பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
27. கெடு மற்றும் கேடு
கேடு என்பதற்குத் துன்பம், துயரம் என்ற பல்வேறு பொருள்கள் உண்டு. கெடு – என்பதே கேடு என்று நீண்டு துன்பம் (முதல் எழுத்து நீண்டு) எனும் பொருளில் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. கெடு – என்பது பிறரைக் கெடு – அழி என்ற பொருளில் ஆளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, ‘‘டேய் தம்பி. அவன் நல்லவன். அவனோட சேர்ந்து அவனையும் நீ கெடுத்து விடாதே’’ என்று கூறுவது நடைமுறையில் உள்ளது. தீயது தீயதுடன் சேரும் போது ஒன்றும் ஏற்படாது. ஆனால் தீயது நல்லவற்றுடன் சேரும் போது தீயது வலிமையுடையதாக இருப்பின் நல்லதும் கெட்டுவிடும். ஒரு குடத்தில் பால் இருக்கிறது. அதில் நாகப்பாம்பின் விஷத்தை ஓரிரு துளிகள் கலந்து விட்டால் குடத்தில் உள்ள முழுமையான பாலும் கெட்டுவிடும். அவ்வாறு கெடுவதால் கேடுவரும். நல்லவன் தீயவனாகிக் கெடுகின்ற போது அவனுக்குத் துன்பம் நேரும். கெடுதல் நினைத்தால் அதனால் வரும் கேடு பிறருக்கு மட்டுமல்லாது அவனையே வந்து சாரும். கெடுவதும் கேடும் அவரவர் செயல்களிலேயே உள்ளது.
இத்தகைய தீமை பயக்கும் கெடுதல் கேடு ஆகியவை பற்றிய கருத்துக்களை பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பண்பாட்டு நெறிகளை விளக்கியுள்ளனர்.
கேடுநினைப்பவன் கெடுதல்
எந்தச் சூழலிலும் பிறரைக் கெடுக்கக் கூடிய செயல்களில் ஒருவர் ஈடுபடக் கூடாது. அதோடு மட்டுமன்றி பிறருக்குக் கெடுதல் செய்யுமாறு மற்றவரைத் தூண்டுவதும் தவறான செயலாகும். பிறருக்குக்கேடு மனத்தாலும் நினைக்கக் கூடாது. அது தனக்குக் கெடுதலை வரவழைக்கும் செயலாகும்.
சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்குவதற்காகக் கெடுதல் செய்வர். தங்களால் அவர்களுக்குக் கேடு செய்ய முடியாவிட்டாலும், பிறரின் மூலமாகவும் செய்வர். பிறரைத் தூண்டிவிட்டுக் கேடு செய்பவர் கீழான நிலையை அடைவர். அங்ஙனம் கெடுதல் நினைப்பவர் கேடடைவர். அதனால் பிறருக்குக் கேடோ கெடுதலோ செய்யவும் செய்விக்கவும் நினைக்கக் கூடாது என்பதை,
‘‘கெடுவான் கேடுநினைப்பான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
தான் கெடவேண்டும் என்று நினைப்பவனே பிறருக்குக் கேடு நினைப்பான். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கெடுதலை நினைக்கக் கூடாது என்று இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
நினைக்கும் கேடு தூக்கும் கல்
நாம் நலமாக எந்தவிதக் கேடும் இன்றி வாழ வேண்டுமென்றால் பிறருக்குக் கெடுதல் நினைத்தல் கூடாது. மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பல கேடுகளைப் பாண்டவர்களுக்குச் செய்தான். முடிவில் யாராலும் நினைத்துப் பார்க்க இயலாத கேட்டை அடைந்தான். அவன் மட்டுமன்றி அவனுடன் இருந்த, சேர்ந்த உற்றார், உறவினர் ஆகிய அனைவரும் ஒருங்குடன் அழிந்தனர்.
பாண்டவர்கள் துரியோதனனிடம் நல்லவிதமாக நடந்து கொண்டாலும் அவன் பாண்டவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை. கெடுதலே அவர்களுக்கு நினைத்துச் செய்து வந்தான். அதனால்தான் அவன் பல துன்பங்களை அடைந்தான்.
நீவிர் செய்யும் கேடுகளைப் பொறுத்துக் கொள்வதால் அக்கேடு செய்தவரையே சென்றடையும். அதனால் எந்தக் காரணங்கொண்டும் பிறருக்குக் கேடு செய்தலோ செய்யத் தூண்டுதலோ கூடாது. கேடு நினைப்பவர் கேடடைவைர். இதனை,
‘‘மறந்தும் பிறன்கேடு சூழற்க. சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு’’
என்று வள்ளுவப் பெருந்தகை அறிவுறுத்துகிறார். வள்ளுவரின் இத்தகைய கருத்தினை,
‘‘நினைக்கிற கேடு தனக்குத்
தூக்குற கல்லு தலைக்கு’’
என்ற பழமொழி வலியுறுத்துவதாக அமைகிறது.
ஒருவன் பிறரைக் கெடுப்பதற்காகக் கேடு நினைத்தால் அக்கேடு அவன் தலையிலேயே வந்து முடியும். இரண்டு கைகளாலும் கல்லைத் தூக்குபவன் தலைக்கு மேல் தூக்கி கைநழுவ விட்டுவிட்டால் அக்கல் அவன் தலையிலேயே விழுந்து அவனைத் தாக்கி அழிக்கும். அது போன்றே கேடும் ஆகும். அதனால் பிறருக்குக் கேடு நினைத்தல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
தன்வினையும் – ஓட்டைப் பானையும்
பிறருக்கு எந்தவிதமான கெடுதலைச் செய்கின்றோமோ அதுவே நமக்கும் கிடைக்கும் ஒருவன் செய்த கெடுதல் அவனையே வந்துதாக்கும். இதை உணர்ந்து மனிதர்கள் வாழ்ந்தால் உலகில் அமைதியும் இன்பமும் நிலைத்திருக்கும். இதனை,
‘‘தன்வினைத் தன்னைச் சுடும்
ஓட்டைப் பானை வீட்டைக் கெடுக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
பிறருக்கு ஒருவன் செய்த கெடுதல் (தன்வினை) அவனையே திரும்ப வந்து சேரும். உடைந்து போன ஓட்டைப் பானை வீட்டின் அழகைக் கெடுக்கும் அது மட்டுமல்லாது அதில் நீர் ஊற்றினால் ஒழுகி வீட்டைக் கெடுக்கும். அதனால் அந்த உடைந்த பானையை வீட்டில் வைக்காது அதனைத் தூர எறிந்துவிடுவர். உடைந்து போன பானை போன்றதே கேடும். உடைந்துபோன பானை எங்ஙனம் எதற்கும் உதவாதோ அதுபோன்றே கேடும் உதவாது. இதனை உணர்ந்து அனைவரும் கேட்டினையும் கெடுதலையும் நினைக்காது வாழ்தல் வேண்டம் என்ற நல்ல வாழ்க்கைக் கருத்தினை இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.
கெடுதலையும், கேட்டையும் மனதால் நினைத்தல் கூடாது. செய்தலும் கூடாது. நாம் மகிழ்வாக வாழ வேண்டுமெனில் இத்தகைய தீய பழக்கங்களை விடுத்து உயர்ந்த நற்சிந்தனையுடன் வாழ்தல் வேண்டும். கேட்டையும் கெடுதலையும் பிறருக்கு நினைக்காது மகிழ்வுடன் வாழ்வோம். வாழ்வில் தென்றல் வீசும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.