப்பூ
என ஐந்து வகைப்படும்.
சங்க இலக்கியத்தில் நீராடல் மலர் கொய்தல் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன. இவையேப் பிற்காலத்தில் பூவல்லி என்றழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒரே நிலத்திற்குரியதன்று. பல்வேறு நிலத்திற்குரியனவாகும். வேங்கை, கொன்றை, மௌவல், தாமரை, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டம், செங்காந்தள், ஆம்பல், குவளை, குறிஞ்சி, அனிச்சம், அதிரல் போன்ற பல மலர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் ஐங்குறுநூற்றில் பல்வேறு மலர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஆய்வுச் சுருக்கம் கருதி, கொன்றை மலரின் சிறப்பும் அதன் மருத்துவக் குணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மலர்கள்
ஐங்குறுநூறு இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையாவார். ஐங்குறுநூற்றில் கீழ்க்காணும் மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எண் |
மலர்கள் |
பாடல் வரிகள் |
பாடல் எண் |
1 |
முண்டகம் |
முண்டகம் மலரும் தண் கடற் சேர்ப்பன் |
108 |
2 |
தும்பை |
தும்பை மாலை |
127 |
3 |
ஞாழல் |
எக்கர்ஞாழல் மலர் இல் மகளிர் |
147 |
4 |
நெய்தல் |
வைகறை மலரும் நெய்தல் போல |
188 |
5 |
குவளை |
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை |
225 |
6 |
காந்தள் |
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் |
226 |
7 |
வேங்கை |
கல்முகை வேங்கை மலரும் |
276 |
8 |
செருந்தி |
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇ |
182 |
9 |
பகன்றை |
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டை |
97 |
10 |
ஆம்பல் |
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் |
96 |
11 |
வேழம் |
அடைகரை வேழம் வெண்பூ பகரும் |
13 |
12 |
தாமரை |
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை |
6 |
13 |
கொன்றை |
காயா கொன்றை நெய்தல் முல்லை |
411 |
முதலாகப் பல்வேறு மலர்கள் இடம் பெறினும் சிறப்பாகக் கொன்றை மலரைப் பற்றிய குறிப்புகளை அதிகமாகக் காணலாம். அவற்றின் மருத்துவப் பயன்பாடும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.
கொன்றை மலர்
கேசியா ஃபிஸ்டுலா (Cassia fistula) என்பது கொன்றையின் தாவரவியல் பெயராகும். சிசால்பினிசியே என்னும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும். பிப்ரவரியில் இலை உதிர்ந்து ஏப்ரலில் பூக்கும். கூம்பு வடிவத்தில் தலைகீழாகத் தொங்கும் பூங்கொத்துக்களை உடையவை. துடிப்பான மஞ்சள் நிறம் கொண்டவை. முதிரும் போது மத்தளக் குச்சி போல கருமை நிறம் கொள்ளும். (நோய் தீர்க்கும் மூலிகைகள் ப.14)
கொன்றை வகைகள்
கொன்றை மலரில்
1. சரக்கொன்றை
2. செங்கொன்றை
3. கருங்கொன்றை
4. நரிக்கொன்றை
5. மயில்கொன்றை
6. மந்தாரக் கொன்றை
எனப் பல பிரிவுகள் உண்டு.
சரக்கொன்றை கிருமி, சூலை, வாதம், கபம், சுவையின்மையைப் போக்கும்.
“குட்டம் கிருமி கொடுஞ்சூலை வாதம் கபம்
துட்டமலம் அருசி தூரப்போம் - தட்டிச்
சுரக்கின்ற பேதி உண்டாம் துய்க்க துவர்க்குச்
சுரக்கொன்றைக்கு ஆரணங்கே சாற்று”
என்ற அகத்தியர் பாடல் உணர்த்தும்.
ஐங்குறுநூற்றில் கொன்றை மலர்
தமிழ் மருத்துவ உலகிலும் சரி தமிழ் இலக்கிய உலகிலும் சரி கொன்றை மலருக்கென்று தனியிடம் உன்டு. உயிர்களுக்கெல்லாம் தலைவனான இறைவனைத் தேன் சிந்தும் கொன்றை மலர் அணிந்த சேவகனான ஒளி பொருந்திய அவன் திருவடிகளைப் போற்றும் மாணிக்கவாசகர் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து தன்நாமம் கெட்டுப் பக்தி எனும் பித்தேறி பரவச நிலையில் மூழ்கிப் பாடுகிறார். அப்போது சிவனுக்கு சூட வேண்டிய கொன்றை மலரைத் தானே சூடிக்கொள்கிறார். இதை அவரது
“சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்உருகித்
தேடுவேன் தேடிச்சிவன் கழலே சிந்திப்பேன்” (திருவாசகம் - திருவம்மானை ப-289)
என்ற வரிகள் உணர்த்தும. அத்தகைய கொன்றை மலரை ஐங்குறுநூற்றில் பல்வேறு இடங்களில் காணலாம்.
“காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் களவொடு பிடவம்” (ஐங்குநுறூறு - 411)
மலர்ந்திருந்ததாக இரண்டு வரிகளில் ஆறு பூக்களைக் குறிப்பிடுகின்றது.
பொன்னை உருக்கியது போல் கொன்றை என்ற கருத்தை
“சூடு பொன் அன்ன கொன்றை” (ஐங்குறுநூறு - 413)
“நன் பொன் அன்ன சுடர் இணர்க் கொன்றை” (ஐங்குறுநூறு - 436)
என்ற ஐங்குறுநூற்றில் இடம் பெறும் வரிகள் உணர்த்தும்
முதுவேனில் காலத்தில் எதிர்பாராமல் மழை பெய்துவிட்டது. கொன்றையோ இது கார்காலம் என மயங்கிப் பூத்துவிட்டது. என்னைப் போன்ற பேதை இந்தக் கொன்றை மலர் என்கிறாள் தலைவி.
“ஏதில் பேய் மழை காரென மயங்கிய
பேதையாம் கொன்றை” (ஐங்குறுநூறு- 462)
தலைவன் வந்துவிட்டான் தலைவனை எதிர்நோக்கிக் காத்திருந்த கொன்றைப்பூப் போல் பசலை படர்ந்த கண்கள் இன்று குவளை மலர் போல மாறிவிட்டன. என்பதை,
“கொன்றைப் பூவின் பகந்த உண்கண்
குன்றக நெடுஞ்சுனைக் குவளைப்போலக்
தொல்கவின் பெற்றன” (ஐங்குறுநூறு - 500)
மருத்துவப் பயன்கள்
* வேர்பட்டையைக் குடிநீர் செய்து திரிகடுகுச் சூரணம் சேர்த்துத் தரச் சுரம் தீரும்.
* இதய சம்பந்தமான நோய் குணமாகும்.
* சரக்கொன்றைப் பூவால் வயிற்றிலுள்ள பூச்சிகள் குடலைப் பற்றிய நோய்கள் நீங்கும்.
* நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
* கொத்தமல்லி இலையுடன் சரக்கொன்றைப் புளி சேர்த்து வேக வைத்து வாய் கொப்பளிக்கத் தொண்டை வீக்கங்கள் நீங்கும். இலையைப் படர் தாமரைக்குப் பூசக் குணமாகும்.
* பூவைப் பாலில் போட்டு காய்ச்சித் தர உடலைத் தேற்றும்.
* கொன்றைப்பூ உள் உறுப்புக்களை வன்மைப்படுத்தும்.
* சிறுகொன்றை வேர் அரைத்துப் பாலில் தர மூலம் நீங்கும்.
* பூவைப் புண்ணில் பூசி வரத் தொழுநோய் குணமாகும்.
* சரக்கொன்றை புளியைத் திராட்சைச் சாறுடன் கலந்து தரச் சுரம் தணியும்.
* சரக்கொன்றை புளியைக் கரும்புச் சாறுடன் கலந்து தரக் காமாலை குணமாகும்.
* வாயுவைப் போக்கும். பூவை அரைத்து பூசக் குழந்தைகளுக்கான அக்கி நோயை குணப்படுத்தும்.
* கொன்றைப் பட்டையையும் தூதுவளை உலர்த்திச் சூரணம் செய்து தர இருமல் நீங்கும்.
* மோரில் கலந்து குடித்தால் நீரழிவு நோய் தீரும்.
முடிவுரை
இன்றைய விஞ்ஞான உலகம் மருத்துவ துறையில் பல சாதனைகள் புரிந்தாலும். நம் முன்னோர்கள் இயற்கையோடியைந்த வாழ்க்கை வாழ்ந்தனர். உணவையே மருந்தாய்க் கொண்டனர். மலர்கள் அழகியலோடு இணைந்த மருத்துவக் குணங்களையும் கொண்டு விளங்குவதே இக்கட்டுரை வாயிலாக அறியலாம். இயற்கை கொடையினைப் பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.
பார்வை நூல்கள்
1. ஐங்குறுநூறு, முனைவர் அ. தட்சிணாமூர்த்தி, 2004
2. நோய் தீர்க்கும் வழிபாட்டு மூலிகைகள், பொ. இராமசாமி, 2001
3. மூலிகை பேசுகிறது, குன்றத்தூர் இராமமூர்த்தி, 2001
4. திருவாசகம் - விரிவுரை, ஜி. வரதராஜன், 1995.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.