பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
28. நாள்
ஆண்டிற்கு 365 நாள்கள் வருகின்றன. இந்நாள்கள் அனைத்தும் நல்ல நாள்களே ஆகும். நாள்களில் நல்ல நாள் என்பதோ, கெட்ட நாள் என்பதோ இல்லை. ஆனாலும் மக்களிடையே நாள்களைப் பற்றிய பல்வேறு விதமான நம்பிக்கைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சில நாள்களில் நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள். சில நாள்களில் செய்தால் நன்றாக முடியும் என்றும் நம்புகிறார்கள். நாள்களைப் பற்றிய பழமொழிகள் மக்களிடையே பல வழங்கப்பட்டு வருகின்றன. இப்பழமொழிகள் மக்களுக்குப் பண்பாட்டையும், வாழ்வில் நம்பிக்கையையும் உண்டாக்குபவையாக அமைந்துள்ளன.
நாளும் நல்லவனும்
மக்களிடையே நாள், நட்சத்திரம், நேரம், சகுனம் பார்க்கும் பண்பு தொன்று தொட்டு இருந்து வருகின்றது. எந்தச் செயலாக இருந்தாலும் நாளும், நேரமும் பார்த்துச் செய்வதென்பது மக்களின் வாழ்க்கையோடு ஊறிவிட்ட பண்பாகத் திகழ்கின்றது. நாள் பாராது நேரம் பாராது செய்யும் எந்தச் செயலும் கைகூடி வராது என்று மக்கள் கருதுகின்றனர்.
நல்ல நாள், நேரம் பார்த்துத் தொடங்குகின்ற செயல்கள் எதுவாக இருந்தாலும், நன்கு குறையின்றி முடிவுறும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் உள்ளக் கிடக்கையாகும்.இக்கருத்து மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது.மக்களின் இத்தகைய நம்பிக்கையை,
‘‘நாளு செய்யறத நல்லவன்கூடச் செய்ய மாட்டான்’’
என்ற பழமொழி விளக்குகிறது.
நல்ல நாளில் தொடங்கும் செயல்கள் நல்லவிதமாக முடியும். மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு நல்ல நாள் பார்க்கும் நிகழ்வு தொடங்குகிறது. போர் வெற்றியடைய வேண்டுமெனில் அமாவாசை நாளில் எதிர்ப்புறமாக ரோமம் வளர்ந்திருப்பவனை பலி கொடுத்தல் வேண்டும் என்று சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுக்கிறான். இதனை அறிந்த கண்ணன் பாண்டவர்களுக்கு உதவுவதற்காகத் துரியோதனனுக்கு முன்பே அமாவாசையைத் தோன்றச் செய்து களப்பலியாக அரவாணைப் பலியிட்டுப் பாண்டவர்களின் வெற்றிக்கு வழிகோலுகிறார்.
பாண்டவர்கள் வெற்றி பெறுகின்றனர்.நல்ல நாளில் எந்தச் செயலையும் தெடங்க வேண்டுமென்பதற்காகவும், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும் நம் முன்னோர்கள் மேற்கூறிய பழமொழியைக் கூறிப்போந்தனர்.