பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
29. ஓடுதல்
பழமொழிகளில் வழங்கப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளில் ஆளப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட பொருளில் வழங்கப்படும் சொல்லானது இடத்திற்கு ஏற்ப பொருள் மாறுபட்டு வழங்கப்படுகிறது. ஓடு என்பது வினைச் சொல்லாக இருக்கும் நிலையில் ஒரு பொருளும், பெயராக இருக்கும்போது ஒரு பொருளும் வழங்கப்படுகின்றது (ஓடு - வீட்டின் கூரைக்குப் பயன்படுவது, ஓடு - வேகமாக ஓடு). பழமொழிகளில் ஓடு என்ற வினைச் சொல்லே பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஓடு, ஓடி என்ற சொற்களை வைத்து வாழ்வியல் நெறிகளை நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
ஓடுதல் – விரட்டுதல்
ஒருவர் எதையாவது பார்த்துப் பயந்து ஓடுதல் கூடாது. அவ்வாறு பயந்து ஓடினார் என்றால் அவர் பயந்த பிரச்சனையானது மேலும் மேலும் அவரைத் துரத்துமே தவிர முடிவடையாது. பயம் மனிதனை முன்னேற விடாது முடக்கிவிடும். இதனை உணர்ந்து வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். அங்ஙனம் எதிர்கொள்பவரை எந்தவிதமான துன்பமும் வந்து நெருங்கிவிடாது. திரும்பி ஓடிவிடும். தமிழ்ப் பெரியார் வள்ளுவரும்,
‘‘இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாத வர்’’
என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
துன்பத்தைக் கண்டு துவண்டு பயந்து எவரொருவர் ஓடாது இருக்கின்றாரோ அவரைக் கண்டு துன்பம் பயந்து ஓடிவிடும் என்பதே வள்ளுவப் பெருந்தகையின் வாழ்வியல் நெறியாகும். இந்த நெறியை விளக்கும் வகையில்,
‘‘ஓடுறவனக் கண்டா வெரட்டுறவனுக்குத் தொக்காம்’’
என்ற பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வில் பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடுபவனை அவன் மேல் பிரச்சனையைச் சுமத்துபவன் துரத்திக் கொண்டே இருப்பான். அவனுக்குப் பிரச்சனையைக் கண்டு ஓடுபவனை விரட்டுவது எளிதாகும் (தொக்கு - வாடிக்கை). எதற்கெடுத்தாலும் அவனையே எதுவாக இருந்தாலும் குறைகூறிக் கொண்டே இருப்பான். எதிர்த்து நின்றால் விரட்டுபவன் ஓடி ஒளிந்து கொள்வான்.
தெருவில் போகும் போது நாய் ஒன்று நம்மை விரட்டி வருகின்றது. அங்ஙனம் விரட்டி வருகின்ற நாயைப் பார்த்து நாம் ஓடினால் அந்த நாயும் வேகமாக ஓடிவந்து நம்மைக் கடிக்க முயலும். ஆனால் ஓடுவதை நிறுத்திவிட்டு நாயை எதிர் கொள்ள நின்று விட்டால் நாய் பயந்து போய் நின்றுவிடும். துரத்தி வருவதை நிறுத்திவிட்டு எதிர்த்திசையில் ஓடத் தொடங்கும். இந்த நாயைப் போன்றதே வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளும். அதனால் எதுவாக இருந்தாலும் நம்மை நோக்கி வரும் துன்பத்தை மனத் துணிவுடன் எதிர் கொண்டு அதனைத் துரத்திவிட்டு வாழ்தல் வேண்டும் என்ற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அரிய பண்பாட்டு நெறியை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.